கரீமின் பிரியாணி

கரீமின் பிரியாணி

திருவல்லிக்கேணியின் நெரிசல் மிகுந்த பஜார் ரோட்டின் நடுவே, இருக்கிறதென்றே தெரியாமல் இருக்கும் அந்த சந்தின், 12-ஆம் நம்பர் ஓட்டு வீடுதான், இப்போது கரீம் பாயின் வீடு. நாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் இங்க வந்த குடும்பம் அவர்களுடையது. வயதோ இப்போது 55-ஐ நெருங்கி விட்டது. காதோர முடியும் நரைக்க தொடங்கிவிட்டன. கைகளும் கூட இப்போதெல்லாம் ரொம்பவே நடுங்குகிறது. ''கரீம் பாய் பண்ணாதான், அது பிரியாணி..'' என கல்யாணத்திற்கு வந்தவர்களில் யாரேனும் இதை கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். ''அட, ஒரு தேக்சாவை ஒத்த ஆளா தூக்கி ஏத்துவாப்ல..'' என பாய்மார்கள் பேசி கொள்வார்களாம். எல்லாம் சில.., இல்லை, பல வருடங்களுக்கு முன்னர். இப்போது அனைத்துமே பழைய பெருமைகளாக மட்டுமே நீடிக்கிறது. மீதமிருப்பது கரீம் பாயும், அவர் மனைவி ஹதியாவும்தான்.

கீழக்கரை மீரான் மரைக்காயரின் மகள்தான் ஹதியா. ஒரு கல்யாணத்திற்கு சமைக்க சென்ற போதுதான் கரீம் ஹதியாவை முதன்முதலில் பார்த்தது. பார்த்த கணத்தில் சில விஷயங்கள் மனதில் எவ்வித அனுமதியும் கேட்காமல் அதன்பாட்டுக்கு தோன்றிவிடும். அப்படிதான் அன்று கரீமுக்கும் தோன்றியது. 'ஹதியா.., அல்லா தனக்காக கொடுத்தனுப்பி இருக்கிற பரிசென்று'. இறைவன் அதை முடிவு செய்யாதிருப்பினும், அது உண்மைதான். ஹதியா கண்டிப்பாக கரீமுக்கு கிடைத்த பரிசுதான். ஹதியாவின் மையிட்ட கண்கள் கொடுத்த மயக்கம், கரீமை கீழக்கரையிலேயே இருக்க செய்துவிட்டது. ஒரு சிறு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து, கரீம் தனது காதலை தொடர்ந்தார். ஊரே கரீமின் பிரியாணியை பெருமையாக பேசியது. ஆனால், அதைவிட ஸ்பெஷலான ஒரு பிரியாணி ஹதியாவுக்கு போகும்., கரீமின் காதல் கடிதம் தாங்கிய டிபன் பாக்ஸில். ஹதியா கரீமின் பிரியாணியை விட, உடன் வரும் கடிதத்தையே பெரிதும் விரும்பினாள். இந்த கடித போக்குவரத்து, மீரான் மரைக்காயருக்கு தெரிய வர, அன்றிரவு சுமார் மூன்று மணி வாக்கில், கரீமின் தோள்களில் ஹதியா சாய்ந்தபடி, சென்னை பேருந்தில் பயணித்து கொண்டிருந்தனர் அவர்கள்.

வீட்டிற்கு வந்த போது கரீமின் அப்பா அப்துல்லா, இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ருத்திர தாண்டவம் ஆடினார். ஆனால், அது ஒன்றும் பெரிதாக நீடிக்கவில்லை. நாகப்பட்டினத்தில் இருக்கும் இமாம் ஒருவரை வைத்து பேசி, ஹதியா குடும்பத்துடன் மதிச்சயம் செய்யப்பட்டு, இருவருக்கும் நிக்கா நடக்க முடிவானது. அடுத்த ஒரு வாரத்திற்கு கரீம் கல்யாணத்தில் சாப்பிட்ட பிரியாணியை பற்றிதான் திருவல்லிக்கேனி சந்துகளில் பேச்சு. அடுத்தடுத்த வருடங்களில் அஸ்ரப், ஆமீஸ் என மகன்களும், அலியா என்ற மகளும் பிறக்க, இன்னொரு பக்கம் கரீமின் பிரியாணி வியாபாரம் பட்டையை கிளப்பி கொண்டிருந்தது. இதற்கிடையில் கரீமின் அப்பாவும், அம்மாவும் தவறிப் போனார்கள். அம்மா ஃபாத்திமா இறந்த கொஞ்ச நாளில் கரீமுக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்தது. 12-வது படித்து கொண்டிருந்த மூத்தவன் அஸ்ரப்புக்கு இரத்தக் குழாயில் புற்றுநோய் என்று சொன்னார்கள். கரீமும் ஹதியாவும் இடிந்து போன மசூதிகளாக உடைந்து போய் நின்றார்கள். ''இப்போதெல்லாம் 5 வயது குழந்தைக்கு கூட கேன்சர் வருவது சாதாரணமாகிவிட்டது'' என்று டாக்டர் சொன்னது, கரீமுக்கு சாதாரணமானதாக தெரியவில்லை. எல்லா மருத்துவர்களையும் போலவே, அவரும் ''குணப்படுத்த வாய்ப்பிருக்கு, முயற்சி செய்வோம்'' என்றார். அல்லாவின் மீது பாரத்தை போட்டு, கண்ணீருடன் அவர் சொல்லியதற்கு தலையாட்டுவதை தவிர கரீமுக்கு அப்போது வேறு தேர்வுகள் இருக்கவில்லை.

அடுத்த 2 வருடங்களும் ஹாஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாகவே இருந்தது அவர்களின் குடும்பத்திற்கு. ஏதேதோ டெஸ்ட் எடுக்க சொன்னார்கள். எவ்வளவோ ரசீது போட்டு கொடுத்தார்கள். வங்கி பணமும் தீர்ந்து போக, இருந்த நிலத்தில் ஒன்றை விற்று பார்த்தார்கள். ம்கும்.., போதவில்லை. ஹதியாவின் கழுத்து சங்கிலி வரை விற்று தீர்ந்த பின்னர், காப்பாற்ற முடியவில்லை என டாக்டர்கள் கைவிரித்தனர். அஸ்ரப் போன வருத்தத்திலேயே அடுத்த இரண்டு வருடங்களும் ஓடின. ''இறந்தவனை நினைத்து இருப்பவர்களை, விட்டுவிட கூடாது'' என ஹதியா சொன்னாள். அதே வருடத்தில் மீதமிருந்த ஒரு நிலத்தையும் விற்று, மகள் அலியாவுக்கு சிறப்பாக நிக்கா முடித்து வைத்தார் கரீம். இந்த முறை கரீம் வீட்டு கல்யாணத்து பிரியாணியை பற்றி யாரும் ஒரு வாரத்திற்கு பேசிக் கொள்ளவும் இல்லை. அடுத்த ஆண்டில், மகன் ஆமீஸ் சாயிஷா என்பவளை காதலித்து, நிக்கா முடித்த கோலத்தில்தான் வீட்டுக்கே வந்தான். இருந்த அந்த வீட்டையும் தனதாக்கி கொண்டு, பஜார் தெருவின் சந்தில் இருக்கும் அந்த ஓட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்தான். அவன் பங்குக்கு மாதம் இரண்டாயிரம், அவ்வளவுதான். தனது கடமையை செய்துவிட்டு, இறைவனுக்கு உண்மையாய் வாழ்வதாக, அவனுக்கு நினைப்பு. ஹதியா முன்பை போல கண்களுக்கு இப்போது மை வைப்பது இல்லை. கரீமின் பிரியாணியும் முன்பை போல சுவைப்பதில்லை. பஜார் ரோட்டை தாண்டியுள்ள, டாஸ்மாக் கடையே அவருக்கு பொழுதென ஆகிப்போனது. கரண்டியை பிடித்தாலே, இப்போதெல்லாம் கைகள் நடுங்குகிறது. போதாக்குறைக்கு, இதுவரை அமைதி காத்து கிடந்த எழவெடுத்த ஆஸ்துமாவும், இப்போது ஹதியாவுக்கு ஆட்டம் காட்டுகிறது.

அன்று மே மாத கோடைக்கு மாறாக, வானம் மந்தமாக மாறி மழைத்துறலை போட்டு கொண்டிருந்தது. ஹதியாவிடம் வந்த கரீம், ''பணம் இருந்தா கொடேன்..'' என கேட்க, குர்-ரானின் கீழ் இருந்த அந்த நூறு ரூபாயை ஹதியா கொடுத்தாள். சட்டென செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினார் கரீம். கண்களில் இருந்து காதோரத்திற்கு கண்ணீர் பயணிக்க, கரீம் செல்வதை புன்னகையுடன் பார்த்தபடி இருந்தாள் ஹதியா. கண்ணீரை துடைத்துக் கொண்டு மெல்ல கண்களை மூடி, படுக்கையில் சாய்ந்தாள். மழை லேசாக ஓய்ந்த அந்த மௌனத்தினூடே, கரீம் கொஞ்சம் குடித்த போதையுடன் வந்தார். ஹதியா அசைவற்று படுத்து கிடந்ததை கண்டார். அருகில் சென்று பார்த்தவருக்கு, அவள் அங்கிருந்து சென்றுவிட்டது புலப்பட தொடங்கியது. கரீமின் இமைகளை கிழித்து கொண்டு, கண்ணீர் ஹதியாவை நணைத்தது. அந்த அப்பாவி மனுஷன், அரை மணி நேரத்திற்கும் மேலாகவே, ஹதியாவை மடியில் கிடத்தி கதறி கொண்டிருந்தார்.

மகன் வீட்டுக்கு சொல்லி அனுப்பினால், குடும்பத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருப்பதாக தகவல். மகளை தொடர்பு கொள்ளவே முடியாதபாடு. இருக்கும் கொஞ்சம் பொருட்களை கொடுத்து, ஆட்களை பிடித்து, ஹதியாவை இடுகாட்டுக்கு இட்டு சென்றுவிட்டார். மேலும் புதைப்பவனுக்கு இருநூறும்.., கார்பரேஷனுக்கு முன்னூறும் கொடுத்தால்தான் வேலை ஆகும்.. என சொல்லிவிட, அந்த சாவை எண்ணி மனிதர் சுடுகாட்டிலேயே தேம்பி தேம்பி அழுதார். ''கொஞ்ச நேரத்துல பணத்தோட வாரேன்.. நம்புங்க'' என சொல்லி, ஹதியாவை மழைநீர் லேசாக மட்டுமே.! ஒழுகும் ஒரு தகரத்தின் கீழ் கிடத்திவிட்டு, பணத்துக்காக திக்குத்தெரியாமல் நடக்கலானார்.

அந்த நேரத்தில் ஜமா-அத் கட்சியில் இருக்கும் யூசுப் கண்களில் கரீம் பட, ''கரீம் பாய், ஒரு வேலை இருக்கு.., வர்றியளா..'' என அவன் கேட்ட போது, கரீமின் கண்கள் கலங்கியதில் ஆச்சர்யமேதும் இல்லைதான். சின்ன “அரசியல் கூட்டம், பிரியாணி செய்யனும், சுமாரா இருந்தாகூட போதும்தான், 500 ரூவா தர்றேன்.. என்று சொன்னான் யூசுப். ஹதியாவை மழைநீர் துளிகள் நனைத்து கொண்டிருக்க, கரீம் பிரியாணியை கிண்டி கொண்டிருந்தார். ஆனால், இம்முறை அவர் கைகள் நடுங்கவே இல்லை. பிரியாணியின் ருசியில் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மிரண்டு போனார்கள். பேசிய ஐந்நூறை மட்டும் வாங்கி கொண்டு, தூரல்களின் நடுவே ஓட்டம் பிடித்தார் கரீம். பணத்தை கட்டிவிட்டு, ஹதியாவை புதைக்கும் முன், கடைசியாக அவளை தன் இருகரங்களிலும் ஏந்தி, தழுதழுக்க அவர் கண்களில் முத்தம் வைத்து, அல்லா தனக்கு கொடுத்த பரிசை மணல் கொண்டு மூடினார்.

ஹதியா இல்லாத அந்த வாழ்க்கையும், ஓட்டு வீடும் கரீமுக்கு பெரும் வெறுமையை மட்டுமே கொடுத்தன. மனிதருக்கு இப்போது குடிப்பதில் கூட விருப்பம் வரவில்லை. இப்படியே ஒரு வாரம் கழிந்திருக்க, ஹதியாவின் சேலை வாசத்துடன் படுத்து கிடந்த கரீமை பார்க்க யூசுப் வந்தான். ''கரீம் அண்ணே, அன்னைக்கு கூட்டத்துல ஒரு பிரியாணி செஞ்சீயல்லே.., அது நம்ம தலைவர் ரஃபிக் பாய்க்கு ரொம்ப புடிச்சு போச்சு. அவரு மக நிக்காவுக்கு நீங்கதான் செய்யனும் சொல்லி, கூட்டி வர கார் அனுப்பிருக்காரு, வந்து பாரும்'' என அவன் அழைக்க, கரீம் வெளியில் வந்து பார்த்தார். எத்தனை கோடிகள் என சொல்ல முடியாது, ஆனால் பல கோடிகள் மதிப்பு என ஹதியா சொல்லியிருந்த, அந்த ஆடி கார் வாசலில் நின்று கொண்டிருந்தது. ''சரி, சரி.., வாரும் போலாம்...'' என கரீமை கையோடு அழைத்து சென்று காரில் ஏற்றினான் யூசுப். நடப்பது எல்லாம் அவருக்கு எதோ கற்பனை உலகம் போல இருந்தது. ''ஒரு நிமிஷம்..'' என சொல்லிவிட்டு, அந்த ஆடி காரின் கண்ணாடியை கீழே இறக்கினார். வாசலில் ஹதியா மையிட்ட கண்களுடன் அவரை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தாள். ''ஆம், நிஜமாகவே ஹதியா அல்லா கொடுத்தனுப்பிய பரிசுதான்..'' என கரீமின் கலங்கிய கண்களுடன், அந்த எத்தனை கோடி மதிப்பு என தெரியாத ஆடி கார் சென்று கொண்டிருந்தது.

எழுதியவர் : பாண்டியன் குவேரா (26-Jul-20, 8:56 pm)
சேர்த்தது : பாண்டியன் குவேரா
பார்வை : 179

மேலே