பவித்திரம் பேசி

மண்ணில் உதித்ததனால் என்னுள்
எண்ணங்கள் எத்தனையோ கோடி
கண்ணில் தெரிந்ததையெல்லாம்
கவர்ந்து தன்னதாய் ஆக்கிக்கொள்ள
தாராள மனம் தவிக்கின்றது ஏனோ?

புண்ணியங்கள் என்பதை புறந்தள்ளி
அறத்துக்கு எதிராக அணிவகுத்து
அவச்செயலால் அகிலத்தாரை மிரட்டி
அரைநொடிக்கொருமுறை திரவியம் குவிக்கும்
ஆட்சியாளராய் மாற ஆட்படுவது ஏனோ?

பொது வேலை எதுவென்றாலும்
புவனங்காக்கும் செயல் என்றாலும்
கவனமாய் அதை ஆய்ந்து கடமை செய்ய
மொத்த நிதியில் பாதியை பிரித்து
பவித்திரம் பேசி உருமாறுவது ஏனோ?

உழைப்பதற்கு மேல் செலவு செய்தோ
உழைப்புக்கு உகந்த ஊதியமின்றியோ
உள்ளத்தில் கோணலின்றி உள்ள
உலகத்து மாந்தர்களிடம் உண்மையைக்கூறி
உய்ய வழி செய்யாமல் உள்ளது ஏனோ?

உணவில் மருந்தில் உடைமைக்குரியதில்
கடுமையாய் கலப்படம் கண்டபடி செய்து
தரத்தைக் குறைத்து விலையை உயர்த்தி
நாடுயர நல்வழி செய்வதாய் பொய்யுரைக்கும்
கேடானோர் கையில் ஆட்சியிருப்பது ஏனோ?
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (29-Sep-20, 5:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே