பாரம்பரிய ஆட்டங்களை காப்போம்

பாரம்பரிய ஆட்டங்களைக் காப்போம்!

கோலாட்டம் கும்மியாட்டம் கரகாட்டம்
கூடிமக்கள் பக்தியிலாடும் காவடியாட்டம்
சிலம்பாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம்
தமிழ் மக்கள் போற்றும் கிராமிய ஆட்டங்கள்

நறுமலர் சூட்டி நடுவில் விளக்கேற்றி
நகைமுக மங்கையர் வட்டமாய் சுற்றி
வேகதாளத்துடன் இருகைகளைக் கொட்டி
குனிந்து நிமிர்ந்து ஆடுவது கும்மியாட்டம்

அலங்காரக் கரகம் அரிசியுடன் நாணயம்
தெங்கம்பழம் மூடி சிரசில் சுமந்து
நையாண்டி மேளம் உடுக்கை இசைக்க
விரசாய் விழாது ஆடுவது கரகாட்டம்

தவில் டோலக்குடன் இசைந்து பாடி
பின்னலாய் நேராய் வட்டமாய் கூடி
வண்ணக் கோல்களை ஒன்றுடன் ஒன்றுதட்டி
வளைகரங்கள் வனப்பாய் ஆடுவது கோலாட்டம்

தீரக் கழலாய் காற்சிலம்பு பூட்டி
தவில் குடம் சிங்கியில் தாளம் தட்டி
தட்டு மாறாது கைக்குட்டையை சுழற்றி
தடத்தோள் ஆண்கள் ஆடுவது ஒயிலாட்டம்

இயற்கையுடன் இயைந்த இயல்பே கிராமியக் கலை -அதில்
இசையுடன் அங்கம் அசைப்பதே ஆடல்கலை
இளைய தலைமுறைக்கு இனி முறையாய் கற்பிப்போம்
இறையுடன் உறைந்து இதை மறையாது காப்போம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (6-Sep-20, 10:30 am)
பார்வை : 314

மேலே