வினை விதைத்தவன்

பாண்டியன் எப்போதும் போல தனது மருந்து குடோனில் பிஸி ஆக இருந்தான்; எப்போதும் அவனது குடோனில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்; இப்போது தான் நம் நாட்டில் உணவே மருந்து என்பது போய் மருந்தே உணவு என்றாகிவிட்டதே; அப்புறம் என்ன? கூட்டத்திற்கும், லாபத்திற்கும் கேட்கவா வேண்டும் ? என்ன? பேருக்கேற்றார் போல பத்து பேரை வைத்து ஆளும் முதலாளி ஆனாலும் அவனுக்கு பேருக்கேற்ற குணம் குறைவு தான்; அவனது மருந்து குடோன் ஊரைவிட்டு தள்ளி இருந்தது; ஆனால் வீடோ ஊருக்குள் இருந்தது; அது அவனுக்கு வசதியாகவும் இருந்தது; சில நேரம் மருந்து லோடு வீட்டிலே வைத்துக்கொள்வான்; எல்லா ஸ்டேட் ல இருந்தும் மருந்தை வாங்கி கடைகளுக்கு விற்பது தான் இவன் வேலை; சமீப காலமாக மருந்து கலப்படம், காலாவதி மருந்துகளை விற்பது வளர்ந்து வருகிறது; அதில் பாண்டியனுக்கும் பங்கு உண்டு; இறை பக்தி குறையும் போது பாவம் செய்திடும் எண்ணங்கள் அதிகமாகும்; இதை தான் நமது தர்மம் சொல்கிறது;
பாண்டியன் மனைவி வள்ளி இவனுக்கு நேர் எதிர்; அன்பும் பண்பும் நிறைந்தவள்; பெயருக்கு கேற்ற முருக பக்தி நிறைந்தவள்; எப்போதும் அவர்களது குழந்தைகளுடன் நல்ல விதமாக பொழுதை கழிப்பாள்; படிப்பு அறிவு இல்லாவிடினும் குழந்தைகள் ருக்மணி, குணா மற்றும் கடைக்குட்டி ராமு என அவளது உலகமே அவர்களை சுற்றி தான்;
அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது, டியூஷன் அனுப்புவது பின்னர் வீட்டு வேலைகள் செய்வது என்று அவளை எப்போதும் பிஸி ஆகவே வைத்துக் கொள்வாள்; இவளுக்கு படிப்பு போராது என்பதில் பாண்டியன் அவளை கேலி செய்வான்; ஆனால் வள்ளியின் மாமியார் காமாட்சி அம்மாள் மிகுந்த தெய்வ பக்தி உடையவர்; எப்போதும் அவளை பாராட்டி தான் பேசுவார்; வள்ளிக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்திடுவார்; கிருஷ்ணா , ராமா என்று மாலை நேரங்களில் கோயிலுக்கு சென்றுவிடுவார்; இரை தேடும் போதே இறைவனையும் தேடணும் என்று பாண்டியனிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்; பக்தி என்பது நம்மை எல்லா துயரில் இருந்தும் காக்கும்; ஏன், பல நேரம் நம்மிடம் இருந்தே நம்மை காக்கும்; விதி வழியே மதி நம்மை தவறு செய்திட தூண்டும் போது இறை நாமம் மட்டுமே நமக்கு நல்வழி காட்டும் என்ற தீவிர நம்பிக்கை உடையவர்; இப்போதெல்லாம் காசு, காசு என பல வழிகளில் தன் மகன் போக்கு அவருக்கு பிடிப்பதில்லை; அன்றும் அப்படிதான் ஆரம்பித்தார்;
காமாட்சி அம்மா , " டேய் பாண்டியா இன்று சஷ்டி பூஜை கோயிலுக்கு சென்று வா";
பாண்டியன், " அம்மா, நீயும் உன் மருமகளும் தான் போறீங்களே ; அப்புறம் நான் வேறயா ? எனக்கு வேலை நிறைய இருக்கு; "
காமாட்சி அம்மா," அப்படி சொல்லாதேடா எத்தனை உழைத்தாலும், சேர்த்தாலும் யாரும் எதையும் போகும்போது எடுத்திட்டு போகமுடியாதுடா, மறந்துடாதே";
பாண்டியன்," எனக்கும் எல்லாம் தெரியும்; அம்மா, சாமி கும்பிடறவன் எல்லாம் கோடீஸ்வரன் இல்லை; நாத்தீகம் பேசுறவன் எல்லாம் நல்ல இல்லாமையும் இல்லை;"
காமாட்சி அம்மா," பேசுவடா, பேசுவ; ஒரு காலத்துல உங்க அப்பரும் இப்படி பேசிகிட்டு திரிஞ்சவரு தான்; ஆனால் சாகும் போது என்ன சொன்னாரு தெரியுமா? தாயீ , எம் மவன் பாண்டியனை என்ன போல வளர்த்துட்டேன்; அவனை இப்படியே விட்டுடாத; இறை பக்தி தந்த தைரியம் யால தான் நல்லபடி இருக்க முடியும் என்ற என் அப்பன் ஆத்தாளும் நல்லா வாழ்ந்து சந்தோசமா செத்து போனாங்க; எப்படியாவது அவனை மாத்திடுன்னு சொன்னாரு";
ருக்மணி," பாட்டி , அப்பாவை திட்டாதீங்க ; கோவிலுக்கு போகாட்டி விடுங்க ; கோவிலுக்கு போயே ஆகணுமா என்ன ?";

காமாட்சி அம்மா (பாட்டி) ," இறை நம்பிக்கை என்பது வானத்துல இருந்து விழற மழைத்துளி மாதிரி; மழை இல்லாட்டா நிலம் வறண்டு போவது மாதிரி இறை நம்பிக்கை இல்லாட்டா மனமும் வறண்டு போகும். வறண்ட நிலத்தில் எந்த நல்ல விதையும் விளைய முடியாது; நல்ல விஷயங்களை மனதுக்குள் போடணும்னா மனதும் வளமுடன் இருக்கணும்; இல்லாவிடில் வறண்ட மனதில் தேவையற்ற முட் செடிகள் தான் வளரும்;"

சரி வாங்க பாட்டி , நாம கோயிலுக்கு போகலாம் என்று குணாவும், ராமுவும் கிளம்பிவிட்டனர்; ருக்குவுக்கு காய்ச்சல் என்பதால் அவளும், தாயும் வீட்டிலே இருந்து விட்டார்கள்;

ராமு," பாட்டி, கோவிலை கட்டினது யாரு ? ";
பாட்டி," ராஜா காலத்துல ராஜாக்கள் காட்டினாங்க; ";
குணா ," நம்ம ஊருல மட்டும் எதுக்கு எங்க பார்த்தாலும் கோயில் கட்டி இருக்காங்க ?;
பாட்டி," கோவில் இல்லாத ஊருல குடி இருக்க வேண்டாம் என்று பழமொழி இருக்கு பா; கோவிலை சுத்தி பாரு; எத்தனை கடைகள் இருக்கு";
ராமு, " ஆமாம் பாட்டி; நிறைய கடைகள் இருக்கு; எனக்கு பிடிச்ச பொருளை வாங்கிக்கலாம்; "
பாட்டி, " குணா, உனக்கு புரியுதா? அந்த காலத்து ராஜாக்கள் சிந்தித்து மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கொடுக்கவும் , அதே நேரம் இறை நம்பிக்கையோடு மக்கள் சிந்தித்தால் அவர்களை தவறு செய்யாமல் தடுக்க முடியும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தான் இத்தனை பெரிய கோவில்களை கட்டி இருக்கிறார்கள்; "
கோவிலை தினமும் சுற்றினால் நமக்கு நல்ல உடல் பயிற்சியும் கூட; "
குணா, " அம்மா கூட சொன்னாங்க, தெய்வ நம்பிக்கையோடு படித்தால் பாடம் நன்கு படிக்க முடியும்; இந்த உலகினில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் நிச்சயம் இறை நம்பிக்கை கொண்டவர்கள் தானாம்; இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே பிறவற்றை உருவாக்க இயலுமாம்;"
ராமு, "கடவுள் கோயிலுக்குள் மட்டும் தான் இருப்பாரா, பாட்டி?";
பாட்டி , " கடவுள் இல்லாத இடமே இல்லை; நமக்குள்ளும், நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்குள்ளும் என எல்லா இடத்திலும் இருக்கிறார்; நாம் செய்யும் செயல்களில், நம் பேச்சில், நம் மூச்சில் என எங்கும் நிறைந்திருக்கிறார்; "
ராமு, " அவரை நாம எப்படி பார்க்கிறது ?";
பாட்டி ," நாம பார்க்க முடியாவிட்டாலும் உணர முடியும்; நீங்க ஒன்னாம் வகுப்பு படித்து முடித்து விட்டு தானே பெரிய கிளாஸ் போகமுடியும் ?";
குணா," பாஸ் பண்ணத்தான் அடுத்த கிளாஸ் போக முடியும்; "
பாட்டி," அது போல தான்; கோவிலுக்குள் இருக்கும் இறைவனை வழிபடுவது என்பது முதல் நிலை; அது தான் நல்ல அடித்தளம்; அதற்கு பிறகு படிப்படியாக முன்னேறி இறைவனையே நேரில் காண முடியும்; நமது முன்னோர்கள் அதை செய்திருக்கிறார்கள்; "
ராமு," அப்படியா ? அப்போ நாமளும் பார்க்கலாமா? ";
பாட்டி, " நிச்சயம் முடியும்; இப்போதைக்கு நல்ல புத்தி வேண்டும் னு கண்ணை மூடி சாமி கும்பிடுங்க;"
குணா, ராமு " சரி பாட்டி ";
-----
இன்று வெளியூர் போறதால இரவு நேரம் கழித்து வருவதாக பாண்டியன் கூறி இருந்தான்;
மாலையில் மீண்டும் ருக்குவுக்கு காய்ச்சல் அதிகமாக தொடங்கியது; வள்ளிக்கு என்ன செய்வது என்ற தெரியவில்லை;
எப்போதும் கை பக்குவம் தான் வள்ளி நம்புவாள்; கஷாயம் போட்டு கொடுத்தாள்; காய்ச்சல் குறையவில்லை;

பக்கத்துக்கு வீட்டு பங்கஜம் வள்ளி, வா நானும் வருகிறேன்; ஒரு எட்டு டாக்டர்கிட்ட காட்டி வரலாம் என சொன்னார்; டாக்டர் கிட்ட காட்டி மருந்து சீட்டு வாங்கி மருந்தை அந்த தெருவில் இருக்கும் சின்ன மருந்து கடையில் வாங்கி கொடுத்தாச்சு;
மருந்து கொடுத்து கொஞ்ச நேரத்தில் குழந்தையின் உடம்பில் சிகப்பு திட்டுகள் உருவாக ஆரம்பித்தன; என்ன செய்வது என்றே தெரியவில்லை; பாட்டி பூஜை அறையில் இறைவனின் நாமம் சொன்னவாறு உட்கார்ந்திருந்தார்; அதற்குள் பாண்டியன் வந்து விட்டான்; பாண்டியன் ருக்குவுக்கு என்ன ? என்று கண் கலங்கினான்;
வள்ளி நடந்ததை சொன்னாள்;
பாண்டியன் , "நான் வரும் வரை காத்திருக்க கூடாதா? என்ன மருந்து கொடுத்தீங்க ?";
வள்ளி, " குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது; அதான் நானும், பக்கத்து வீடு பங்கஜம் அக்காவும் நம்ம சியாமளா டாக்டர் கிட்ட காட்டி தான் மருந்து வாங்கி கொடுத்தோம்; " என அழுதாள்;
பாண்டியன்," என்ன மருந்து ? எங்க வாங்கினீங்க ?";
வள்ளி, " (மருந்து சீட்டை காட்டினாள்) முனை கடைல அதான் தியாகு மெடிக்கல்ஸ் ல தான் வாங்கினேன்;"
பாண்டியன்," (ஐயோ, மருந்து காலாவதி ஆனதாக இருக்குமே அங்கே ; திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்தான்) எதுவும் பேசவில்லை; குழந்தையை எடுத்துக் கொண்டு நகரின் பெரிய ஹாஸ்பிடல் க்கு ஓடினான்;"
(போகிற வழியில் வானுயர்ந்த கோபுரம் கண்டான்; தன்னை அறியாமல் கை கூப்பினான் கண்ணீருடன்; )
----------
நான்கு நாட்கள் கடந்தது; மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ருக்மணி வீடு வந்து சேர்ந்தாள்; ஒரு வாரத்தில் வீடு ஒரு ஆட்டம் கண்டு விட்டது;
பாண்டியன் யாரிடமும் பேசவில்லை; ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தான்; யார் யாரோ வந்தார்கள்; அவர்களிடம் கறாராக பேசி அனுப்பி விட்டான்;
தாயின் காலடியில் வந்து அமர்ந்தான்; குழந்தைகள் தூங்கி விட்டார்கள்;
பாண்டியன்,"அம்மா, என்னை மன்னிச்சிடுங்க; நான் யாருக்கு தெரிய போகுதுன்னு செய்த ஒரு தவறை இறைவன் எங்கும் நிறைந்தவன் கண்டு கொண்டு என்னை திருத்தி விட்டான் அம்மா; "
காமாட்சி அம்மா," நீ என்னடா தப்பு செய்த ? " என்றார்;
பாண்டியன்," அம்மா, நீங்க என்னைக்கும் சொல்வீங்களே இறை நம்பிக்கையும் இறை உணர்வும் தான் நம்மை தவறான வழியிலிருந்து காக்கும் என்று; அது நிஜம் தான் அம்மா";
காமாட்சி அம்மா," உனக்கும் கடவுள் பாடம் சொன்னாரா ?; நல்லது ";
பாண்டியன்," ஆமாம் அம்மா, இந்த ஆறு மாதமாக பல ஜோலியா வெளிய போனேனே; அது எதுக்கு தெரியுமா ? " காலாவதியான மருந்துகளை வேற தேதி ஒட்டி வாங்கி கடைகளுக்கு சப்ளை பன்ற ஆளுங்களை பார்க்க தான் போனேன்; பணம் சம்பாதிக்கும் பேராசை என் கண்ணையும் மறச்சிடுச்சி; "

காமாட்சி அம்மா," என்னடா சொல்ற ? , உன்னை கேள்வி கேட்கும் ஆட்கள் இல்லைன்ற தைரியமா ?";
பாண்டியன்," அம்மா, கொஞ்ச நாள் முந்தி வரை அப்படி தான் வாழ்ந்தேன்; எப்போ கடவுள் ருக்மணி மூலம் எனக்கு பாடம் சொல்லி கொடுத்தாரோ அப்பவே என்னை கேள்வி கேட்க என்னை படைத்தவன் இருக்கான் என உணர்ந்திட்டேன்; ஆமாம் அம்மா;
அந்த மாதிரி காலாவதியான மருந்து நம்ம வீதியில் இருக்கும் தியாகு மெடிக்கல்ஸ் ளையும் சப்ளை ஆகுது; அன்னைக்கு ருக்குக்கு கொடுத்த மருந்தும் அது தான்; அதான் குழந்தயை ரொம்ப பாதிச்சிடுச்சி; நீங்க எல்லோரும் செய்த புண்ணியம் தான் நம்ம குழந்தை நல்லபடி வீட்டுக்கு வந்துட்டாள்;
காமாட்சி அம்மா," டேய், என்னென்னவோ சொல்றியே ? இதெல்லாம் என்னடா ? என்னடா நடக்குது இங்க? ஏன்டா காசு ,காசு ன்னு பேயா அலையறீங்க ? உங்க குழந்தைகளுக்கு காச மட்டும் சேர்த்து வைக்காதீங்கடா ; நல்ல மனுஷங்களையும், நல்ல புண்ணியத்தையும் சேர்த்து வையுங்கோ ; உங்களுக்கு பிறகும் அந்த புண்ணியம் தான் ஏழேழு தலைமுறைகளாக அவங்களை காக்கும்;

பாண்டியன்," ஆமாம் அம்மா; வினை விதைத்தவன் வினையை அறுத்தே ஆக வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்; ஆஸ்பிடல் போகும் போது என் குழந்தை ருக்மணியை காப்பாற்று இறைவா இனி எப்போதும் நல்ல வழியில் நடப்பேன் என்று இறைவனுக்கு வாக்கு கொடுத்தேன் அம்மா; உங்களின் அறிவுரைகளையும் கேட்டு நடக்கலை அதனால என்னை மன்னித்தேன்னு சொல்லுங்க அம்மா", என்றான்;
காமாட்சி ," டேய், எப்போ நீ உன் தவறை உணர்ந்து திருந்திடாயோ அப்பவே இறைவன் உன்னை மன்னிக்கிறார்; அதன் பின் நான் என்னடா ?";
இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த வள்ளி பூஜை அறையில் உள்ள முருகனிடம் சென்று சந்தோசமாய் நன்றி சொன்னாள்; முருகா, எனது கணவர் தவறான பாதையில் செல்கிறார்; அவரை சரி பண்ணிக்கொடு ன்னு கேட்டதற்கு இப்போது தான் அருள் செய்துள்ளாய்; உன் மகிமையே மகிமை என சந்தோசதில் திளைத்தாள்;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (28-Jul-20, 2:48 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : vinai vithaitthavan
பார்வை : 648

மேலே