இக்கரைக்கு அக்கரை

காட்சி 1

என்ன மாமா சௌக்கியமா? இது என் மருமான் ரமேஷ்

சௌக்கியத்துக்கு என்னடா குறைச்சல்?நாளொரு வலியும் பொழுதொரு கிலியுமா பொழுது போயிண்டுஇருக்கு.

ஏன் மாமா கஷ்டப் படறேள்?அத்தையும் நீங்களும் பேசாம கிரீன் கார்டு வாங்கிண்டு வாசு கிட்டே ஆறு மாசமும்,புவனா கிட்டே ஆறு மாசமும் அமெரிக்காவிலே போய் இருக்க வேண்டியதுதானே.

சுடுகாடு போற வயசுலே எங்களுக்கு எதுக்குடா கிரீன் காடு?.

அந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க அத்தே. உங்களுக்கு என்ன அவ்வளவு வயசாயிடுத்து? உங்களுக்கு 69. மாமாவுக்கு 75 தானே.

அது கிடக்கட்டும்டா. உன் அத்தைக்கு அந்த ஊர் குளிர்சேராது. எனக்கு அந்த ஊரே சேராது. அது என்னடா ஊரு? அதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. ஒரு வேட்டி பனியனோடே நிம்மதியா இருக்க முடியுமா? எப்பப் பாத்தாலும் பேண்ட், சட்டை, அதுக்குமேலே ஸ்வெட்டர், அதுக்கு மேலே ஒரு ஜாக்கெட் இப்படி ஏழெட்டு லேயர் துணிகளைப் போட்டுண்டு கண்ணாடிக்கு முன்னடி போய் நின்னா நமக்கே நம்மைப் பாத்தா பயமாயிடும்.
இவ அங்கே ஜீன்ஸ், சட்டை அதுக்குமேலே கோட்டு அதுக்கு மேலே ஒரு ஸ்கார்ஃப் கழுத்தைச்சுத்தி, தலைக்கு மஃப்ளர், இத்தனையும் பத்தாதுன்னு உடம்பு பூராவையும் போர்த்தினபடி ஒரு காஷ்மீர் சால்வை போட்டுண்டு இருப்பா. இந்த அலங்கோலத்துலே அவளைப் பாத்தா எப்பேர்ப் பட்ட பயப்படாதவனும் நடுங்கிப் போயிடுவான். மகா அவஸ்தை.
அந்த ஊரும் அந்த வெதரும் அய்யய்ய. ரோடுலே ஒரு மனுஷ நடமாட்டம் உண்டா? ஒரு கலகலப்பு உண்டா? அடிச்சிப் போட்டா மாதிரி என்னடா ஊரு அது? ரோடுலே கார்கள்தான் சதாசர்வ காலமும் சர் புர்ருன்னு போயிண்டு இருக்குமே தவிர வேறே மனுஷா யாரையும் பாக்க முடியாது. அப்படி யாராவது கண்ணுலே பட்டா, அது நம்ம ஊரிலே இருந்து நம்மாட்டம் வந்து மாட்டிண்ட ஜன்மங்களா இருக்கும். இல்லே அந்த ஊர் பிச்சைக்காரனா இருக்கும். நாமா எங்கேயாவது வெளியிலே போக முடியுமா? அவாளுக்கு வீக் என்ட் வர வரையிலும் நாம எங்கேயும் நகர முடியாது. அதெல்லாம் ஒரு லைஃபா?

சரி நீங்க என்ன தான் பண்றதாக உத்தேசம்?

நாங்க ரெண்டு பேரும் இருக்கிற வரையிலும் இப்படியே சமாளிச்சிக்கிறோம். அப்புறம் பகவான் விட்ட வழி.

காட்சி 2

(உள்ளேயிருந்து வந்தபடி அத்தை)

ஏண்டா ரமேஷ், என்னடா ஆளையே ரொம்ப நாளாக்காணோம்?

சிங்கப்பூர் போயிட்டு நேத்து தான் வரேன் அத்தை
.
அம்மா, அப்பா எல்லாம் சௌக்கியமா?

சௌக்கியம்தான்….ஆமாம். நீங்க ரெண்டு பேரும் தனியா இந்த வீட்டிலே இருக்கிறது கஷ்டமா இல்லே.

கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்றது? நாள் பூராவும் இவருக்கு அலைச்சல் தான். நேத்து சாக்கடை அடைச்சினுடுத்து. இவர் அங்கே போய், இங்கே போய் கார்ப்ப ரேஷன்காரா கிட்டே கெஞ்சிக்கூத்தாடி ஆட்களை அழைச்சிண்டு வந்து தள்ள வேண்டியதைத் தள்ளி, எல்லாம் சரி பண்றதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடுத்து.
முந்தா நாளானா குழாய்லே தண்ணி வரலை.

நாலு நாளைக்கு முன்னாடி கரண்ட் கட்டாயிடுத்து. என்னன்னே தெரியல்லே.

கரண்ட்பில் எல்லாம் கரெக்டாத்தான் கட்டிண்டு வரோம். இப்படி தினமும் ஏதாவது ப்ராப்ளம் இருந்துண்டே தான் இருக்கு. போன வாரம் பெஞ்ச மழையிலே வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுத்து. எவ்வளவு மழை பெஞ்சாலும் குழாயிலே வராத தண்ணி, தூறல் பேட்டாக்கூட வீட்டுக்குள்ளே வந்துடறது.

அதுதான் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்தா சிரமம்தான். அதுவும் தனி வீடுன்னா இன்னும் கஷ்டம். ஸேஃப்டி வேறே ப்ராப்ளம்.

அடுத்த தெருவிலே தனியா இருந்த ஒரு தாத்தாவையும் பாட்டியையும் அடிச்சிப் போட்டுட்டு, பாட்டி போட்டிருந்த நகைகளை யெல்லாம் பிடுங்கிண்டு, பீரோவிலே இருந்த நகை, பணம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிண்டு போயிட்டான் ஒரு கடன்காரன். நானும் இவரண்டை சொல்லிண்டுதான் இருக்கேன். ஸேஃப்டி பத்தாதுன்னு. இவரானா காதுலேயை போட்டுக்க மாட்டேங்கறார்.

எனக்குக் காது கேக்காதுங்கறதை ஒரு நாளைக்கு நாலு தரமாவது சொல்லிக்காட்டாட்டா அவளுக்குப் பொழுதே போகாது.

நீங்க தனியா இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லை மாமா.

அதனாலேதான் எங்களை ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம்லே சேத்துடுடான்னு வாசு கிட்டே சொன்னேன். அவனானா அந்தப் பேச்சே பேசப் படாதுங்கறான் என்றேன் நான்.

காட்சி 3

நான் சொன்னேன் இல்லியா, வாசு இன்னிக்கிப் பேசுவான்னு.

அவன் இத்தனை நாள் என்ன ஊமையாவா இருந்தான்?

அதில்லேன்னா. அவன் இன்னிக்கு ஃபோன்லே பேசுவான்னு சொன்னேனே. அதே மாதிரி பேசினானா இல்லியா?

அதுக்கு இப்ப என்னங்கறே?

நாம தனியா இருக்கிறது அவனுக்குப் பிடிக்கலை. எங்களோடே வந்து இருந்தா என்னன்னு கேக்கறான்.

அதுக்குத்தான் நெறைய தரம் நாம பதில் சொல்லிட்டோமே.

நீங்க தனி வீட்டிலே இருக்கறதுக்குப் பதிலா ஃப்ளாட்லே இருந்தாலாவது ஸேஃப்டி இருக்கும்.

அவன் சொல்றமாதிரி நல்ல இடத்துலே ஒரு ஃப்ளாட் வாங்கிண்டு போயிட்டா நமக்கும் சௌகரியமா இருக்கும். அவனுக்கும் நம்மைப் பத்தி பயம் இருக்காது.

தண்ணிக்குழாய் ரிப்பேர், சாக்கடைக்குழாய் அடச்சினுடுத்து, பம்ப் வேலை செய்யல்லே, கரண்ட் கட் ஆயிடுத்து அப்படி இப்பிடின்னு விடிஞ்செழுந்தா பிரச்சினைக்கு மேலே பிரச்சினை. அதே நாம ஃப்ளாட்டுக்குப் போயிட்டோம்னா அந்தத் தலைவலியெல்லாம் நமக்கு இருக்காது. உங்களுக்கும் இந்த வயசுலே அனாவசிய அலைச்சல் மிச்சம்.

அதுவும் சரிதான். ஆனா இந்தக் காலத்துலே ஒரு வீட்டைக் கட்டிக் கூட முடிச்சிடலாம். வீடு மாத்தறதுங்கறது அவ்வளவு சிரமமான காரியம்.

அதுலே என்ன அவ்வளவு சிரமம் இருக்கு?

நம்மளோட அம்பது வருஷக் குப்பையை இடப் பெயர்ச்சி செய்யறதுன்னா சும்மாவா?அட்ரஸ் மாத்தணும். கேஸ் மாத்தணும். ரேஷன் கார்டு மாத்தணும். பாஸ்போர்ட்லே அட்ரஸை மாத்தணும். வோடர் ID யிலே, ஆதார் கார்டுலே இப்படி எல்லாத்துலேயும் அட்ரஸ் மாத்தணும்.

நிறுத்துங்கோ. விட்டா நாள் பூராவும் அதை மாத்தணும் இதை மாத்தணும்னு சொல்லிண்டே இருப்பேள். நீங்களா மூட்டையை முதுகுலே சுமந்து மாத்தப் போறேள்?வீடு மாத்தறதுக்கு நம்ம பையன் வந்துடுவான். இப்பப் பாருங்கோ எல்லாத்துக்கும் நீங்கதானே தனியா அல்லாடறேள். யாராவது உங்களுக்கு ஹெல்ப் உண்டா? ஃப்ளாட்டுன்னு போயிட்டா நம்மைச் சுத்தி ஏகப்பட்ட பேர் இருப்பா. அதுலே ஒருத்தர்கூடவா நமக்கு ஹெல்ப் பண்ணாம போயிடுவா?

புது இடம். புது மனுஷா. எப்படி இருப்பாளோ என்னவோ? யாருக்குத் தெரியும்?உடம்பு முடியல்லேன்னா புது டாக்டரைத் தேடிண்டு போணும்.

இந்தக் காலத்துலே தடுக்கி விழுந்தா டாக்டர்தான்.

அதுக்காக நான் தடுக்கி விழணுங்கிறயா?

இந்தப் பேச்சுக்கெல்லாம் குறைச்சலேயில்லை. எல்லாம் அவன் பாத்துப்பான்.

அவன்னா யாரு?ஆண்டவனைச்சொல்றியா?

ஆண்டவனைச் சொல்லல்லே. வாசுவைத்தான் சொல்றேன்.

புவனாவும் அந்த சமயத்துலே வந்தா நன்னா இருக்கும்.

அவளுக்குத்தான் ஆபரேஷன் இருக்கே. அப்படி இருக்க எப்படி வருவா?

அதுவும் சரிதான். எனக்குத் தெரிஞ்சி நாலஞ்சு பேர் சொந்த வீட்டை வித்துட்டு இங்கேயே பக்கத்துலே ஃப்ளாட் வாங்கிண்டு சௌகரியமா இருக்கா.

இத்தனை நேரமும் உங்க வாயிலே கொழுக்கட்டையா இருந்தது? இதை அப்பவே சொல்ல வேண்டியதுதானே. அதனாலே தான் சொல்றேன். நாமும் பேசாம வீட்டை வித்துட்டு ஒரு ஃப்ளாட் வாங்கிண்டு போயிடுவோம்னு.

சரி. நானும் வாசு கிட்டே இதைப் பத்தி பேசறேன்.

காட்சி 4

அப்பாடா வாசு இந்த ஃப்ளாட்டைப் பாத்து அதை விலை பேசி முடிச்சி பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணி ஒருவிதமா நம்மளையும் நம்ம சாமான்களையும் குண்டுக் கட்டா தூக்கிக்கொண்டு வந்து போட்டானோ நாம தப்பிச்சோமோ.

மொத்தம் இங்கே 48 ஃப்ளாட் இருக்காம். அதுலே 45 ஃப்ளாட்லே ஆட்கள் குடி வந்துட்டாளாம்.

அதுக்குள்ளே அதையெல்லாம் விசாரிச்சித் தெரிஞ்சுனிட்டயா நீ?

ஒரு அஞ்சாறு மாமிகளைக்கூட ஃப்ரெண்ட் புடிச்சுட்டேன்.ரொம்ப நல்ல மாதிரி.
இங்கே அசோசியேஷன் இருக்கு. எல்லாத்தையும் பாத்துப்பா. அங்கே மாதிரி தண்ணி வரலை, கரண்ட் இல்லேன்னா நாம ஓட வேண்டியதில்லை. எதுவா இருந்தாலும் அசோ சியேஷன் பாத்துக்கும் . நாம இனிமே ஜாஸ்தி அலைய வேண்டியதில்லை

நாம இருக்கிறது நாலாவது மாடி. நல்ல வெளிச்சம். நல்ல காத்து. லிஃப்ட் இருக்கு. அது தவிர பவர் பேக் அப் இருக்கு. லிஃப்டுக்குப் பக்கத்துலேயே நம்ம ஃப்ளாட். அனாவசிய நடையெல்லாம் கிடையாது.
( சற்று நேரம் கழித்து)

ஏன்னா? திடீர்னு லைட் போயிடுத்தே.

பவர் பேக் அப் வொர்க் பண்ணலையா? சரி. கீழே போய் அசோசியேஷனைக் கேட்டுட்டுவரேன்.
கரண்ட் இல்லே. பவர் பேக் அப்பும் என்ன ஆச்சுன்னு தெரியல்லே. லிஃப்டும் வேலை செய்யாது. படி இறங்கிக் கீழே போகணுமா? போறேன்.

(சற்று நேரம் கழித்து)

என்ன ? கீழே இறங்கிப் போயிட்டு வந்தேளே என்ன ஆச்சு?

இன்னும் அசோசியேஷனே ஃபார்ம் ஆகலையாம். இப்ப பில்டர்ஸைச் சேர்ந்தவாதான் பாத்துண்டு இருக்காளாம்.
எலக்ட்ரீஷியனுக்குச் சொல்லி இருக்காளாம். பவர் பேக் அப் வேலை செய்ய டீஸல் இல்லையாம். கொஞ்ச நேரத்துலே சரி பண்ணிடுவாளாம். அசோசியேஷன் வர வரையிலும் கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்கன்னு சொன்னார்.

கொஞ்ச நாள்தானே. சமாளிச்சுடலாம்

பேப்பர்காரன் ஒருத்தனைப்பிடிக்கணும்.

பேப்பர் கெடக்கு. அதுக்கு முன்னாலே பாலுக்கு ஏற்பாடு செய்யணும். நல்ல வேலைக்காரியா பாத்து அமர்த்திக்கணும்.

(ரமேஷ் வருகிறான்)

அடேடே ரமேஷா? வாடா. எப்படா வந்தே?

ஏண்டி, இப்ப அவன் உள்ளே நுழையறதை நீ பாத்துண்டேதானே இருந்தே. அப்புறம் என்ன கேள்வி எப்ப வந்தேன்னு?

நான் ஊர்லேருந்து எப்ப வந்தேன்னு அத்தை கேக்கறா மாமா.

ஓ!அதுக்கு அப்படியொரு அர்த்தம் இருக்கோ?

மாமா, புது ஃப்ளாட் எப்பிடி இருக்கு?

நீயே பாரேன் எப்படி இருக்குன்னு.

நல்ல வெளிச்சமா காத்தோட்டமா இருக்கு.

என்ன தான் இருந்தாலும் தனி வீடு மாதிரி ஆகாது. எலிவளையானாலும் தனிவளை.

மாமா இப்ப எல்லாம் எலிகளேகூட தனிவளைக்குள்ளே ஃப்ளாட் போட்டுண்டுதான் இருக்கு.

இங்கே வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தவர் மாதிரி இருக்கார் இவர்.

அதெல்லாம் ஒண்ணுமில்லே. எல்லாம் புதுசா இருக்கா? அதான் ஒரு மாதிரி இருக்கு.

போகப்போக எல்லாம் சரியாயிடும் மாமா.

அந்த வீட்டிலே இவருக்கு அலைச்சலான அலைச்சல்.

இங்கே உங்க ரெண்டு பேருக்குமே சிரமம் இருக்காது .நிம்மதியா இருக்கலாம்.

நானும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.

தண்ணியெல்லாம் தாராளமா வரதோ இல்லியோ?

இதுவரையிலும் பேஷா வந்துண்டிருக்கு. ஒரு பிரச்சினையுமில்லே.

இன்னும் அசோசியேஷன் தான் ஃபார்ம் ஆகல்லை. அடுத்த வாரம் மீட்டிங் போட்டிருக்கா அது பத்தி டிஸைட் பண்றதுக்கு.

அதுக்கப்புறம் உங்களுக்குப் பிரச்சினையே இருக்காது. சரி. ரெண்டு பேரும் உடம்பைப் பாத்துக்குங்கோ. நீங்க இருக்கிறவா எல்லாரோடையும் நல்லா பழகி ஃப்ரெண்ட் புடிச்சி வச்சிக்குங்கோ. ரொம்ப உபயோகமா இருக்கும். சரி. நான் போயிட்டு வரேன்.

சரிடா.

(“௦ரமேஷ் போகிறான்)

காட்சி 5

எனக்கு நிறைய பேர் பழக்கம் ஆயிட்டா. எல்லாரும் வயசுலே நம்மளைவிடசின்னவாதான்.
பசங்க எல்லாம் ஸ்கூல்லே படிக்கிறா. நாலஞ்சு பேர் ஆத்துலே குழந்தைங்க LKGஇல்லே UKG படிச்சிண்டு இருக்கா. குழந்தைகளெல்லாம் ரொம்ப சமத்தா இருக்கா

இருக்கட்டும். இருக்கட்டும். காத்தாலே மீட்டிங்குக்குப் போனேனில்லியா அப்போ...

மாமி ( ஒரு குரல் கேட்கிறது)
யாருன்னு போய்ப்பாரு

யாரது?

வாம்மா உள்ளே. அது உன் பையனா?

ஆமாம் மாமி. second standard படிக்கிறான் கான்வென்ட்லே.

என்னடா அம்பி உன் பேரு என்ன?

Englishல கேளுங்கோ. அப்பதான் பதில் சொல்வான்.

ஏன்? தமிழ் தெரியாதா அவனுக்கு?

தெரியும். ஆனா தமிழ்ல பேசக்கூடாதுன்னு அவங்க ஸ்கூல்லே ரொம்ப கண்டிப்பு.

என்ன வீட்டிலே கூடவா தமிழிலே பேசக்கூடாது. ரொம்ப அனியாயமா இருக்கே. எங்க பேரன் பேத்திகளெல்லாம் அமெரிக்காவிலே இருக்கா. அவாளும் இப்படித்தான் தமிழ்ல பேசறதேயில்லை. நான் தமிழ்ல தான் அவாளோடே பேசுவேன். அவா ஓரளவு புரிஞ்சிப்பா. ஆனா அவா English தான் பேசுவா. அவா பேசற இங்கிலீஷ் எனக்கு மட்டும் என்ன, இவருக்கும் புரியாது. அவா பேசறது மாத்திரமில்லை. அங்கே யார் பேசற இங்கிலீஷும் இவருக்குப் புரியறதே இல்லை.
(சந்தடி சாக்குலே என்னைக் காலை வாரறாளே)

டேய், டேய், அம்பி டிவி ஸ்டாண்டை ஆட்டாதேடா. அது விழுந்துடப்ப போறது. உந்தலையிலே விழுந்ததோ உன் தலை ரெண்டாயிடும்.
(அவன் தலை ரெண்டானா என்ன, மூணு ஆனா என்ன, நம்மாத்து TV
போயிடுமேங்கற கவலையைக் காணோம்)

டேய் ,டேய் , அவ்வளவு வேகமா ஆட்டாதேடா. Don't shake it so fast
(ஆட்டாதேடான்னு சொல்லக்காணோம். வேகமா ஆட்டாதேயாம் வேகமா ஆட்டாதே. இவாளுக்கு ஒரு இங்கிதம் வேணாம். அதுவும் Englishலே சொன்னாத்தான் அவன் கேப்பானா?)
(மேலும் அரை மணி நேரம் பேசிவிட்டு பையனைக்கூப்பிட்டுக் கொண்டு அவள் செல்கிறாள். அதற்குள் அவள் பையன் அடித்த லூட்டி சொல்லி மாளாது)

கதவை மூடு. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா அவன் அடிச்ச லூட்டியிலே வீடே ரெண்டாயிருக்கும்.

குழந்தைகள்னா அப்படித்தான் இருப்பா.

ஆமாம். நீ தான் மெச்சிக்கணும். சரி. நான் சொல்ல வந்ததை மறந்துட்டேனே.

அந்த மீட்டிங்க்லே என்ன ஆச்சு?

அங்கே எல்லாரும் சின்னப் பசங்க தான். 30 லேயிருந்து 50 க்குள்ளே தான் இருக்கும் அத்தனை பேருக்கும். அவா என்னைப் பாத்து நீங்க தான் சீனியர். அதனாலே நீங்க தான் அசோசியேஷன் பொறுப்பையெல்லாம் ஏத்துக்கணும். நாங்க அத்தனை பேரும் வேலைக்குப் போறவா. நீங்களோ ரிடையராய் ஃப் ரீயா இருக்கேள்- அதனாலே நீங்கதான் நம்ம அசோசியேஷனுக்கு செக்ரடரியா இருக்கணும்னுட்டா. நான் எவ்வளவோ ப்ரொடஸ்ட் பண்ணிப் பாத்தேன். யாரும் கேக்கற பாடாயில்லே. வேணும்னா உங்களுக்கு ஒரு ஃபுல் டைம் அஸிஸ்டண்ட் அப்பாயிண்ட் பண்ணிடலாம்னு சொல்லி என்னைசெக்ரடரி ஆக்கிட்டா.

அசோசியேஷன் செக்ரடரிங்கறது பெருமையான விஷயம். நம்ம ரேவதி ஃப்ளாட்லேதானே இருக்கா. அவ ஹஸ்பண்ட் அந்த காம்ப்ளக்ஸோட செக்ரடரியாம். எவ்வளவு பெருமையாச் சொன்னா தெரியுமா? தன்னோட எல்லா வேலைக்கும் காம்ப்ளக்ஸ்ல இருக்கிற வேலைக்காரா அத்தனை பேரையும் use பண்ணிக்கிறாளாம். அதனாலே நீங்க செக்ரடரி ஆறதுலே எனக்கு சந்தோஷம்தான்.

வர மாசம் ஒண்ணாந்தேதியிலே இருந்து நான் சார்ஜ் எடுத்துக்கணுமாம்.

அது ஏப்ரல் 1ந் தேதி. வேணாம்.

நான் நல்ல நாள் பாத்து சொல்றேன். அப்ப எடுத்துக்குங்கோ. நான் இன்னிக்கு சாயந்திரமே ஸ்வாமிக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு ஹனுமாருக்கு ஒரு வட மாலை சாத்திடறதா வேண்டிண்டு வந்துடறேன்.

நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே இருக்கிற ஹனுமாருக்கு வேண்டாம். ராயப்பேட்டை
ஹை ரோடு ஹனுமாருக்கு வேண்டிக்கோ.

ஏன்?

இந்த ஹனுமார் கோவில்லே வடை ரொம்ப சுமார் தான். அதே ராயப்பட்டை ஹனுமார் கோவில்லே வடை எக்ஸலண்டா இருக்கும்.

காட்சி 6

(கொஞ்ச நாள் கழித்து)
என்ன? பொண்களும் குழந்தைகளும் நம்மாத்துக்கு அடிக்கடி வந்து போயிண்டு இருக்கா?

அதுவா. இங்க இருக்கிற பொண்கள் அத்தனை பேரும் வேலையிலே இருக்கிறவா. சில பேருக்குக் கைக்குழந்தைகள் இருக்கு. LKG,UKG படிக்கிற குழந்தைகளுக்கு அரை நாள்தான் ஸ்கூலாம். அதனாலே நேத்து சாயங்காலம் பஜனையின் போது எல்லாரும் குழந்தைங்களை என்னமோ கிரெஷ்ஷாமே அதுலவிடறதைப் பத்தி பேசிண்டுருந்தா.

ஏண்டி? இது தான் பஜனை பண்ணற லக்ஷணமா?

ஆமாம். பஜனைன்னா பஜனையேவா பண்ணிண்டு இருக்க முடியும்? கிடைக்கிற நேரத்துலே கொஞ்சம் அதை இதையெல்லாம் பேசாம இருக்கமுடியுமா?

பேசற நேரத்துலே கொஞ்சம் பஜனையும் பண்ணுவேள்னு சொல்லு.

சரி.விஷயத்தைக் கேளுங்கோ. க்ரெஷ் எல்லாம் இந்த காலத்துலே நம்பறதுக்கில்லே.

ஆமாமாம். Child abuse எல்லாம் நடக்கிறது.

அதான் அவாளும் சொன்னா. அதனாலே இங்கேயே யாராவது பொறுப்பா இருந்து குழந்தைகளைப் பாத்துண்டா நன்னா இருக்கும்னா. “ஏன் மாமி? நீங்க வீட்டிலே சும்மாதானே இருக்கேள்.. குழந்தையை நீங்க பாத்துக்க முடியுமா” ன்னு கேட்டா.
நானும் சும்மாதானே இருக்கோம். குழந்தைகளைப் பாத்துண்டா கலகலன்னு நன்னா பொழுது போகுமேன்னு சரின்னுட்டேன்.

அப்புறம் அதுவே உனக்கு ஃபுல் டைம் வேலை ஆயிடப் போறதடி

அதெல்லாம் கவலைப் படாதீங்கோ. நான் சமாளிச்சிப்பேன். நீங்க வேறே வீட்டிலேயே இருக்கேள்.

நான் இதே வீட்டிலேதாண்டி இருக்கேன். வேறே வீட்டிலேயா இருக்கேன்?

போதும் . உளறாதேள் நான் சொன்னது நீங்க வேறே, வீட்டுலேதானே இருக்கேள்னு.

ஓ. பங்சுவேஷன் மார்க்கை நான் சரியா கவனிக்கல்லே

நீங்க எதைத்தான் சரியா கவனிச்சிருக்கேள்?

சரி. அதை விட்டுத்தள்ளு. நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். ரிடையராகி நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படது ரொம்பத் தப்புன்னு இப்பத்தான் புரியறது. அந்த மாதிரி ரிட்டையராகி நிம்மதியா இருந்தா எல்லார் கண்ணும் உறுத்தும் போல இருக்கு.

காட்சி 7

சார், சார்

யாரது?

நான்தான்சார், ஃப்ளாட்நம்பர் 33லே குடி இருக்கிற சபாபதி

உள்ளே வாங்கோ, உட்காருங்கோ. என்ன சமாசாரம்?

என்ஃப்ளாட் கிச்சன் குழாயிலே தண்ணி வரமாட்டேங்கறது.

அதுக்கு நான் என்ன பண்ணணும்?

நீங்க தான் அசோசியேஷன் செக்ரடரி. நீங்கதான் அந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ணணும்.

இந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ண பயந்துதான் நான் அந்தக்காலத்துலே மேத்ஸ் பக்கமே தலை வெச்சிப் படுக்காம எகனாமிக்ஸ் எடுத்தேன்.

அதை யார்சார் கேட்டா? இப்ப என் ப்ராப்ளத்துக்கு ஏதாவது பண்ணுங்க. கிச்சன்லே தண்ணி வரல்லேன்னா எப்படி சமைக்கிறது? சாப்பிடறது?

சரி. நான் நம்ப ப்ளம்பரை அனுப்பறேன்.

சீக்கிரம் அனுப்புங்க. நான் ஆபீசுக்கு எட்டரைக் கெல்லாம் புறப்பட்டாகணும் ( ஒரு உத்திரவு போட்டுவிட்டுப் போய்விட்டார்)
நான் நம்ம ஃப்ளாட் ப்ளம்பரைத் தேட ஆரம்பித்தேன்

வாட்ச் மேன், ப்ளம்பரைப் பாத்தீங்களா?

இல்ல சார்

பாத்தா, உடனே வந்து என்னை பாக்கச் சொல்லுங்க.

சரி சார்

மணி எட்டு. ப்ளம்பர் யார் கண்ணிலும் படவேயில்லை. அதற்குள் 33 நம்பர் ஃப்ளாட் நண்பர் ( நண்பர்னு சொல்லலாமா அவரை? தெரியலையே) வருகிறார்.

என்ன சார்? மணி எட்டாயிடுத்து. நீங்க இன்னும் ப்ளம்பரை அனுப்பல்லே. ஒரு ரெஸ்பான்சிபிலிடியை எடுத்துட்டா வேலையை கரெக்டா செய்யணும். இந்த மாதிரி எங்க கழுத்தை அறுக்கக்கூடாது. இன்னிக்கு சாப்பாடு அம்போதான். இந்த வயசானவங்களுக்கு எல்லாம்…... நல்ல வேளையாகப் போய்க்கொண்டே பேசியதால் அவர் பேசியது என் காதுகளில் விழவில்லை

காட்சி 8

. இது தான் ஆரம்பம். தினமும் இப்படி ஒரு பிரச்சினை. யார் வீட்டு வாஷ் பேசின் அடைச்சிட்டாலும், கக்கூஸ் அடைச்சிட்டாலும், கரெண்ட் கட் ஆகியிருந்தாலும் தினமும் காலையிலே இந்த ப்ராப்ளங்களை அடெண்ட் பண்றதுதான் என் வேலே.
சொந்த வீடு இருந்தபோது நான் பட்ட கவலை என் ஒரு வீட்டைப் பத்தித்தான். இப்போ இங்கே இருக்கிற அத்தனை ஃப்ளாட் பிரச்சினையைம் என்னோட பிரச்சினை ஆயிடுத்து.
பிரச்சினைகளுக்கு பிரமோஷன்...
இப்பவெல்லாம் காலை நேரத்துலே எனக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடவே பல நாட்கள் டயம் கிடைக்கிறதே இல்லே.

***********

சார், சார் வாட்ச்மேன் எங்கிட்டே மரியாதைக்குறைவா நடந்துகிட்டான். அவனை வார்ன் பண்ணி வெய்யுங்க.

நீங்க?

நான் மாயா & மாயா கம்பனிலே டைரக்டர்

நான் அதைக்கேக்கலை.

இங்கே நான் இந்த காம்ப்ளக்ஸ் டெனன்ட்

ஃப்ளாட் நம்பர்?

26

சரி. நான வாட்ச்மேன்கிட்டே சொல்லி வெக்கறேன்
( அன்று சாயந்திரம் வாட்ச்மேனைப் பார்த்து)
வாட்ச் மேன். ஃப்ளாட் நம்26 .... அட டா.... அவர் பேரைக்கேக்க மறந்துட்டேனே.....

தாட்டியா ஒருத்தர், வழுக்கையா, மீசை வச்சுக்கிட்டு

ஆமாம். அவரேதான். அவரை நீங்க மரியாதைக் குறைவா பேசிட்டீங்களாமே?

இப்ப நீங்க இருக்கீங்க சார் எனக்கு சம்பளம் கொடுக்கிறவர். எவ்வளவு பதவிசா எங்கிட்டே மரியாதையா பேசறீங்க. அந்த ஆளானா ஏதோ தான் வெச்ச ஆள் மாதிரி என்னை வாடா, போடான்னு பேசறார். அவர் 3ம் மாடி வீட்டுக்கு அவர் காரிலே இருக்கிற மூட்டையை நான் எடுத்துக்கிட்டு போய் வெக்கணுமாம். மிரட்டறாரு.

தப்புதான். சில பேர் அப்படி இருக்காங்க. நான் அவர் கிட்டே பேசிக்கிறேன். இருந்தாலும் நீங்க கோபமாவோ மரியாதைக் குறைவாவோ அவர்கிட்டே பேச வேண்டாம்

அவர்கிட்டேயும் நீங்க சொல்லிடுங்க எங்கிட்டே மரியாதையாப் பேசச்சொல்லி.

***************

சார், கார்ப்பரேஷன் டாக்ஸ் கட்ட எனக்கும் என் ஒய்ஃபுக்கும் நேரம் கிடையாது. நான் உங்க கிட்டே கார்டையும் செக்கையும் தரேன். மறக்காம கட்டிட்டு ரசீதை பத்திரமா என் கிட்டே கொடுத்துடுங்கோ.

எனக்கு கார்ப்பரேஷன் ஆபீசுக்குப் போறதெல்லாம்முடியாது.

அப்படிச் சொன்னா எப்படி? காம்ப்ளக்ஸ் அசோசியேஷன் செக்ரடரி நீங்க. அத்தனை வேலையாட்களும் உங்க கன்ட்ரோல்ல தான் இருக்காங்க. எவனாவது ஒத்தனை அனுப்பி கட்டச்சொல்லுங்க.

அப்படி அனுப்பினா இங்கே வேலே ச.ஃபர் ஆகுமே.

மண்ணாங்கட்டி. பெரிய வேலை. தண்டத்துக்கு சம்பளம் வாங்கிக்கிட்டு உக்காந்து கிட்டு இருக்காங்க. கொஞ்சம் வேலைதான் செய்யட்டுமே.

******************

சார், கரெக்டா மாசா மாசம் அசோசியேஷன் ஃபீஸை வாங்க வந்துடுறீங்களே. எங்களுக்கு ஒரு ப்ராப்ளம்னா நீங்க அதை சால்வ் பண்ண மாசக்கணக்குலே எடுத்துக்கிறீங்க. ..
.ஃபீஸை மாத்திரம் நீங்க கேட்ட உடனே தரணுமோ?

நீங்க மூணு மாசமா கட்டலை.

அதனாலென்ன. சேத்துக்கட்டிடுவேன். ஏதோ இன்கம்ஸ் கட்டாத மாதிரி பயமுறுத்துறீங்களே. அவனவன் இன்கம்டாக்ஸே வருஷக்கணக்குலே கட்டாம ஹேப்பியா இருக்கான். நீங்க என்னவோ….

இப்படி ஒவ்வொருத்தரும் சொன்னா அசோசியேஷன் எப்படி ஃபங்ஷன் ஆகும்?

ஆமாம் . நான் கரெக்டா கட்டிட்டா மாத்திரம் ரொம்ப நல்ல ஃபங்ஷன் ஆயிடுமாக்கும்?

************

மாமா, அவர் வீட்டிலே இல்லை. அவர் வந்தவுடன் செக் வாங்கி வெச்சுடறேன். நீங்க வந்து வாங்கிண்டு போங்கோ. ஆனா அவர் எப்போ வருவார்னு தெரியாது..
( எப்போ வருவாரோன்னு பாடிண்டு அவர் ஆத்து வாசல்லே அவர் வரவரைக்கும் தபஸ் பண்ணிண்டு இருக்க வேண்டியதுதான். வேறே என்ன எளவு பண்ணித் தொலைக்கிறது?)

*************

சார், நீங்க மோட்டர் போடறதாலே அந்த சத்தம் என்ஒய்ஃபுக்கு சேரல்லே. அவளுக்கு ஏற்கனவே மைக்ரேன் தலைவலி.

மோட்டர் போடல்லேன்னா தண்ணீர் வராதே..

மோட்டரை வேறே எங்கேயாவது வெச்சிக்கோங்கோ.

சம்ப் இங்கேதானே இருக்கு. அப்ப மோட்டர் இங்கேதானே வெக்க முடியும்.

என்ன பண்ணுவேளோ எனக்குத் தெரியாது. மோட்டர் சத்தம் எங்களை டிஸ்டர்ப் பண்ணாதபடி நல்ல கவர் பண்ணி வையுங்கோ. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.
நான் கம்ப்ளெயிண்ட் பண்ணியும் நீங்க எதுவும் பண்ணல்லேன்னா நானே ஆளை வெச்சு அந்த மோட்டரை வேறே எங்கேயாவதை தூக்கி வெச்சுடுஉவேன். ஆமா

இப்படி ஒரு நாளைப்போல ஒருநாள் ஓயாமல் ஏதாவது ஒரு பிரச்சினை
நிம்மதியா சாப்பிட்டு இதோடு ஆறு மாசம் ஆச்சு.
இது என்கதை. என்னோட ஒய்ஃப் கதை இன்னும் பாதெடிக்காப் போயிட்டுது.

************

மாமி மாமி, குழந்தையைப் பாத்துக்குங்கோ. நான் சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவேன்.
( இரவு எட்டு மணிக்கு வந்து)
சாரி மாமி. கொஞ்சம் லேட் ஆயிடுத்து. என் சிஸ்டர்இன்லா வீட்டுக்குப்போயிருந்தேனா அங்கே ஒரு பிராப்ளம். அதாவது..

பரவா இல்லே. அதனால என்ன? பையன் பசின்னு அழுதான். நான் அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டேன்.

ஐயைய, ஏன்மாமி ஊட்டினேள். அவனுக்கு கண்ட சாப்பாடு ஒத்துக்காது. டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லி இருக்கார் அவனுக்கு மோர் சாதம் கொடுக்கக்கூடாதுன்னுட்டு. மோர்சாதம் கொடுத்தேளா?

ஆமாம். கொடுத்துட்டேன்.

போச்சு. போச்சு. நாளைக்கே அவனை டாக்டர் கிட்டே காமிச்சி இதை சொல்லியாகணும். என்ன மாமி இப்படிப் பண்ணிட்டேளே. உங்க கிட்டே அவனை சும்மா பாத்துக்கதானே சொன்னேன்.

************

மாமி, நானும் மாமாவும் ஒரு சாவுக்குப் போக வேண்டி இருக்கு. குழந்தையை எடுத்துண்டு போனா குழந்தை ரொம்ப பயப்படுவான். கொஞ்சம் உங்ககிட்டு விட்டுட்டுப் போறேன். பார்த்துக்கிறேளா?

படுத்த மாட்டானே?

ஊஹூம். படுத்த மாட்டான். நாங்க வர கொஞ்சம் நேரமாகலாம்.

பசிச்சதுன்னா மோர் சாதம் கொடுக்கலாமா?

எது வேணாலும் கொடுக்கலாம். அவன் சாப்பிடுவான். அவனுக்குத் தூக்கம் வந்ததுன்னா கீழே படுக்க வெச்சிடாதீங்கோ. கட்டில்லை படுக்க வையுங்கோ. அப்பத்தான் அவன் தூங்குவான்.

************

மாமி, மாமி, நானும் எங்காத்துக்காரரும் மாங்காடு கோவிலுக்குப் போயிட்டு சாயந்திரம் வந்துடுவோம். செத்த பாத்துக்கிறேளா இவளை?

***********

ஆமா என்னடி டிவி வேலை செய்யலையா?

37ம் நம்பர் வீட்டுப் பையன் டிவியை என்னவோ திருகினான் அப்போதிலே இருந்து அது வேலை செய்யலே.

ப்ரிட்ஜ் கதவு சாத்த மாட்டேங்கிறதே?

கிச்சனுக்குள்ளேதான் அத்தனை குழந்தைங்களும் வந்து டமார், டுமீர்னு எல்லா கதவையும் சாத்தி விளையாடறதே. எந்தக்குழந்தைன்னு நாம திட்டறது?

**************

அடடா, இந்த சோஃபா, காஸ்ட்லி சோஃபா, அந்தக்காலத்துலேயே 8000 ரூபா. எந்தப்பாழாப்போனவன் இதை இப்படிக் கிழிச்சது?

பாழப்போனவன் இல்லை. பாழாப்போனவள்?

என்ன சொல்றே நீ?

40 நம்பர் கிரிஜாவோட பொண்ணு மூணு வயசுக் குழந்தை நான் கிச்சன்லே காய் கறி வெட்டற கத்தியை வெச்சிருந்தேனோன்னோ. அப்ப அதைப்பாத்து எடுத்துண்டு வந்து சோபாவை நான் பாக்காத நேரமா பாத்து கிழிச்சிட்டா.

***********

இப்படி ஒண்ணா , ரெண்டா? ஒரு நாள் போறது ஒரு யுகமா இருக்கு. ஒவ்வொரு நாளும் என்னைவிடச் சின்ன பசங்க என்னைத் திட்டறது, முடியாட்டா அட்வைஸ் பண்றது, அதை ஏம்பண்ணலை, இதை ஏன் பண்ணலைன்னு அரிச்சி எடுக்கிறது,

வீட்டுக்குள்ளே இன்னிக்கு புதுசா என்ன டாமேஜ் பண்ணியிருக்காங்களோ சிறுசுகள்னு குலை நடுக்கத்தோட பாக்கிறது இப்படியே ஒரு வருஷம் ஓடிப் போயிடுத்து

************

நான் இந்த செக்ரடரி வேலைக்கு இத்தோட முழுக்குப் போட்டுடறேன். கன்டின்யூ பண்ணப்போறதில்லை.

என்ன சார், ஏன் சார் கன்டின்யூ பண்ண மாட்டேங்கிறீங்க?

என்னால முடியல்லே

நாங்க அத்தனை பேரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டுதானே சார் இருக்கோம். ( எப்படி இருக்கு?)

இல்லை சார் என்னாலே முடியாது

அப்படிச் சொன்னா எப்படி சார்? நாங்க எல்லாரும் வேலைக்குப்போறவங்க. நீங்க ரிடையர்ட் பெர்சன்.

நாங்க அத்தனை பேரும் யுனானிமஸ்ஸா நீங்கதான் செக்ரடரி யா கன்டின்யூ பண்ணணும்னு ரெசல்யூஷனே பாஸ் பண்ணிட்டோம். நீங்க ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

என்னாலே எதுவும் சொல்ல முடியல்லே

காட்சி 9

வீட்டில்
ஏன்னா முதல்லே இந்த செக்ரடரி வேலைக்கு தலை முழுக்கு போடுங்கோ.

அப்படித்தான் நெனச்சேன். ஆனா அவங்க யாரும் விடறதாத் தெரியல்லே.

முடியாதுன்னா அவாளாலே என்ன செய்ய முடியும்?

எனக்கு என்ன பண்றதுன்னே புரியல்லே?

எனக்கும்தான் இந்தக் குழந்தைங்களோடே இம்சை தாளவே முடியல்லே. சில பொண்டுகள் சாமர்த்தியமா அவா ஆத்து வேலையையும் என் தலையிலே கட்டிடறா.
நாளுக்கு நாள் இந்தத்தொல்லை ஜாஸ்தி ஆயிண்டே போறது. இது இப்படியே போனா நான் இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோட இருப்பேன்னு தோணறது.

அச்சானியமா பேசாதே. நானும் ரொம்ப நாள் இருப்பேன்னு தோணல்லை.

என்னை அச்சானியமா பேசாதேன்னுட்டு நீங்க மாத்திரம் இப்படிப்பேசலாமா?

சரி, சரி அதை விடு, இப்ப இதிலிருந்து தப்ப நாம என்ன எண்ணலாம்?

ஏன்னா, நாம நம்ம பழைய வீட்டுக்கே போயிடலாமா?

போடீ மண்டு. அந்த வீட்டை வித்துத்தானே இந்த ஃப்ளாட்டையே வாசு வாங்கினான். அப்ப 3 லட்சத்துக்கு வித்தோம். நாம ரெண்டு த சப்ரிஜிஸ்டிரார் ஆபீசுக்குப் போய் கால் கடுக்க மூணு மணி நேரம் நின்னு எல்லாரெஜிஸ்டர்லேயும் கையெழுத்தப்போட்டு அங்கே அத்தனை பேருக்கும் தாம்பூலம் வெச்சுக்கொடுத்தை மறந்துட்டியா? இப்ப அதுமாதிரியான வீட்டை அந்த இடத்துலே வாங்கறதா இருந்தா, 5 லட்சம்.

ஆமாம் இப்பத்தான் ஞாபகம் வரது. அங்கே கூட என்னோட சித்தி பையன்....

போதும். இன்னும் அந்தக்கதையை எல்லாம் ஆரம்பிச்சுடாதே

சரி இப்ப என்ன தான் பண்றது?

என்ன பண்றதுன்னே புரியல்லே. நாம வீராப்பா வாசு கிட்டே ஃபாரின், கீரின் எல்லாம் நம்மாலே முடியாதுன்னு சொல்லிட்டேனே.

சொன்னா என்ன? அது சத்திய வாக்கா. என்ன? யார்தான்சொல்றபடி செய்யறா இந்தக் காலத்துலே?

அதுவும் சரிதான். என்ன பண்ணலாம்னு சொல்றே?

பேசாம நாம் இந்த ஃப்ளாட்டை வித்துட்டு வாசுகிட்டே சொல்லி அமெரிக்காவே போயிடுவோம். என்ன சொல்றேள்?

நீயே சொல்லிட்டே. அப்புறம் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?

*************

அசோசியேஷன் சார்பில் சபாபதி

மிஸ்டர் பத்மநாபன் அவர்கள் இந்த .ஃப்ளாட்டைக் காலி பண்ணிட்டு நம்மளையெல்லாம் விட்டு அமெரிக்காபோறதை ஒட்டி இந்த ஃபேர் வெல் ஃபங்ஷனை அரேஞ்ச் பண்ணியிருக்கோம். பத்ம நாபன் ஒரு ஜெம் ஆஃப் எ பெர்சன். நாம எந்த கம்ப்ளெயிண்ட் செஞ்சாலும் எத்தனை தரம் செஞ்சாலும் கொஞ்சம்கூட முகம் கோணாம அது அவருடைய சொந்த வேலையா நெனச்சு நம்ம எல்லாருக்கும், ஒரு ஃப்ரெண்டா, ஃபிலாசஃபரா, கைடா இருந்து இந்த காம்ப்ளக்ஸ் அசோசியேஷனை சிறப்பா நடத்திக்கிட்டு இருந்தார். ( என்னமாப்புளுகறான்)
நாமும் நம்மளாலான மேக்ஸிமம் சப்போர்ட்டை அவருக்குக் கொடுத்தோம்.( கிழிச்சாங்க) அவர் நம்மை விட்டுப் போறது நமக்கெல்லாம் பெரிய லாஸ். இன் ஃபாக்ட் டபுள் லாஸ். அவர் மாத்திரமல்ல அவர். ஒய்ஃப் நம்ம வீட்டுக்குழந்தைங்களை எல்லாம்தன் குழந்தையாவே பாவிச்சி ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லாக இருந்தாங்க.........( (இருக்காதாபின்னே?)
அப்படிப்பட்ட அந்த ரெண்டு பேரும் நம்மை விட்டுப் பிரியறாங்களேன்னு நெனச்சி இந்த அசோசியேஷன் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிற அதே நேரத்துலே அவரிடைய சேவையையைப் பாராட்டுகிறது.....( நாங்க இங்கே இருந்து போனா அப்ப தெரியும் உங்களுக்கு எங்க அருமை)

நான்

நான் இந்த காம்ப்ளக்ஸை என் உயிருக்கு மேலாக நேசித்தேன். உங்கள் ஒவ்வொருவரையும்அவர்கள் செய்த உதவிக்கு எப்படி பாராட்டி நன்றி தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே கிடைக்க வில்லை. என்னை விட என் மனைவி இந்தக் குழந்தைகளைப் பிரிய மனமில்லாமல் கடந்த ரெண்டு நாட்களாகக் கண்ணீரும் கம்பலையுமா இருந்தாள். அவளை சமாதானப் படுத்துவதே எனக்குப் பெரும் பாடாயிற்று. இந்த காம்ப்ளக்ஸ் வாழ்க்கையை என்னோட வாழ்நாள் முழுவதும் என்னாலே மறக்கவே முடியாது.எங்கள் பையன் எங்களை வருந்தி வருந்தி அழைப்பதால் நாங்கள் அவன்கூட இருக்க அமெரிக்கா போக வேண்டி இருக்கு வேறு வழியில்லை.என்ன செய்ய?
அனைவருக்கும் நன்றி , வணக்கம்.

கட்சி 10

அமெரிக்க வீட்டில்
அந்த ஃபேர்வெல் ஃபங்க்‌ஷன்லே எல்லாரும் எப்படி எல்லாம் புழுகினாங்க? பாத்தியா? இவங்க எனக்கு ரொம்பவும் ஒத்தாசையா இருந்தாளாம். தினமும் கரிச்சிக்கொட்டி வயசானவன்னு கூட பாக்காம மிரட்டி, திட்டி என் உயிரையே எடுத்துட்டு எப்படியெல்லாம் புருடா விட்டாங்க.

நீங்க மாத்திரம் என்னவாம். அவாளுக்கு சளைக்காம நீங்களுந்தானே அளந்து விட்டேள்?

என்ன பண்றது? நிஜத்தை சொன்னா அது நாகரிகமா இருக்காது. அதனாலே அப்படி யெல்லாம் பேச வேண்டியதாப் போச்சு.

விட்டாப் போதும்னு ஆயிடுத்து. அப்பா இனிமே யாரும்நம்மளைத் தொந்திரவு பண்ண மாட்டா. நிம்மதியா இருக்கலாம். இங்கே ஃப்ளாட் மாதிரி தொந்திரவெல்லாம் கிடையாது. நம்ம ஊர் மாதிரி குழாய்அடைச்சிக்கிறது, கரண்ட் கட்டாறது, தண்ணி பிரச்சினை எதுவும் கிடையாது. அப்படி ஏதாவது இருந்தாக்கூட வாசு பாத்துப்பான்

ஆமாம்.ஆமாம்.

***********

சில வாரங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கிறது.

என்ன குளிர்? என்ன குளிர்?

உனக்குக் குளிர் சேராது. எனக்கு இந்த ஊரே எனக்கு சேராது.

ஆமாம் நம்ம ஊர் மாதிரி சிம்பிளாவே இருக்க முடியாது. கழுதை பொதி சுமக்கிற மதிரி ஏகப்பட்ட துணிகளை ஒண்ணுமேலே ஒண்ணு போட்டுண்டு படாத பாடு படவேண்டி இருக்கு.

இந்த மாதிரி டிரஸ் கூட பரவாயில்லே. ஒண்ணுமேலே ஒண்ணுன்னு அடுக்கடுக்கா டிரஸ் போட்டு முடிச்சவுடனே பாழாய்ப்போன முதுகுலே ஒரு அரிப்பு வரதே அதைத்தான் என்னாலே தாங்க முடியல்லே.

பழக்கமில்லாத பழக்கமா சாக்ஸ் போட்டுண்டு ஷூ மாட்டிக்கற வேலையே பெரிய வேலை. அதை மாட்டிண்டு தடுக்கி விழாம நடக்கிறதே ஒரு டான்ஸ் மாதிரி இருக்கு. கொஞ்சம் அசந்தோமோ அவ்வளவுதான். தொபுகடீர்தான்

இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே

மறந்துபோய் காத்தாலே நம்ம வீட்டுக் கதவுதானேன்னு திறந்தா ஊரே அதிரும்படி அலாரம். அடுத்த நிமிஷம் போலீஸ். சமையல் அறையிலே தாளிச்சிக் கொட்டினப்போ ஒரு நாள் ஏகப்பட்ட புகை. உடனே அலாரம். அடுத்த நிமிஷம் போலீஸ்.

என்ன பண்றது? இந்த ஊர் அப்படி.

ஒரு தலைவலின்னு வந்தா அதுக்கான டாக்டர் தேதி தரவரையிலும் தலைவலியை தாங்கக் கத்துக்கணும்.

எல்லாம் தெரிஞ்சே ,வேறே வழியில்லாமதானே நாம இங்கே வந்திருக்கோம்.

ஒரு கோவில் குளம்னு நாமா எங்கேயாவது காலாட போக முடியறதா? அதுக்கு வீக் எண்ட் வரையிலே காத்திருந்து பசங்க கிட்டே தொங்கணும்.

சரி. யாராவது நம்ம ஊர்க்காராளைப் பாத்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு அவா கிட்டே பேசப்போனா அவாளும் பாவம் இங்கே வந்ததுக்காக மூக்காலே அழறா.

அப்படித்தான் மந்தவெளியிலே இருந்து வந்தமாமி பாவம் அழாத குறைதான். திரும்பிப் போயிட்டாத்தேவலைன்னு தோணறதாம்.

எனக்கும் ஒவ்வொரு தரம் மெட்ராஸுக்கே போயிடலாமான்னு தோணறது.

ஒவ்வொரு இடத்துலேயும் ஒவ்வொரு பிரச்சினை. அதுலே இருந்து தப்ப முடியாது. அந்தப் பிரச்சினைகளை சந்தித்து வாழக் கத்துக்கணும்.

இந்த வாழக் கத்துக்கறதை அப்பவே நம்ம சொந்த வீட்டிலே இருந்த போதே கத்துண்டிருக்கலாம். இவ்வளவு சிரமப்பட்டு பத்தாயிரம் மைலுக்கு அப்பாலே வந்து கத்துண்டிருக்க வேணாம்.

என்ன பண்றது? எல்லாத்துக்கும் வேளைன்னு ஒண்ணு வரணும்.
*************

எழுதியவர் : ரா.குருசுவாமி (ராகு) (8-Aug-20, 4:53 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 127

மேலே