குமரேச சதகம் – திருநீறு வாங்கும் முறை - பாடல் 87

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பரிதனில் இருந்துமியல் சிவிகையில் இருந்துமுயர்
பலகையில் இருந்தும் மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன் றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிீழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 87

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

செவ்வரி படர்ந்த திருக்கண்களையுடைய குறமடந்தையார் வள்ளியம்மையாரைத் திருமணம்புரிந்து மகிழும் உலகமுதல்வனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!,

குதிரைமீது அமர்ந்தும், அழகிய பல்லக்கில் அமர்ந்தும், உயரமான மணைமீது அமர்ந்தும், அழகிய பொதுவிடத்திலே நன்றாக அமர்ந்தும், பெரிய திண்ணைகளில் அமர்ந்தும்,

திருநீறு அளிப்போர்கள் கீழேயிருக்க (வாங்குவோர்) மேலிடத்திலிருந்து வாங்கி அணிந்தாலும், ஒரு கையாலும் மூன்று விரல்களாலும் ஏற்றாலும், (வாயில்) தரித்த தாம்பூலத்தோடும்,

அருமையான வழியொன்றிற் செல்லும் பொழுதும், அழுக்கு நிலத்திலும் (ஆகிய) அந்த இடங்களிலே
அணிந்தாலும், அளித்தபோது மறுத்தாலும் அவர்கட்கு நரகம் கிடைக்கும் என்று அறிஞர் கூறுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-20, 7:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே