சக்கரை நோயாளி
சூது எனும் சூத்திரத்தை மாத்திரமே மாத்திரையாய் மரணம்வரை சிரமமின்றி விழுங்கிவிடும் குணமுடைய பாத்திரமாய் மாறிடுவான்!
காசை எண்ணும் ஆசையிலே இனிமையான பொழுதயையெலாம் வியர்வையாக வெளியில்தள்ள கால்கடுக்கத் தலைவலிக்க காலமெலாம் நடந்திடுவான்!
தன்னலத்தின் தன்மையெலாம் சரியளவு இருந்திடவும் கருதிடவே குருதிதனை இறுதிவரை உறுதியாக சோதனைகள் செய்திடுவான்!
பிறரைவிட உயர்ந்தவனா - தாழ்ந்தவனா எனும் கேள்விதனை தனக்குத்தானே எடையிலிட்டு நிம்மதியை இழந்திடுவான்!
நித்தம் நித்தம் சுத்தி சுத்தி கத்தி வரும் வினையையெலாம் யுக்தி கொண்டு பொத்தி வைக்க நித்திரையை பத்திரமாய் ஒத்தி வைப்பான்!
நல்லவனாய் நடித்ததிடவே
இன்சொலினை
இன்சுலினாய் பொய்மருந்தாய் மெய்யினிலே பலமுறையே செலுத்திடுவான்!
இயலிசை நாடகத்தில் ரசனையெனும் விசயமுள்ள இனிப்புச்சுவை இருப்பதனால் குடைச்சலாக இருக்குமென்று தினமதனை மறுத்திடுவான்!

