நட்ட கல்லும் பேசுமோ 5 அதியமானும் ஔவையும்

வில்லிலிருந்து கிளம்பிய அம்பினைப் போல தகடூரை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது அந்த செம்மண் படிந்த நீண்ட சாலை . சாலையின் இருபுறமும் செழிப்பான வயல் வெளிகள். அறுவடைக்குக் காத்திருக்கும் பொன்னிற நெல் மணிக் கொத்துக்களின் பாரம் தாங்காமல் நெற்பயிர்கள் ஒரு நிறைமாத கர்ப்பிணியின் அக்கரையுடன் காற்றிற்கு மெதுவாகச் சிணுங்கி அசைந்து கொடுத்தது. தூரத்தே கூட்டமாகத் தெரியும் பனை மரக்கீற்றுகளில் சூரிய ஒளி பட்டு வெள்ளியென மினு மினுத்தது. சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே காணப்படும் செழித்து வளர்ந்த உன்னம் மரத்தின் சிறிய இலைகளும் பொன்னிற மலர்களும் காண்போரை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்குக் காரணம் ஒரு அரசன் போருக்குச் செல்கையில் இந்த உன்னம் மரம் செழித்துக் காணப்பட்டால் வெற்றி நிச்சயம் கிட்டும் என்றும், அதே சமயம் வாடிக் காணப்பட்டால் தோல்வியே கிட்டும் என்றும் ஜோதிடர்கள் நிமித்தம் கூறுவார்கள்.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருந்த பாணன் ஒருவன் மன்னரைக் காண தகடூர் அரண்மனையை நோக்கி சென்றுகொண்டிருந்தான். அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலுள்ளவனாகவும் இருந்தான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கிணங்க பல மன்னர்களை சந்தித்து பரிசில்கள் பல பெற்றிருந்தான் அந்தப் பாணன். இடுப்பில் சொறுகி வைத்திருந்த சிறு வங்கியத்தை எடுத்து இசைத்துக்கொண்டே மிகுந்த உற்சாகத்துடன் அரண்மனையை நோக்கி நடந்தான்.

அப்போது அந்த வழியிலே சென்றுகொண்டிருந்த முதியவள் ஒருவள் பாணனின் கவனத்தைத் தன் பக்கம் திசை திருப்ப கையில் இருக்கும் குச்சியை தரையில் வேகமாகத் தட்டி ஒலி எழுப்பினாள். அதைக் கேட்ட பாணன் திரும்பிப் பார்த்தான். ஔவையைக் கண்டவன் வியப்பிலாழ்ந்தான். உடனே அவள் கால்களில் விழுந்து வணங்கினான். “ ஔவையே என் பெயர் கார் மேகன். கிள்ளியூரிலிருந்து வருகிறேன். அதியமான் நெடுமான் அஞ்சியைக் காண சென்று கொண்டிருக்கிறேன். மன்னரைப் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியுமாதலால் தங்களிடமிருந்து அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்” என்று மிகவும் பணிவாக ஔவையின் முன் நின்றான். “நானும் மன்னரைக் காண அரண்மனைக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறேன். வா, இருவரும் பேசிக்கொண்டே நடந்து போகலாம். என்ன ஒரு சுட்டெரிக்கும் வெய்யில்! என் நா வரண்டே போய்விட்டது, அருகில் ஏதாவது நெல்லி மரம் இருக்கிறதா என்று பார்த்துக்கோண்டே வா கார்மேகா” என்றாள் ஔவை.

ஔவை அதியமானைப் பற்றி கூற ஆரம்பித்தாள். “இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய அதியர் மரபினைச் சார்ந்தவர்கள். ஒரு காலத்தில் அதியர் மரபினர் சேர வம்சத்தின் கிளைக்குடிகளாக கருதப்பட்டனர். பின் நாளில் அவர்கள் தனிக் கிளையாகப் பிரிந்து நாடாளும் உரிமையை மேற்கொண்டிருந்தாலும் அவர்களுக்குரிய பனம்பூ மாலையையே அணிந்து கொண்டார்கள். அந்த வம்சாவெளியிலிருந்து வந்தவர்தான் நம் அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி . இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். மற்ற அறுவர் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று ஔவை கேட்க கார்மேகனும் சிறிய யோசனைக்குப் பிறகு கூற ஆரம்பித்தான். “அவர்கள் முறையே பாரி, ஓரி, ஆய் அண்டிரன், திருமுடிக்காரி, நள்ளி மற்றும்………………………” என்று கார்மேகன் தடுமாறினான். ஔவை தன் கையில் இருக்கும் பிரம்பால் செல்லமாக அவன் தோளைத் தட்டி “என்ன கார்மேகா, பேகனை விட்டு விட்டாயே! ஏன் அவனிடம் பாடி பரிசில் எதுவும் பெறவில்லையா” என்று கூற வெட்கிச் சிரித்து தலை கவிழ்த்தான் கார்மேகன்.

“நம் மன்னரை அதியமான் நெடுமான் அஞ்சி எனவும் தகடூர் போருதுவீழ்ந்த எழினி என்றும் சான்றோர்கள் அழைப்பார்கள். அது சரி, நீ எதற்கு மன்னரைக் காணவந்திருக்கிறாய்?” என்று ஔவை கேட்க, கார் மேகன் ஒன்றும் கூறாது சிரித்தான். பல முறை மன்னரைக் காண ஔவை வந்திருக்கிறாள் என்பதை அறிந்த கார்மேகன் “ எனில் அரசர் உங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருப்பார்தானே” என்றான். அதற்கு ஒன்றும் கூறாமல் சிறிது தூரம் சென்ற ஔவை களைப்பு மிகுதியால் சாலையின் ஓரத்தில் இருக்கும் ஆலமர நிழலில் அமர்ந்தாள். “இது நாள் வரை நான் எந்தப் பரிசிலையும் மன்னனிடம் இருந்து பெற்றதில்லை கார்மேகா. அதில் எனக்கு ஆகபெரிய வருத்தம் துளியும் இல்லை. யானையின் கொம்பிடை வைத்த உணவு எப்படி யானைக்குத் தப்பாதோ அது போலத் தப்பாமல் அந்தப் பரிசு எனக்கு ஒரு நாள் அறுதியாகக் கிட்டும்” என்று கார்மேகனிடம் கூறினாள்.

இருவரும் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். கார் மேகன் வழியில் இருக்கும் நெல்லி மரத்தைப் பார்த்தவுடன் அதைக் குலுக்கி பழுத்து உதிர்ந்த கனிகளை உள்ளங்கைகள் நிறைய எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். நெல்லிக்கனிகளின் சற்றே அதிகமான புளிப்புச் சுவையால் கண்களை சுறுக்கிக்கொண்டு சாப்பிடும் ஔவையைப் பார்த்து கார்மேகன் சிரித்தான். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை காய்க்கும் அபூர்வ சுவைமிக்க நெல்லிக்கனியை அதியமான் நெடுமான் அஞ்சி விரைவிலேயே தன் கைகளால் ஔவையிடம் கொடுத்து ஒரு நாள் உண்ணச் செல்லுவான் என்று இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

இந்த முறையும் எதையும் எதிர்பார்க்காமல் மன்னனை வாழ்த்திப் பாடிவிட்டு ஔவை கிளம்ப முற்படும் போது கார் மேகன் அரசன் தனக்கு பரிசாகக் கொடுத்த முத்து மாலையை மகிழ்ச்சியுடன் அவளிடம் காண்பித்தான். “நான் தான் உன்னிடம் அப்போதே கூறினேனே. அதியமானிடம் பரிசில் வேண்டி வருவோர் எவரும் வெற்று கரங்களோடு வீடு திரும்பமாட்டார்கள்” என்று கூறிய ஔவை பாடிக்கொண்டே அரண்மனை வாயிலை அடைந்தாள். வாயிற்காவலில் நிற்பவன் ஔவைக்கு மிகவும் பரிச்சயமானவன். இந்த முறையும் ஔவை எந்தப் பரிசிலும் பெறாமல் செல்வதைக் கண்டவன் “ஔவையே மன்னர் தாங்களை அடிக்கடி காணவேண்டும் என்பதால்தானோ என்னவோ உங்களை வெறும்கையுடன் அனுப்புகிறார். ஆதலால் தாங்கள் தகடூரிலேயே நிரந்தரமாக தங்கிவிடுங்கள்” என்றான்.


அதியமானின் நெருக்கமான நண்பன் ஒருவன் கொல்லி மலையை ஆண்டுவந்தான். அவன் பெயர் வல்வில் ஓரி. மிகச் சிறந்த வீரன். இவன் வேட்டையாடும் போது அவன் தொடுத்த வில்லின் அம்பானது, முதலில் யானையை வீழ்த்துமாம். பிறகு புலி, மான், பன்றியைக் கொன்று வீழ்த்தி இறுதியில் புற்றில் இருக்கும் உடும்பின் உடலில் புதைந்து நிற்குமாம். இவனுடைய கொடைத் திறன் பற்றிக் கூறும் போது பொன்னரி மாலையும், கலன்களையும், களிறுகளையும் பெற்ற பாணர்கள் பசியாறிய பின்னர் அவர்கள் தமக்குரிய பாடலையும் ஆடலையும் மறந்தொழிந்தனர் என்பார்கள். அதே சமயம் திருக்கோவலூரில் காரி என்ற மற்றொரு வள்ளல் இருந்தான். அவன் மன்னர்களுக்குத் துணையாக போரிட்டு அவர்களை வெற்றி பெற வைத்திடுவான்.

சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லி மலையை தன் ஆட்சிக்குள் கொண்டு வர காரியின் உதவியை நாடினான். சேர நாட்டை ஒப்பிடுகையில் ஓரியின் நாடு மிகச் சிறியது என்றபடியால் காரி தன்னிடம் இருக்கும் போர் வீரர்களுடன் சென்று போரிட்டான். பெருஞ்சேரல் இரும்பொறையும் இதற்கு ஒப்புக்கொண்டான். அதன்படி காரி ஓரியின் கொல்லிமலையைக் கைப்பற்றி சேரமன்னனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது ஒப்பந்தம். அப்போரில் ஓரி உயிர் இழந்தான். இதைக் கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் அதியமான் வெகுண்டெழுந்தான். சேர மன்னனும் இதற்கு உடந்தை எனக் கேள்விப்பட்டவுடன் வெஞ்சினம் கொண்டான்.

அதியமான் காரி வாழ்ந்த திருக்கோவலூரின் மேல் படையேடுத்தான். அதியமான் பெரும் படையின் முன்னால் காரியால் ஒன்றும் செய்யமுடியாமல் போர்க்களத்திலிருந்தே ஓடிவிட்டான். காரியும் சேர மன்னனும் ஒன்றாகச் சேர்ந்து அதியமானுடன் மீண்டும் போரிடத் திட்டமிட்டு களம் இறங்கினார்கள். ஆனால் அதியமான் அவர்களுடன் போர் புரிய விரும்பவில்லை. அவனுடைய வலிமையான கோட்டையே அவனுக்கு பெரும் அரணாக இருந்தது. பகைவர்களால் அழிப்பதற்கரியது. கோட்டையின் வாயிலை மூடினான். கோட்டைக்குள் நுழையமுடியாமல் பகைவர்கள் பின்வாங்கிவிடுவார்கள் என நினைத்தான். கோட்டையில் இருந்து ரகசிய சுரங்கப் பாதை வழியாக அதியமானின் நம்பிக்கைக்கு உரிய ஆட்களின் மூலம் உணவுப் பொருட்களை கோட்டையின் உள்ளே கொண்டுவர ஏற்பாடாகியது. இந்த ரகசிய வழியை எப்படியோ ஒற்றர்கள் மூலம் அறிந்த சேர மன்னன் அதை அடைத்துவிட்டான்.

சிங்கமென கர்ஜித்து வெளியே வந்த அதியமான் எதிரி படைகளை நெருக்கு நேர் எதிர்கொண்டான். போர் பல நாட்கள் நீடித்தது. தகடூர் போர் வீரர்களின் நுட்பமான வாள் வீச்சால் தான் எங்கே துண்டாடப்படுவோமென்று அஞ்சிய ஆதவன் விரைவாக மேற்கில் வழிந்திரங்க போருக்கான பகல் வேளை குறைந்து போல தகடூர் மக்களுக்குத் தோன்றியது. மதர்த்த களிறுகள் ஒன்றோடொன்று மோதி இடியையொத்த ஒலி எழுப்ப மேகங்கள் இல்லா வானத்தில் பறக்கும் பறவைகள் பெரும் குழப்பத்திற்குள்ளானது. அதியமானின் பாசறையில் நுனி பிளந்த வேல்களும், செப்பனிடவேண்டிய வாள்களும் ஒரு சிறிய குன்றினைப் போல உயர்ந்து நிற்க அதன் மாலை நிழல் கிழக்கு நோக்கி வெகு தூரம் தனியாகப் பயணித்தது.

யாருக்கு வெற்றி தோல்வி என தீர்மானிக்க முடியாமல் போர் நீண்டுகொண்டே போனது. அரண்மனை ஜோசியர்கள் அதியமானின் பிறந்த நட்சத்திரத்தையும் நாளையும் கணக்கில் வைத்து பல முறை ஆரூடம் கணித்தார்கள். தோற்றத்தில் அனைவரைப் பார்க்கிலும் மிகவும் இளையவனாய் இருந்த ஒருவன் சாளரத்தின் வழியாகத் தெரியும் உன்னம் மரத்தை காண்பித்தான். காய்ந்து உதிர்ந்த பூக்களையும், சருகாகிப்போன இலைகளையும் காணச் சகியாமல் அனைவரும் வாய் பொத்தி திகைப்பிலாழ்ந்தார்கள்.

அந்த நாளும் வந்தது. அளவில் பெரிதான சேரன் படை முன்னறியது.இறுதியில் அதியமானின் படை தோற்றது. ஒரு வீரன் எறிந்த வேல் அதியமானின் மார்பிலே பாய அவன் மலையைப் போலச் சரிந்தான். அசோகரால் குறிப்பிடப்படும் சத்யபுத்ர மரபில் வந்த அதியமான் நெடுமானஞ்சி சேரர்களுடன் போரிட்டு இறந்து நடுகல்லாகினான். இதை அறிந்த ஔவ்வை அழுது புலம்பினாள். இதற்கு முன்பு ஒரு சமயம் நடைபெற்ற போரில் அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்று வெற்றி வாகை சூடியிருந்தது அவளின் நினைவிற்கு அப்போது வந்தது. அந்தப் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு முகத்திலும், மார்பிலும் விழுப்புண்பட்டிருந்த அதியமானைக் கண்டு ஔவை பெருமகிழ்ச்சி அடைந்தாள். அவனால் தோல்வியைத் தழுவிக்கொண்ட எதிரிகள் நான்கு திசைககளிலும் சிதறியோடினர். எதிரி மன்னனும் போர்க்களத்திலேயே இறந்தான். அவன் அவ்வாறு இறந்ததால் விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் பெரும் இழிவிலிருந்து அவனை அதியமான் காப்பாற்றியதாக புகழாரம் சூட்டினாள் . இனி போர் நடக்க வாய்ப்பில்லாமல் போக அதியமான் மீண்டும் பேரிட்டு வெற்றி பெறுதல் சாத்தியமில்லாமல் போயிற்றே என்று பாடியது அவளுக்கு மீண்டும் நினைவிற்கு வர பெரும் துக்கத்தில் திகப்புற்று செய்வதறியாது குழம்பினாள்.

புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற அதியமானின் உயிரற்ற உடலை பார்க்கச் சகியாமல் துக்கித்து வாய் பொத்தி அந்த இடத்தைக் கடந்து போனான் சேர மன்னன் இரும்பொறை. புலவர்கள் அழுது புலம்பினார்கள். அதியமானை போர்க்களத்தில் அவன் மாண்ட இடத்திலேயே எரித்து நடுகல்லை நட்டு வழிபட்டார்கள். தெய்வமாகிபோனான் நம் அதியமான் என்று வீரர்கள் குரலெழுப்பினார்கள். ஔவ்வை புலம்பினாள். ஆவேசப்பட்டாள். ஒரு நாளைக்கு எட்டு தேர்களை முழுவதுமாக வடிவமைக்கும் திறமைமிக்க தச்சன் ஒருவனால் தேர்க்கால் சக்கரத்தை மட்டும் வடிவமைக்க ஒரு மாதகாலம் செலவிட்டு செய்த தேரின் வலிமையை ஒத்த அதியமானின் வீரத்தை நேரில் கண்டவள் அவள். அவளுக்கு அதியனின் மரணம் பெரும் இழப்பையும் தாங்கொணா மன உளைச்சலையும் கொடுத்தது. அவளின் கையறு நிலையை பாட்டாகக் கொட்டித் தீர்த்தாள்.


“கையளவு மதுவைப் பெற்றாலும், உவப்புடன் எங்களுக்கு கொடுத்திடுவானே! ஆந்நிலையும் போயிற்றே!

பெரிய அளவில் பெற்றால், யான் உண்டு மகிழ்ந்ததை பார்த்து உடன் கொஞ்சம் அருந்துவானே! அந்நிலையும் போயிற்றே!

பிடி சேறு என்றாலும், பலருக்கும் பகிர்ந்தளிப்பானே! அந்தோ! அந்நிலையும் போயிற்றே!

சோற்றினிடையில், எலும்பும் ஊனும் தட்டுப்பட்டால் அதை நமக்கு உண்ணக் கொடுப்பானே! அதுவும் இல்லையென்றயாயிற்றே!

அம்போடு வேல் பாயும், போர்க்களங்களில் நம் துணையாக நிற்பானே! அந்நிலையும் போயிற்றே!

நரந்தப் பூ மணம் வீசும் அவனுடைய கையால் புலால் நாறும் என் தலையை பாசத்துடன் தடவிக்கொடுப்பானே! அதுவும் இனி நிகழாததாயிற்றே!

அவனின் கரிய மார்பில் தைத்த வேல், அருங்கலை வளர்க்கும் பாணர்களின் கையில் உள்ள பாத்திரத்துடன் அவர்களின் கைகளையும் துளைத்து சான்றோர்களின் நாவிலும் தைத்ததே!.

இனி பாடுகின்றவரும் இல்லையே! பாடுகின்றவர்களுக்கு ஈவாரும் இல்லை என்றானதே!”

எழுதியவர் : பிரேம பிரபா (30-Sep-20, 7:09 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 183

மேலே