நட்ட கல்லும் பேசுமோ 7ரண கீர்த்தி_ஆமர்கழி

வானவ மாதேவி அன்று ஏனோ இனம் புரியாத குழப்பத்திற்கு ஆட்பட்டிருந்தாள். குழம்பிய மனதில் தெளிவிருக்காது என்பதற்கிணங்க அன்புடன் உணவு படைக்கும் தாதிமார்களிடம் எரிந்து விழுந்தாள். தான் செய்வது தவறு என்று உணர்ந்தும் தன் தற்போதைய நிலைக்குக் காரணத்தை கண்டறிய இயலாமல் நிலை தடுமாறினாள்.
அரசரைக் கண்டு பத்து தினங்களுக்கு மேலாகிவிட்டதால் அதற்கான காரணத்தை யாரிடம் கேட்கலாம் என்று மறுகிக்கொண்டிருந்தாள். தன் நெருங்கிய அந்தரங்க தோழியிடம் கேட்டால் என்ன என்று முதலில் யோசித்தாள். அவளுக்கு அந்தப்புரமே அனைத்துமென்றாகிப்போக வெளியுலகத்தில் நடக்கும் செய்திகளைப் பற்றி அவளிடம் கேட்டு எந்தவிதப் பயனும் இல்லை என்ற முடிவிற்கு வந்தாள். அடுத்து தலைமைத் தாதியிடம் காரண கேட்க நினைத்தாள். அப்படிக் கேட்டால் தனக்காக அனைவரையும் அழைத்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே நடத்திவிடுவாள் என்பதினால் அந்த முயற்சியையும் கைவிட்டாள். அப்போதுதான் அவளுக்கு அரசரின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அந்தப்புர சேவகன் அமர்கழி நினைவிற்கு வந்தான். உண்மையில் "சேவகர்" என்ற சொல்லானது உயர் பதவி வகித்த மறவர்களையே பெரும்பாலும் குறிக்கும். இவர்கள் அரசர்களிடம் மெய்க்காப்பாளராகவோ, படைத்தலைவராகவோ, சிற்றரசர்களாகவோ கூட இருந்துள்ளனர்.
அமர்கழி அன்றிரவு அந்தப்புரத்தில் கேட்ட வழக்கத்திற்கு மாறான சப்தத்தைப்பற்றி அங்கு பணி புரியும் பெண் ஏவலாளிகளிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தான். முக்கியமாக சமீபத்தில் பணிக்குச் சேர்ந்த ஒரு சிலரையும் கடுமையான விசாரணைக்குட்படுத்தினான். பாதுகாப்பு கருதி அந்தப்புர காவலிற்கு வழக்கத்திற்கு மாறாக மேலும் பலரை நியமித்திருந்தான்.
அப்போது வானவ மாதேவியின் அந்தரங்கத் தோழி அமர்கழியைப் பார்க்க வந்தாள். மகாராணியின் நிலை பற்றிக் கூறினாள். அனைத்தையும் கேட்ட அமர்கழி அளவான புன்சிரிப்புடன் தோழியைத் தொடர்ந்து அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.
“அமர்கழி, அரசர் ஏதோ மிகந்த துக்கத்துடன் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. ஏதேனும் நாட்டில் பிரச்சினையா? நிலை கொள்ளாமல் குழம்பித் தவிக்கிறேன் நான்” என்றாள் வானவ மாதேவி. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலை பற்றி மகாராணியிடம் கூறலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து மீள ஒரு சில நொடிகள் எடுத்துக்கொண்ட அமர்கழி ராஜ்ஜிய பரிபாலன விஷயங்களைப் பற்றி அரசரே ராணியாரிடம் கூறுவதுதான் சரியாக இருக்கும் என்று தீர்மானித்தான். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மகாராணி. அதிக பணி நிமித்தம் அரசர் சற்று களைப்படைந்திருக்கலாம். தாங்கள் இந்த அளவிற்கு வருத்தப்பட எதுவும் நடக்கவில்லை” என்று கூறினான். அமர்கழியின் பதிலில் திருப்தியடையாத வானவ மாதேவி “ நான் ஏற்கனவே உன்னிடம் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன். ராஜ விசுவாசியான நீ அவ்வளவு எளிதில் ரகசியங்களைக் கூறுவிடுவாயா என்ன?” என்று அவனைப் போக அனுமதித்தாள்.
அன்று இரவு பாண்டிய மன்னன் பராந்தக வீர நாராயணன் அந்தப்புரத்திற்கு வருவதிற்கான ஆயத்தப் பணிகள் குறித்து முன்னெச்சறிக்கையாக சில நடவடிக்கைகளை அமர்கழி எடுத்திருந்தான். மன்னர் அந்தப்புரத்தில் தங்கும் நேரம், அவர் விரும்பி உண்ணும் உணவு, என்று அனைத்தையும் முன் கூட்டியே தீர்மானித்தான். அந்தப்புரத்தில் இருக்கும் தலைமைத் தாதியிடம் தந்தத்தினால் ஆன சதுரங்கப் பலகையில் காய்களை அடுக்கி மன்னரின் பார்வையில் படுமாறு வைக்கச் சொன்னான். அந்தப்புரக் காவலன் அமர்கழி, மன்னரின் நம்பிக்கைக்கு உரிய இரண கீர்த்தி மற்றும் அரசரின் பாதுகாப்பு கருதி பயிற்சி பெற்ற சில வீரர்களுடன் மன்னர் பராந்தக வீர நாராயணன் வானவ மாதேவியைக் காண அந்தப்புரத்திற்கு வந்தார்.
இரண கீர்த்தியையும் அமர்கழியையும் தவிர்த்து அனைவரையும் வெளியே காத்திருக்கச் சொன்ன மன்னன் தன் தேவியின் வாடிய முகம் காண வருத்தமுற்றார். அருகில் இருக்கும் சதுரங்கப்பலகையில் இருக்கும் காயை முதலில் நகர்த்தி வானவ மாதேவியைப் பார்க்க அவளும் அவள் பங்கிற்கு எதிர் திசையில் மறு காயை நகர்த்தினாள். சிறிது நேர விளையாட்டிற்குப் பிறகு பழச்சாறு கொண்டு வந்த வானவ மாதேவியை முதன் முதலாகப் பார்ப்பது போலப் பார்த்தார். அவளின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு அருகில் வந்து அமரச் சொன்னார். “திருப்புறம்பியம் போர் முடிந்து இப்போது தான், அண்ணன் இரண்டாம் வரகுணனிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டது போல இருக்கிறது. அதற்குள் இருபத்தி ஏழு ஆண்டுகள் ஆகப்போகிறது. நாட்கள்தான் எப்படி இறக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது பார்த்தாயா தேவி?” என்றார். அதற்கு வானவ மாதேவி பதில் ஏதும் கூறாமல் திருப்புறம்பியம் போர் பற்றி மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்தாள்.
கொள்ளிடத்தின் கரையில் இருக்கும் திருப்புறம்பியம் என்ற இடத்தில்தான் பல்லவ மன்னன் அபராசிதவர்மனுக்கும் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885 ஆண்டில் போர் நடந்தது. இதில் ஆதித்த சோழன், மற்றும் கங்க மன்னன் முதலாம் பிரதிவிபதி பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்து போர் புரிந்தார்கள். இறுதியில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன் தோற்றான். இந்தத் தோல்வியினால் பெரிதும் மனமுடைந்த இரண்டாம் வரகுணன் தன் இளைய சகோதரன் பராந்தக வீர நாராயணனிடன் ஆட்சிப் பொறுப்பை அளித்துவிட்டு சிவ தர்மத்தில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டான். இவையனைத்தும் நடந்து முடிந்து இருபத்தி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது.
“நான் உன்னிடம் ஒன்றைக் கூற மறந்துவிட்டேன் தேவி. சேரமான் பெருமான் நாயனார் நம் நாட்டின் மேல் போர் தொடுப்பதற்கான ரகசியப்பணிகளைச் செய்வதாக நம் ஒற்றர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதற்கான வேலைகளில் நான் நேரடியாக ஈடுபடவேண்டியிருந்ததால்தான் மகாராணியைக் காண சிறிது தாமதமானது” என்றார். “நீங்கள் நினைப்பது போல் அப்படியெல்லாம் இல்லை அரசே. அமர்கழி என்னிடம் தங்களைப் பற்றி அவ்வப்போது கூறிக்கொண்டுதான் இருக்கிறான்” என்று அவனைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். இதைக் கவனித்த இரண கீர்த்தி அரசிக்கும் அமர் கழிக்கும் இடையில் உரிமையுடன் நடந்து கொண்டிருக்கும் ரகசியச் சீண்டலை ரசித்தவாறே அமைதியாக நின்று கொண்டிருந்தான். அரசர் விடைபெறும் போது அவரின் சால்வையின் நுனி, காற்றில் பறந்து சதுரங்கப் பலகையில் அவர் பக்கம் இருக்கும் இரண்டு கோட்டைகளை கீழே தட்டிவிட யாரும் அறியாதவாறு வானவ மாதேவி அதை மீண்டும் சதுரங்கப் பலகையில் எடுத்து வைத்தாள்.
அந்த நாளும் வந்தது. சேரமான் பெருமாள் நாயனார் பாண்டிய மன்னர் பராந்தக வீர நாராயணனுடன் போர் புரிய நாளையும் தீர்மானித்து பறையறிவிப்பும் செய்துவிட்டார். முதல் கட்டமாக சேரனின் படைகள் கரைக்கோட்டையை முற்றுகையிட்டது. சேரனின் படைகள் புற்றீசலைப் போல கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டனர். கோட்டை மதிலைச் சுற்றி வளைத்த உழிஞைத் திணை வீரர்களை கோட்டைக்குள் புகாமல் தடுத்து பாண்டிய வீரர்கள் போரிட்டார்கள் . அப்படி போரிடும் போது பகைவருக்கு எதிராக தம்முடைய மதிலைக் காத்து நிற்கும் நொச்சித் திணை வீரர்கள் கழுத்தில் நொச்சி மாலையைச் சூடி போர் புரிந்தார்கள். மதிலைச்சுற்றி இருக்கும் அகழிகள் மதிலைப்பிடிக்க வரும் வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக பல தடைகளுடன் அமைந்திருக்கும். எனவே, இவ்வகழிகளை பாண்டிய வீரர்கள் அழிக்காது போரிடுவார்கள்.
பாண்டிய மன்னனின் பிரியத்திற்கு நம்பிக்கைக்கும் ஆளான இரண கீர்த்தியும், அமர்கழி என்ற உள்வீட்டு சேவகனும் கோட்டை அழியாது காப்பதற்காக உக்கிரமான எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இவர்கள் தங்கள் கணைகளால் பல சேர வீர்ர்களை கொன்று சாய்த்தனர். கோட்டை மதிலில் ஏற முயன்ற பலரின் முயற்சிகளை இந்த இருவீரர்கள் வெகு திறமையாக முறியடித்தர்கள்.
சில சேர வீரர்கள் அகழிக்கு அப்பால் நின்று கொண்டு தங்களின் வீரத்தை பெருமையாகப் பிதற்றிக்கொண்டும் அதே சமயம் பாண்டியர்களின் வீரத்தை இழிவாகப் பேசிக்கொண்டும் அவர்களை வீண் வம்பிற்கு இழுத்தார்கள். கோட்டையின் பிரதான வாயிலில் நின்று கொண்டிருந்த பாண்டிய வீரர்கள் எதற்கும் உணர்ச்சிவயப்படாமல் படைத் தளபதிகள் தங்களுக்கு பணித்த கட்டளையை மட்டும் சிரமேற்று நிறைவேற்றிக்கொண்டிருந்தார்கள்.
அகழியைத் தாண்டி கோட்டை வாயிலை இணைக்கும் மரப் பாலத்தை கோட்டை வாயிலுடன் சேர்த்து உயர்த்திக் கட்டியிருந்தார்கள். அதன் மேல் பல திசைகளிலிருந்து பாய்ந்த அம்புகளும் வேல்களும் ஈட்டிகளும் முனை பிளந்து ஒரு சிறிய மலைபோல் குவிந்திருந்தது. கோட்டை மதில் சுவர்களிலிருந்து பாண்டியர்களின் அம்புகள் வெடித்துச் சிதறும் எரிமலையின் வாயிலிருந்து சீறிக் கிளம்பும் அக்கினிச் சுவாலையை ஒத்திருந்தது. போரின் இரைச்சலுடன் ஒத்திசைவில்லாமல் தயங்கியபடி விழுந்த மழைத் துளிகள் படை வீரர்களின் கேடயங்களில் பட்டு ஆவியாகப் போனது.
அந்தப்புரத்தில் வழமைக்கு மாறான அசௌகரியமான அமைதி சூழ்ந்திருந்தது. குறுக்கும் நெடுக்குமாக தேனீக்களின் சுறுசுறுப்புடன் வலம் வரும் சேடிப் பெண்களின் வளையல் ஓசை கேட்கவில்லை. அரசர் அந்தப்புரத்திலிருந்து கிளம்பும் போது சதுரங்கப் பலகையிலிருந்து கீழே விழுந்த இரண்டு காய்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வானவ மாதேவி மெலிதாக நடுங்க ஆரம்பித்தாள். அரசர் வெற்றி வாகை சூடவும், அவரின் மெய் சேவகர்களான இரண கீர்த்திக்கும் அமர் கழிக்கும் தான் அஞ்சுவது போல ஏதும் நடந்துவிடக்கூடாது என்று மனதுருக வேண்டிக்கொண்டாள். தலைமைத் தாதி அனைத்து வேலைகளையும் மற்றவர்களிடம் பங்களித்துவிட்டு வானவ மாதேவியை விட்டுப்பிரியாமல் அவளுடனேயே இருந்து அதிக அக்கரையுடன் கவனித்துக்கொண்டாள். அடிக்கடி போர் பற்றிய செய்திகளை முழுவதும் கேட்டறிந்து பக்குவத்துடன் வேண்டுமளவு மட்டும் வானவ மாதேவியுடன் பகிர்ந்துகொண்டாள்.
மேற்கில் ஆதவன் மறைவதற்கான முதல் முயற்சியாக மேகத்தினை சென்னிறமாக்கியது. பின் முரசறைந்து போரை நிறுத்தினார்கள். சூரைக்காற்றுடன் மழை தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்தது. நன்பகற் பொழுதில் முரலாத தும்பிகள் இப்போது வந்து ஒலித்தன. அந்தப்புர மாடத்தில் இருக்கும் விளக்கு காற்றில் தடுமாற உயர்ந்த மரத்தில் இருந்து கூகை குழறியது. நிலை கொள்ளாது தடுமாற்றத்துடன் வானவ மாதேவி தலைமைத்தாதியின் அருகில் வந்து என்னையும் அறியாமல் எனக்கு உறக்கமுண்டாகிறது“ என்று கூறி அவளின் மடியில் ஒரு குழந்தையைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டாள். தலைமைத் தாதி அவளின் தலையை பாசமாக கோதிவிட்டுக்கொண்டே “நம் சேவகர்கள் இரண கீர்த்தி, அமர்கழி இருக்கும் வரை நம் அரசரை எவராலும் எதுவும் செய்யமுடியாது. எதற்கும் கலங்காதே” என்று தைரியம் வளர்த்தாள். தூரத்தே துடி, முரசம், வளை, வயிர் இசைக்கருவிகள் முழங்கும் சப்தம் குறைந்துகொண்டே வந்தது. மழையில் நனைந்துகொண்டே வீரன் ஒருவன் அந்தபுர வாயிலில் அனுமதிக்காகக் காத்திருந்தான். இதைக் கேள்விப்பட்ட தலைமைத் தாதி போர் வீரனை அங்கேயே காத்திருக்க பணித்தாள். இந்த செய்தியை அந்தப்புரத்தில் இருக்கும் மற்ற எவரிடமும் கூறக்கூடாது என்று எச்சரிக்கைசெய்து அனுப்பினாள். வானவமாதேவி துயில் கலைந்த பிறகு அவளிடம் பக்குவமாக இந்தச் செய்தியைக் கூறவேண்டும் என்று தீர்மானித்து அவளைக் காண வந்தாள்.
“மகாராணி அவர்களின் சமூகத்திற்கு என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள். அரசரிடம் இருந்து முக்கியமான செய்தி ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று அரசியின் அனுமதிக்காகக் காத்திருந்தான் அந்தப் படைவீரன். “கொழுவூர்க்கூற்றத்தின் பெருந்தலைவனாக இருந்த பொருமூர்த்தி என்பவன் இரண கீர்த்தி மற்றும் அமர்கழி இருவரையும் குத்திக்கொன்றுவிட்டான்”. இதைக் கேட்ட வானவ மாதேவி திடுக்கிட்டு துயில் கலைந்து தான் கண்டது கனவு என்று அறிந்து கண் விழித்தபோது போது தலைமைத் தாதி அவள் முன் தயங்கியபடி நின்றிருந்தாள்.
(பராந்தகன் வீரநாராயணனுடைய 27வது ஆட்சியாண்டில், சேரமான் பெருமாள் நாயனார் (63 நாயன்மார்களில் ஒருவர்) பாண்டியருடன் போரிட்டார். சேரமானின் படைகள் கரைக்கோட்டை என்னும் கோட்டையை அழிக்கச்சென்றன. அதைக்காத்து எதிர்ப்படையினரை பாண்டியப்படை கொன்றன. இது மதில்போராகும். சேரவீரர்களில் ரணகீர்த்தி -அமர்க்கழி என இருவரும் சேவகர்களாக இருந்தனர். பாண்டியப்படையின் பெருமூர்த்தி என்பவர்தான் இங்கு கொழுவூர்க்கூற்றத்தின் பெருந்தலைவனாக இருந்தவன்.இவன் மேற்கண்ட சேவகர்களை குத்திக் கொன்றொழித்தான்.ரணகீர்த்தியின் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டது)

எழுதியவர் : பிரேம பிரபா (30-Sep-20, 7:11 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 50

மேலே