எங்கே இறைவன்
எங்கே இறைவன்?
###############
(அ)ர்ச்சனைச் செய்தால் பிரச்சனைத் தீரும் என்பது
அறியாமை அன்றோ!
அல்லதும் நல்லதும் பிறர்தர வாரா!
என்பது
நிதர்சனம் அன்றோ!
(ஆ)லயம் தொழுதால் உலகம் உய்வுபெறும் என்பது பொய்மையன்றோ!
உலகம் உய்வு பெற மாற்றான்
உணர்வுகளை மதிக்க கற்றுத்தருவது
கடமையன்றோ!
(இ)ன்னல் வந்தால் இறைவனைத் தேடுவது
தவறன்றோ!
இன்பத்தில் இறைவனை
மறப்பது
முறைமையன்றோ!
(ஈ)கை மனமின்றி
ஈசனிடம்
வேண்டுவது
முறையன்றோ!
ஈதலே அன்பின்
திறவுகோலன்றோ!
(உ)ன்னை அறியாமல்
உத்தமனைக் காண வருவது
பேதமையன்றோ!
உன்னை அறிந்து உன்னை இழப்பது
ஞானியன்றோ!
(ஊ)னைக் கொன்று
உயிர்வளர்ப்பது
பாவமன்றோ!
ஊணுருகி வேண்டுவதில் பலனில்லையன்றோ!
(எ)ள்ளுக்குள்ளிருக்கும் எண்ணெய்யை
அறியாமல் இருப்பது மடமையன்றோ!
உள்ளுக்குள் இருக்கும்
உத்தமனைக் காணாமல்
உய்வு பெற
இயலாதன்றோ!
(ஐ)யத்துடன்
ஐயனை வணங்குவது
தீதன்றோ!
ஐக்கியமின்றி
ஐயனைத் தியானித்தல்
முறைமையன்றோ!
(ஒ)ளியிழந்து
ஆதவனைக்
காண்பது
வீணன்றோ!
ஒளி(லி)யிழந்து
(ஓ)ங்கார பரம்பொருளை
ஓடி ஓடி
தேடுவது
பயனன்றோ!
(பௌ)வத்தின்
ஆழத்தினைக் கணக்கிட இயலாதன்றோ!
(மௌ)வலின்
மணத்தினைப் பிரிக்க
முடியாதன்றோ!
இறைவனைக் காண
இயற்கை ஒன்றே
போதுமன்றோ!
சரவிபி ரோசிசந்திரா