தெரு நாய்கள்
பார்த்த ஆளுடன் பாசத்தை
எதிர் பார்க்குமிது பகலில்..
பார்த்த ஆளையும் சற்று
உற்று நோக்குமிது இரவில்..
பிஞ்சுகளை கண்டால் கொஞ்சி
முகர்ந்திடும் தன் மூச்சில்..
தானுறங்க வீடு இல்லையென
சோர்ந்து அழுததில்லை என்றும்..
தானறிந்த தெருவே தன் சொந்த
வீடாய் போற்றியதனை காக்கும்
அதன் வாழ்நாள் உள்ளவரை...
பிறந்து வளர்ந்து துணையும் நாடி
கருப்பு வெளுப்பு பழுப்பென
சில பல குட்டிகள் பாங்காய் ஈன்று
கல்லடி படாமல் அதனை காத்து
தொடங்கிய தெருவிலோ இல்லை
பிரதான சாலையிலோ முடியும்
இதன் வாழ்வு யாரும் அழாமல்..
தன் பிஞ்சு குழந்தையை தானம்
கொடுக்க நினைக்கா நம் மனம்
தெரு நாய் அதன் தாயுணர்வை
மறப்பது மனித தன்மையோ?
உணவிடும் மனிதரை சொந்தமாய்
பாவித்து காலை சுற்றி வந்து
வாலாட்டி மகிழும் வாழ்நாள் முழுதும்
தெரு நாயது எந்த சாதியாயினும்..
தெரு நாயதனை காண நேரிடின்
அதட்ட முயலும் நம் நாவையும்
அடிக்க ஓங்கும் கையையும் அடக்கி
அன்பை செலுத்துவோம் அதனிடத்தில்...
-----------------
சாம்.சரவணன்