நானும் ஒரு மனிதனே

கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து கொண்டே இருக்கிறது இந்த கடல். அவ்வளவு காதலா இந்த மணல்மேல்? பார்க்க பாவமாய் இருக்கிறதே! இந்த கடற்கரையை மூடும் அளவிற்கு ஒரு பெரிய கை இருந்தால், அழகாய் எல்லா மணலையும் தள்ளி கடலிடம் சேர்த்து விடலாமே!இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த சரவணனின் கால் பாதம் கீழ் இருக்கும் மணல் கடல் நீரால் கரைந்து போவதை உணர்ந்தான். நம்மால் இந்த கரையில் இருக்கும் எல்லாம் மணலை கடலிடம் சேர்க்கத்தான் முடியவில்லை, காலை அலை விழும் இடத்தில் வைத்து மணல் கடலுடன் சேரவிடாமல் செய்கிறோமே! என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது, மறுகணமே ஒரு அடி பின்னால் சென்று நின்றான் சரவணன். கடல்நீர் அவன் கால் பாதம் உருவாக்கிய பள்ளங்களை மணலால் மூடி தடம் இல்லாமல் மறைக்கச் செய்தன. ஐந்தடி தூரத்தில் அவன் தோழன், சரத் தொலைபேசியில் அதன் குரலை உயர்த்திப் பேசுவது அவன் கவனத்தைத் திருப்பியது. 'இவன் இன்னுமா அப்பாவோட சண்டை போடுறான்?' என்று அவன் மனதில் கேட்டுக்கொண்டான். தொலைபேசியில் பேசிக் கொண்டே சரவணன் இருந்த இடத்தை நோக்கி சரத் மெதுவாக நடக்கத் தொடங்கினான். சரவணனும் அதே திசையில் அவனோடு நடக்க ஆரம்பித்தான்.

சரத் அவன் அப்பாவிடம் தொலைபேசியில் சொன்னான் 'எப்படி ஒரு விஷயத்த மனசுல வச்சிக்கிட்டு இன்னொரு விஷயத்த செய்ய முடியும்?........ எப்படி நான் மறந்துடுவேனு சொல்றீங்க?...நாளைக்கு நான் வயசாகி, சந்தோஷமே இல்லாம வாழ்ந்துட்டு இருந்தா என்ன பண்ணுவீங்க?...காசு கஷ்டப்படுற வரைக்கும் தான் முக்கியம், சம்பாதிச்சக்கப்புறம் நம்மளோட கனவு என்ன ஆச்சுன்னு தான் உறுத்தும்...... சாகுற வரைக்கும் உறுத்தும் !....ஃபோன வைங்க பா உங்களுக்கு கடைசி வரைக்கும் புரியாது!' என்று ஆத்திரமாய் கத்திவிட்டு அழைப்பை துண்டித்தான், அவன் முன்னால் இருந்த திசையை கோபமாக பார்த்தபடி நிற்காமல் நடந்து கொண்டே இருந்தான் சரத்.

சரவணன் அவன் தோளை பிடித்து நிறுத்தி கேட்டான் 'என்னடா சொன்னாரு...?'

சரத் மிகுந்த சலிப்புடன் சொன்னான் 'நேர்ல பேசணுமா...!'

சரவணன் 'என்னடா சொன்னாரு? அத சொல்லுடா!'

சரத் 'ஒத்துக்க மாட்டேங்குறாரு டா, கஷ்டப்படுவேனா, காசு பார்க்க முடியாதா, கண்மூடித்தனமா இருக்கேனா. என் லைஃபோட அவருடைய லைஃப் கம்பேர் பண்றாரு. அவர் மாறி கஷ்டப்பட்டா தான் நல்லா இருக்க முடியும்னு சொல்றாரு. அவர் கஷ்டப்பட்டாருன்றது உண்மதா, ஆனால் அவர் காலத்துல குடும்ப கஷ்டத்தால் கனவுனு ஒரு ஆப்ஷனுக்கு இடமே இல்லாம போயிடுச்சு, குடும்பத்த காப்பாத்தணும்னே வாழ்ந்துட்டாரு. இப்போ அந்த நிலம மாறிடுச்சுனு உணர மாட்டேங்குறாரு. நான் ஏதோ ஒரு வேலையில சேர்ந்துட்டு சம்பாதிச்சிட்டு உயிரோட இருக்கணு அவருக்கு..... அவ்வளவு தான்'.

சரவணன் 'சொல்லி புரிய வைக்கலாம் டா, ட்ரை பண்ணு'

சரத் 'டேய் அவர் உண்மையிலேயே நான் நல்லா இருக்கணும்னு யோசிச்சு இருந்தாருனா முதல் தடவ நான் எக்ஸ்பிளைன் பண்ணும்போதே புரிஞ்சிருக்கணு. கௌரவம்! அவருக்கு பையன் இன்ஜினியரிங் வேல செய்யுறான்னு கவுரவமா சொல்லிக் கணு. என் சந்தோசத்த பத்தி கவலையே இல்ல. இதுல என்னோட ஆளு வேற! எங்க ரெண்டு பேரு ஜாதகமும் ஒத்துப் போலனு சொல்றா. எங்கப்பா அதுக்கும் ஒத்துக்க மாட்டாரு. இப்போ என்ன பண்றதுன்னு கேட்டு தொல பண்றா. தல வலிக்குது டா...!'

சரத் அவன் அப்பா சொன்னதை சொன்னவுடன், சரவணன் எதையோ உணர்ந்தவன் போல கடலைப் பார்த்தவண்ணம் கீழ்வரும் வரிகளை சொன்னான்.

'கனவுகளுக்கு சாவாக
உணர்வுகளுக்கு, துரோகமாக
காதலுக்கு, விரோதமாக
இயற்கைக்கு, செயற்கையாக
விளங்குகிறான் மனிதன்!'


சரத் இதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்து சொன்னான் 'டேய்..... நானே காண்டுல இருக்கேன், மூடிகிட்டு இரு!'

சரவணன் வெறுப்படைந்த சரத்தை பார்த்து ஆனந்தமாய் கொஞ்சம் சிரித்தான்.சரத்தின் அலைபேசி அவன் கைகளில் புது அழைப்பு வந்ததால் துடித்தது. அலைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டே ரெண்டு அடி சரவணனிடம் இருந்து விலகி சென்று பேச தொடங்கினான்.சரத் அவனோட காதலியிடம் தான் பேசுகிறான் என்று யூகித்துக்கொண்டு, சரவணன் மறுபடியும் கடலுக்கும் மணலுக்கும் நடுவில் நடக்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரம் தொலைபேசியில் பேசிய உடனே அழைப்பை துண்டித்து கொண்டே வேகமாய் சரவணனிடம் வந்து கேட்டான் 'என்ன ஆச்சு?'

ஒன்னும் விளங்காத சரவணன் அதற்கு 'என்ன...... என்ன ஆச்சு?'

சரத் 'கோவமா பேசினா டா!...... ப்ரொபோஸ் பண்ணி இருக்கா போல?'

சரவணனுக்கு அவன் யாரிடம் இவ்வளவு நேரம் பேசினான் என்று விளங்கியது. கொஞ்ச கோபமும் அவனை சமாளிக்க வேண்டுமே என்ற சலிப்புடன் சொன்னான் 'ஆமாம்..... பண்ணா'

சரத் 'நீ என்ன சொன்ன?'

சரவணன் 'இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டேன்'

சரத் 'ஏன்? உனக்கும் அவ மேல ஃபீலிங்ஸ் இருந்துச்சு தானே?'

சரவணன் 'ஆமா இருந்துச்சு'

சரத் 'அப்புறம் என்னடா பிரச்சன?'

சரவணன் 'டேய்..... அவ கிட்ட சொல்லனும்னு நினைச்சு இருந்தன்னா, அவ வெயிட் பண்ணி வெறுத்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடி நானே ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்!'

சரவணன் எரிந்து விழுந்த உடன் கொஞ்சம் நிதானமாய் சரத் 'ஏன் இஷ்டம் இல்ல?'

சரவணன் ஒரு பெருமூச்சு விட்டான், சரத்திடம் இருந்து முகத்தை திரும்பி சூரியனைப் பார்த்தவாறு பின்வருவதை சொன்னான் 'ஏன்னா வொர்க் ஆகாதுன்னு தெரிஞ்சிடுச்சு. ஃபீலிங்ஸ் இருந்தா..... ரிலேஷன்ஷிப் ஸ்மூத்தா போயிடுமா? அவளுக்கும் கனவு இருக்கு எனக்கும் கனவு இருக்கு.... சோ இதெல்லாம் ஒர்க் ஆகாது'.

சரத் 'அப்போ ட்ரீம்ஸ் காக ரிலேஷன்ஷிப்ப விட்டுக்கொடுத்துடுவ?'

சரவணன் மிகவும் ஆத்திரத்துடன் 'டேய்.... பிராக்டிகலா யோசி, நானே ஏதாவது பிடிக்காத டெம்ப்ரவரி வேலைய செஞ்சு என் குடும்பத்த சமாளிக்கணும், அப்படியே அவங்களோட என் பேஷன்காக சண்டையும் போடணும் சைட் பை சைட். இத செய்றதுக்கே எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியல. இதெல்லாம் வச்சுக்கிட்டு எப்படி ரிலேஷன்ஷிப்ல இருக்க முடியும்?'

"இங்க நிம்மதிக்கே வக்கு இல்லையாம், ஆனா சந்தோஷம் கேக்குதாம்!"


இதைக் கேட்டு நிதானத்தை இழந்த சரத் 'பைத்தியம் மாதிரி பேசாத! பயம் னு சொல்லு!'

சரவணன் 'என்னடா பேசுற? எப்படி பயப்படாம இருக்க முடியும்? காலையில நீ இங்க வண்டில வரப்போறேன்னு தெரிஞ்ச உடனே உங்க அம்மா "பஸ்ல போடா"னு சொன்னாங்கல்ல அதே மாதிரி தான் இதுவும்'

சரத் சோர்வுடன் 'அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?'

சரவணன் 'if that's your mother's way of caring for you, then this is my way of caring for her!'

'My hands are already full, அது உனக்கு நல்லாவே தெரியும்! இருக்கிறது பத்தாதுன்னு அவள என்னோட லைஃப்ல இழுத்து, அவளோட வாழ்க்கையையும் வீணாக்க விரும்பல. நீ என்ன சொன்னாலும் சரி, நான் கடைசி வரைக்கும் ஒத்துக்க போறது இல்ல!'

சரத் அவன் தலையில் அடித்துக்கொண்டான், சரவணன் இடம் இருந்து சற்று விலகி போய், கடலை முறைத்து பார்த்த வண்ணம் கையை கட்டி கொண்டு நின்றான்.

சரவணன் கால் அடியில் மணல் கரைந்தது. தன்னை அறியாமல் பேசிக்கொண்டே இங்கு வந்து கடலின் காதலுக்கு மறுபடியும் தடையாய் நின்று விட்டோமே! என்று எண்ணினான், அப்போதுதான், தானும் ஒரு விதத்தில் சரத்தின் அப்பாவை போலவே நடந்து கொண்டதை உணர்ந்தான். உடனே ஒரு மெல்லிய சிரிப்பும்,அவன் கண்ணில் ஒரு துளி கண்ணீரும் கசிந்து கடலுடன் கலந்தது.

கடலைப் பார்த்து அதே வார்த்தைகளை சொல்லி அவனுக்கு அவனே சமர்ப்பித்தான்.....

'இயற்கைக்கு, செயற்கையாக!
கனவுகளுக்கு, சாவாக!
உணர்வுகளுக்கு, துரோகமாக!
காதலுக்கு, விரோதமாக!
விளங்கும் "நானும் ஒரு மனிதனே!"




கதை :- ஸ்ரீகாந்த்
எழுத்து வடிவம் :- இரா.பொழிலன்
நடராஜ் வி

எழுதியவர் : கதை:- ஸ்ரீகாந்த், எழுத்து வ (22-Sep-20, 10:16 am)
சேர்த்தது : Srikanth
பார்வை : 496

மேலே