இரவு பட்ட பாடு - அறுசீர் ஆசிரிய விருத்தம்
தமிழறியாத தாசி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றதனைப் பற்றி வேடிக்கையாகக் கவி காளமேகம் கூறிய செய்யுள் இது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
ஏமிரா வோரி யென்பாள்
..எந்துண்டி வஸ்தி யென்பாள்
தாமிராச் சொன்ன வெல்லாம்
..தலைகடை தெரிந்த தில்லை
போமிராச் சூழும் சோலைப்
..பொருகொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு
..நமன்கையிற் பாடு தானே. 179
- கவி காளமேகம்
பொருளுரை:
'ஏமிரா வோரி (என்னடா, அடே) என்பாள், ‘எந்துண்டி வஸ்தி (எங்கிருந்து வருகின்றாய்)என்பாள்,
இரவு அவள் இப்படிச் சொன்னதெல்லாம் தலை கடை எதுவும் நமக்குத் தெரிந்தவாக இல்லை.
கழியும் இரவு சென்று அடர்கின்ற சோலையினைப் போன்றதாக விளங்கும் கொண்டையினையுடைய திம்மி என்பவளிடத்திலே, நாம் இவ்வாறாக இரவெல்லாம் பட்டபாடு, எமனிடத்திலே சிக்கினவர் படுகின்ற பெரும்பாடு போன்றதே யாகும்.'