அகக் கண்
அகக் கண்
முகத்திருக்கும் இருவிழிகள் உலகம் அறியும்
மோதுகின்ற வேல்விழிகள் இளமை அறியும்
நகத்திருக்கும் நுண்கண்கள் மாவலி அறியும்
நாலுபேரின் கொள்ளிக்கண் தாயுளம் அறியும்
நுதலிருக்கும் நெற்றிக்கண் மதனுரு அறியும்
நுட்பமான ஊற்றுக்கண் மண்ணே அறியும்
புதலிருக்கும் புலியின்கண் மானே அறியும்
புவிமாந்தர் அகக்கண்ணை ஆரே அறிவார்?
உள்ளத்து உணர்வுகளை உலகில் பலரின்
ஒளியுண்ட இருகண்கள் உரத்துப் பேசும்
உள்ளத்தின் ஆழத்தில் உறைந்தே உள்ள
உணர்வுகளை அகக்கண்ணோ ஒளித்தே இருக்கும்
புறக்கண்கள் புன்சிரிப்புச் சிரிக்கும் பலரின்
புகைகின்ற அகக்கண்கள் சினந்தே நோக்கும்
பிறர்துயரைக் காணுகையில் வருந்தும் பலரின்
பின்புலத்து அகக்கண்கள் பெரிதாய் நகைக்கும்
அகந்தெளிந்த சான்றோர்க்கு அகத்தின் கண்ணில்
அறிவொளியும் அன்பொளியும் கலந்தே வீசும்
அகத்திலவர் கண்போல ஒருகுரல் வாசம்
ஆண்டவனின் குரலாயது அறமே பேசும்
முகத்தினிலே உணர்வுகளை மறைப்போர் தம்மை
மூத்தோர்தம் அகக்கண்ணால் அறிந்தே கொள்வார்
தகைமையொடு அவருக்கும் நன்றே செய்வார்
தம்அன்பின் திறத்தாலே அவரை வெல்வார்
இருவேறு நிலைதம்மை எண்ணிப் பார்ப்பீர்
எந்தநிலை நல்லநிலை என்றே அறிவீர்
புறக்கண்ணும் அகக்கண்ணும் ஒன்றாய் நோக்க
புவிவாழ்வில் அமைதியெனும் பூக்கள் மலரும்
ஒருமனதாய் உள்ளத்துள் உணர்வுகள் ஒன்ற
உள்ளுறையும் அகக்கண்ணில் ஒளிச்சுடர் தோன்றும்
அறநெறிக்குறள் அகிலத்தை உய்த்தல் போல
அகக்கண்ணின் ஒளியாலும் உலகே உய்யும்!