ராஜாவும் சோதிடமும்

ராஜா ஒருவன் இருந்தான், அவன் சரியான சோதிட பைத்தியமும் கொண்டவன். ஒரு நாள் அரண்மனை சோதிடரை வர சொன்னான்.
அந்த சோதிடனும், அரசனின் பைத்திய காரணத்தை வைத்துதான்
தன் பிழைப்பை நடத்தி வந்தான்.

சோதிடரே, எனக்கு பேரும், புகழும் விரைந்து கிடைக்க, சோதிட
ரீதியாக வழி இருக்க என்றான். அவனும் யோசிப்பது போல் நடித்து
அரசே நீங்கள் காலையில் எழுந்தவுடன் இரண்டு காகங்களை
ஒன்றாக பார்த்தால் சிறப்பாக இருக்கும். மேலும் நீங்கள் நினைப்பது
போல் பேரும் புகழும் கிடைக்கும் என்று புளுகு மூட்டையை அள்ளி
விட்டான்.

ராஜாவும் மிகவும் சந்தோசம் அடைந்து, மந்திரியை அழைத்து
சோதிடர்க்கு பொன்னும் பொருளும் கொடுத்து மகிழ்வித்தார்.
அதன் பிறகு, காவலாளி ஒருவனை அழைத்து, நாளையில்
இருந்து காலையில் எங்காவது இரண்டு காகங்கள் ஒன்றாக
தென்பட்டால், உடனே தனக்கு தகவல் தர வேண்டும் என்று
கட்டளையிட்டான்.

அன்று முதல் அந்த காவலாளி தினமும் தேட ஆரம்பித்தான்.
ஒரு நாள் அரண்மனை அருகில், இரண்டு காகங்கள் ஒன்றாக
இருப்பதை பார்த்துவிட்டு, அரசனிடம் ஓடிப்போய் சொன்னான்.
அரசனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, காவலாளி சொன்ன
இடத்திற்கு போய் பார்த்தான். ஆனால், அரசன் பார்க்கும் போது
ஒரே ஒரு காக்கை மட்டும்தான் இருந்தது. உடனே காவலாளியை
பார்த்து கோவம் கொண்டு, மந்திரியை பார்த்து, பொய்யான தகவல்
கொடுத்த இவனுக்கு பத்து சவுக்கடி கொடுக்க உத்தரவிட்டான்.

அரசனின் அந்த உத்தரவை கேட்ட காவலாளி சிரி சிரியென்று
சிரித்தான். அரசனுக்கு மேலும் கோவம் அதிகமாகியது. மடையா
எதற்காக சிரித்தாய் என்று சரியான காரணம் சொல்லாவிட்டால்
இன்னும் பத்து சவுக்கடி தண்டனை என்றார். உடனே காவலாளி
அரசனை பார்த்து, மன்னா இரண்டு காகங்களை ஒன்றாக பார்த்த
எனக்கே கைமேல் நல்ல பலன் கிடைத்துவிட்டது. நீங்கள் அதை
பார்த்திருந்தால், அதன் பலன் தங்களுக்கு எப்படி கிடைத்து இருக்கும்
என்று நினைத்தேன், சிரித்தேன் என்றான். அரசனுக்கு சுருக்கென்று
உரைக்க, கூப்பிடுங்கள் அந்த சோதிடனை என்றான். ஆனால் அந்த
சோதிடனோ காக்கையை போல் பறந்து தப்பித்து விட்டான்.
அன்றிலிருந்து அரசனும் சோதிட மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்தான்.

வள்ளுவன் குறள் போல், கடவுளே என்று கூவி அழைப்பதால்
நடக்காத காரியமும்கூட ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்
போது அந்த உழைப்புக்கு ஏற்ற வெற்றியைத் தரும் என்பதுதான்
இந்த கதையின் கருத்து. இதனை நாம் அனைவரும் மனதில்
நிறுத்தி செயல்பட வேண்டும்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Sep-20, 7:26 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 204

மேலே