எம் இனிய எஸ்பிபி

எஸ்.பி. பாலசுப்பிரமணியன்...

ஆயிரம் நிலவே வா... பாடிய
ஆயிரத்தில் ஒருவனே...
அபூர்வ பாடகனே...
நீ மீண்டு வருவாய் என
நாங்கள் நினைத்திருக்க
எமை ஏன் பிரிந்தாய்..

இளைய நிலா பொழிகிறதே...
பாடிய எங்கள் இதய நிலா..
நீ ஏன் இங்கு மறைந்தாய்...

இயற்கை என்னும்
இளையக் கன்னி பாடிய நீ
இயற்கையோடு ஏன் கலந்தாய்...

நாத விநோதங்கள்
நடன சந்தோசங்கள்
பரம சுகங்கள் தருமே...
பாடிய உன் மறைவு கேட்டு
சலங்கைகளும் அழுகின்றன...

சிரமம் இல்லாமல் சிகரம்
தொடுவாய் ராகங்களில்...
ரசிகர்களின் மனங்களைக்
கட்டிப் போடுவாய்
உன் இனிய பாடல்களில்...

நீ பாடி இருக்கிறாய்
பல்லாயிரம் பாடல்கள்
நிறைய மொழிகளில்...
பாடல் ஒவ்வொன்றுக்குள்ளும்
சேர்த்திடுவாய் புது மொழி.. அது
உனக்கே வாய்த்த இசை மொழி
கேட்பவர் மயங்கும் இனிய மொழி..

இதயம் ஒரு கோவில் பாடி
எங்கள் இதயங்களை ஆள்பவனே
கோடி கோடியாய் மக்கள்
நீ பாடிய வரிகளை
தினமும் உச்சரிப்பர்... இது
உலகின் இன்னொரு அதிசயம்...
நீ எங்களுடன் வாழ்ந்த அதிசயம்...

ராகங்கள் பதினாறு
உருவான வரலாறு
நீ பாடும் போதுதான்
தெளிவாய்த் தெரியும்...
இசை அறியாதவர் மனமும்
உன் பாடல்களில் இசைந்திருக்கும்...

ஆயிரந் தாமரை மொட்டுக்களே..
பனிவிழும் மலர்வனம்...
பொத்திவச்ச மல்லிகை மொட்டு
போன்ற பாடல்களில்
வள்ளுவனின் மூன்றாம்பால்
முழுமையும் அடக்கியவன் நீ...

நீ தோன்றும் மேடைகளில்
உன் பாடல்கள் அனைவரையும்
கவர்ந்து இழுக்கும்...
இடை இடையே நீ பகிரும்
தகவல்களில் சுவாரசியம்
நிறைந்து இருக்கும்...

நினைவாற்றலும்... நினைத்ததை
சுவையாய்ச் சொல்வதும்..
நகைச்சுவை உணர்வும்
விஷய ஞானமும்
பன் மொழிப் புலமையும்
உன்னை இன்னும் அலங்கரித்த
அழகான ஆபரணங்கள்...

உன் பாடல் ஒவ்வொன்றும்
ஒரு இனிய நந்தவனம்...
உன் மேடை ஒவ்வொறும்
ஒரு அழகிய பூங்காவனம்...

நீ பாடல்கள் பாடுவதில்
சகலகலா வல்லவன்...
சக மனிதர்களை மதித்து
நடப்பதில் மிக மிக நல்லவன்...

கவிஞர்களின் வார்த்தைகளில்
இசையமைப்பாளரின் ராகங்களில்
அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் மேல்
உன் குரலுக்குத்தான்
தேன் தடவத் தெரிந்திருக்கும்...

ஐம்பத்து நாலு வருஷமாய்
நீ பாடிய அத்தனை பாடல்களிலும்
நளினம் ஒன்று கலந்திருக்கும்...
அது உனக்கு மட்டுமே
இயல்பாய் வந்திருக்கும்...

'ஆயிரம் நிலவே வா'வில் இருந்த
அதே வசீகரம்
நான் தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரிலும்
இருந்ததும் ஒரு அதிசயம்...

சிறந்த பாடகர்.. நல்ல நடிகர்...
தேர்ந்த இசையமைப்பாளர்...
பின்னணி குரல் கொடுத்து
சினிமாவில் பன்முகம் காட்டியவர்..
உனைப்போல் யார் இங்கு
இனிமேல் வருவர்...

வெற்றி மீது வெற்றி வந்து
என்னைச் சேரும்... என்று
ஆறு தேசியவிருது வாங்கிய
உன்னை மிஞ்ச ஆளு இங்க யாரு...

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ..
பாடிய உன் குரலில்
இறுதி வரை இருந்தது
இளமையும்... இனிமையும்...

நீ எழுபத்தைந்தைத் தொட்டாலும்
உன் குரலை முதுமை தொடவில்லை...
இதை மறுப்பதற்கு
இங்கு யாருமில்லை...

உன் குரலில் நிலைத்த இளமையை
முதுமை தொட்டுவிடக் கூடாதென
நூறைத் தொடாமல்
எமைப் பிரிந்தாயோ...

பல குரல்களில் பாடி
மகிழ்விக்கும் வசீகரப் பாடகன்
எஸ்பிபி... உன் குரல்
ஓய்வு பெற்றது இன்று... எனினும்
பதிவு செய்த உன் பாடல்களில்
உனதினிய குரல் என்றும்
ஒலித்துக் கொண்டே இருக்கும்..

எஸ்.பி.பி... நீதான் எங்களுக்கு
பாடல்களின் ராஜாவும் மந்திரியும்..
உலகம் பரவிய பெரிய
ராஜ்ஜியம் உண்டு இங்கு
நீ என்றும் ஆள்வதற்கு...

பாடும் நிலா பாலு...
நீ எமைப் பிரிந்தாலும்
உந்தன் மூச்சும் உந்தன் பாட்டும்
அணையா விளக்கே...

எம் இனிய எஸ்.பி.பி...
உந்தன் தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வாய்...
மலர்ந்து கொண்டே இருப்பாய்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🙏👍💐🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (25-Sep-20, 6:07 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 229

மேலே