ஈர இரவுகள்

ஈர இரவுகள்!

என் உறங்காத இரவுகளின்
விழித்திரைகள்
எனைக் கடந்து சென்ற
காலங்களின் மீள்பதிவுகளை
மீண்டும் மீண்டும்
திரையிட்டுக் காட்ட மகிழ்வதாய்
சில கணங்கள்!

முள் களையாது சிலர்
விதைத்துச் சென்ற
வார்த்தைகள்
இரவின் ஈரத்தில் குறுத்துவிட்டு
முற் கொடியாய்ப் படர்ந்து
இதயப் பந்தலில் குத்திட்டுக்
கழிவதாய் சில கணங்கள்!

இரவின் முகட்டில் தூரிகட்டி
இருளின் பால் குடித்தும்
உறங்காது
எதிர் காலத்தின் ஏக்கங்களில்
அசைந்தாடி அல்லல்
உற்று எழுவதாய்
சில கணங்கள்!

கற்பனையின் ஈனல்களை
மடி சாய்த்து
காரிருளிலும்
மனச் சுவர் தாண்டி
கட்டுக்கடங்காத பயணத்தில்
சில கணங்கள்!

இரவுகளில் தட்பத்திலும்
விழிகள் தங்கள்
உறக்கத்தை உலரவைக்க
விடியும் வரைக் காய்ந்த
வறண்ட பொழுதுகளோடு
ஒட்டிய இரவின் சாயங்கள்
பகலாலும் வெளுக்க இயலாது
கொட்டாவி பிடிப்பதாய்
சில கணங்கள்!



சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (29-Aug-20, 7:37 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : eera iravugal
பார்வை : 174

மேலே