மானிட சமூக ஆராய்ச்சியியல்

மானிட சமூக ஆராய்ச்சியியல் – அவதானிப்பு மற்றும் ஆய்வுகள்.

1. முகவுரை

இன்றைய மருத்துவ உலகம் ஒரு கருத்தையோ மருந்தையோ நன்கு பரிசோதித்து உண்மையை நேருக்கு நேர் அறிந்த பிறகுதான் பயன்படுத்த விரும்புகிறது. “இதுதான் பாரம்பரியமாக உபயோகிக்கப்படுகிறது; இவர் சொன்னார்; அவர் சொன்னார்” போன்ற நம்பிக்கை அடிப்படையிலான வாதங்களை அது ஏற்கத் தயாராக இல்லை.

ஒரு மருந்தை சோதனைக் கூடத்தில் பல பௌதிக, ரசாயண ஆராய்ச்சிகள் செய்த பிறகு, அந்த மருந்தை சோதனை விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்க்கிறோம். கிடைத்த சோதனை முடிவுகளை அப்படியே மனிதர்களுக்குப் பொருத்திப் பார்க்கிறபோது பல முரண்பாடுகள் எழுகின்றன. ஏனென்றால் மனிதர்களின் உடலமைப்பு, உயிர் வேதி வினைகள், சமூகப் பழக்கம் ஆகியவை விலங்குகளிலிருந்து மாறுபட்டவை. ஆகையால் சில மனிதர்களை வைத்து ஆராய்ச்சியைத் தொடர வேண்டியிருக்கிறது. இதில் மனிதர்கள் மேல் ஆராய்ச்சி நடத்தும்போது மனிதாபிமானம் சார்ந்த விஷயங்கள் (ethical issues) வந்து விடுகின்றன. (Ethical issue என்பதற்கு அறம் சார்ந்த விஷயங்கள் என்று பொருள். நம் பண்பாட்டின்படி அறம் என்பது மனிதர்களுக்கு மட்டும் பொருந்துவதன்று; பிற உயிர்களுக்கும் ஏன் இந்த உலக முழுமைக்குமே பொருந்துகிற நிலைப்பாடு அது. மேல்நாட்டில் Ethical issue என்பது மனிதர்களுக்கு மட்டுமானது. ஆகையால் இதை மனிதாபிமானம் சார்ந்த விஷயம் என்று குறிப்பிடுகிறேன்.) அதனால் அப்படி ஆராய்ச்சி செய்து உண்மையை அறிய வேண்டுமானால் அதற்கென்று சில வழிமுறைகள், விதிகள் இருக்கின்றன. அவைதாம் மானிட சமூக ஆராய்ச்சியியல் (Epidemiology) எனப்படுகின்றன.

மானிட சமூக ஆராய்ச்சியியல்- வரலாறு

Epidemiology என்பது கிரேக்கச் சொல். Epi என்றால் மேல்; demos என்றால் மனிதர்கள்; logy என்றால் இயல் அல்லது புலம். அதாவது மனிதர்கள் மேல் தொடுக்கப்படும் ஆராய்ச்சி பற்றிய புலம்.

மேல் நாட்டில், “ கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய ஹிப்போக்ரேட்ஸ் மானிட சமூக ஆராய்ச்சியியலின் தந்தை என்று சொல்லப்படுகிறார். பண்டைய தமிழகம் உள்ளிட்ட பண்டைய பாரதத்தில் ஆராய்ச்சிக்காக மனிதர்களை மட்டுமல்ல; பிற உயிர்களையும் துன்புறுத்தியதாகவோ கொன்றதாகவோ சரித்திரமில்லை. அறம் என்பது பிற உயிர்களைப் கொல்லாமையும் துன்புறுத்தாமையும் ஆகும் என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் நமது பூமியில் மருத்துவம் வாணிகமாகவில்லை. எனவே புதிய மருந்துகளை உற்பத்தி செய்கிற அல்லது சந்தைப்படுத்துகிற தலைவலிக்கு அவர்கள் ஆளாகவில்லை என்றே தெரிகிறது.

பண்டைய பாரதத்தில் மருத்துவம் நன்றாகவே வளர்ந்திருந்தது. அந்தக் கால அறிவியல் ஞானம் மற்றும் நடைமுறைகள் இக்காலத்திலும் ஏற்புடையதாக இருக்கின்றன. ஆனால் மானிட சமூக ஆராய்ச்சியியல் நடந்ததற்கான எந்தப் பதிவும் அக்காலத்திலிருந்து கிடைக்கவில்லை.

மானிட சமூக ஆராய்ச்சியியலின் சில மைல் கற்கள்:

பழங்காலத்தில் மருத்துவமும் மதமும் இரண்டறப் பிணைந்திருந்தன. மனிதன் நோயுறுவது அவன் செய்த பாவத்தின் பலனாகவோ, பில்லி சூனியமாகவோ பார்க்கப்பட்டது. இது ஆரம்பம்.

மனிதன் இயற்கை சக்திகளால் ஆனவன். மனிதனின் உடல் சமநிலை கெடுவதால் அவன் நோய்வாய்ப்படுகிறான். இந்தக் கருத்து எல்லா நாடுகளின் பழங்கால நாகரிகத்தில் இருக்கிறது. நம் நாட்டு ஆயுர்வேதத்தில் மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்றும் வாயு, பித்தம், கபம் என்கிற மூன்று தோஷங்கள் சமநிலையில் இல்லாது போனால் நோய் ஏற்படுகிறது என்றும் கருத்துக்கள் உண்டு. சீன மருத்துவம் நமது உடல் நிலம், நீர், காற்று, தீ, மரம், உலோகம் ஆகியவற்றால் ஆனது என்கிறது. மேலும் முறையே யிங், யாங்க் என்கிற பெண் ஆண் சக்திகள் சமநிலை தவறுவதால் நோய் ஏற்படுகிறது என்கிறது. இதே போன்ற கருத்து பழங்கால கிரேக்க மருத்துவ உலகிலும் உண்டு.

கிரேக்க மருத்துவ மேதை ஹிப்போக்ரேட்ஸ் (காலம்: கிமு 460-370) மதத்திலிருந்து மருத்துவத்தைப் பிரித்தார். அப்படியே நம்பாமல் என்ன, எங்கு, யார், எப்போது, ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கப் பழகுங்கள் என்றார். இந்தக் கேள்விகள்தான் மானிட சமூக ஆராய்ச்சியியலில் படிக்கல்லாக இருக்கின்றன.

சூழ்நிலைகள், நோயுறுவதற்கு ஒரு காரணியாக இருக்கின்றன என்று சொன்னவரும் ஹிப்போக்ரேட்ஸ்தான். கொள்ளைநோய், காலநிலை மாற்றத்தால் வரும் நோய்கள், சமூகத்தில் எப்போதுமே காணப்படும் நோய்கள் என்று நோய்களை வகைப் படுத்திப் பார்த்தவரும் அவர்தான்.

அந்தோன் லீவன்ஹூக் என்ற அறிவியலாளர் நுண்ணோக்கி மூலம் பாக்டீரியாக்களை கண்டு பிடித்தார். மனிதன் நோயுறுவதற்கு நுண்ணுயிரிகளே காரணம் என்கிற கோட்பாடு அதன் பிறகு பரவலானது.

மானிட சமூக ஆராய்ச்சியியல் ஆரம்பத்தில் கொள்ளை நோய்களைப் பற்றியும், அவை பரவுவதற்கான காரணிகளைப் பற்றியும், கொள்ளை நோய்களைத் தடுக்கும் முறை பற்றியுமே ஆராய்ந்து கொண்டிருந்தது. அதனால் அது கொள்ளை நோயியல் என்று அழைக்கப்பட்டது. பிறகு மற்ற வியாதிகளைப் பற்றியும் ஆராயத் தலைப்பட்டது. அப்போது அது நோய் பரப்பியல் என்று அழைக்கப்பட்டது.

சில சமயங்களில் மனித உடலுக்குள் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருந்தாலும் தகுந்த சூழ்நிலை அமையவில்லை என்றால் நோய் உண்டாவதில்லை. தகுந்த சூழ்நிலையில்தான் ஒரு ஒட்டுண்ணி பல மடங்காகப் பல்கிப் பெருக முடியும். எண்ணிக்கை அதிகமாகி அது உணவுக்காக நம் உடலைத் தாக்கும்போதோ, சேதப் படுத்தும் போதோதான் நோய் உண்டாகிறது. இந்தச் சூழ்நிலையை ( Environment) உட்சூழ்நிலை மற்றும் வெளிச் சூழ்நிலை என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்..

நோய் விளைவிக்கும் நுண்ணுயிரியை பிரகிருதி (Agent) என்று அழைப்போம். பிரகிருதி வீரியத்தோடு இல்லாவிட்டால் நோய் ஏற்படாது. பிரகிருதிக்கு இடமளிக்கும் உயிரியை (அது மனிதனோ மிருகமோ எதுவோ) ஏற்பி என்று அழைப்போம். (பிரகிருதியை ஏற்பதால் ஏற்பி; -ஆங்கிலத்தில் Host.) ஒரு ஏற்பி பலசாலியாக இருந்தாலும் நோய் உண்டாவதில்லை. அதாவது ஏற்பியின் உடலின் சத்துக்கள், நோய் எதிர்ப்புச் சக்தி, மரபு – இவை நன்றாக இருந்தால் நோய் ஏற்படுவதில்லை.

ஆக, நோய் ஏற்பட வேண்டுமானால் பிரகிருதி, ஏற்பி, சூழ்நிலை இவை மூன்றும் உள்வினை புரிந்திருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்று செயல்படாதிருந்தால் நோய் தொடங்காது. இந்தக் கோட்பாடு நோய் பரப்பியலின் முக்கோணம் (Epidemiological triad) என்று அழைக்கப்படுகிறது.

பிற்பாடு பலப் பல நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நுண்ணுயிரிகள் வைரஸ், பாக்டீரியா, ஓரணு உயிரிகள், பூஞ்சைகள், மனித உடலில் வாழும் ஒட்டுண்ணிப் புழுக்கள் என்று வகைப்படுத்தப்பட்டன. ஆந்த்ராக்ஸ் என்கிற பாக்டீரியா வளர்ந்த சோதனைத் தட்டில், பெனிசில்லின் என்கிற பூஞ்சைக் காளான் தற்செயலாக விழுந்து விட்டது. அது ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்களைக் கொன்று ஒழித்து விட்டது. இப்படித்தான் முதன் முதலாக ஆன்டிபயாடிக் என்கிற எதிர் உயிரி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சுத்தமான சுற்றுப்புறம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான உணவு- இவை நோயற்ற வாழ்வுக்கு வழி என்கிற விழிப்புணர்வு பதினெட்டாம் நூற்றாண்டிலேயே மேலை நாடுகளில் வேரூன்றி விட்டது. ஆரோக்கியம் என்பது சமூகக் கடமையாக அங்கு உணரப்பட்டது. நம்மவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமென்றாலும் நாட்டில், பொது இடங்களில் தூய்மையைக் கிஞ்சித்தும் நடைமுறைப் படுத்த நாம் பழக்கப்படவில்லை.

பிரகிருதி என்கிற வார்த்தைக்குப் பொருள் விரிவாக்கப்பட்டது. இது நுண்ணுயிரியை மட்டும் குறிப்பிடுவதல்ல. உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள், விசை, உடல் அமைப்பில் அல்லது இயக்கத்தில் குறை, மிகை அல்லது இல்லாமை என்று நோய் ஏற்படுத்தும் அநேகக் காரணிகளைக் குறிக்கிறது.

உதாரணம்:

1. ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறார். இங்கு பிரகிருதி என்பது விசை. சூழ்நிலை என்பது மாடியின் உயரம், தரையின் கடினம், இடையில் தடுப்புகள் இல்லாதது, பிடிமானம் இல்லாதது எல்லாமே.
ஏற்பி சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்:
உடல் எடை, தலையின் நிலை என்பன.

2. ஒரு குழந்தைக்கு மாலைக்கண் நோய் உண்டாகிறது. இங்கு பிரகிருதி என்பது வைட்டமின் ஏ குறைபாடு. சூழ்நிலையைக் கவனித்தால் சத்தான ஆகாரம் சாப்பிடக் கிடைக்காதிருக்கும். ஏற்பி, வறுமையான குடும்பத்தில் வாழ்கிற புறக்கணிக்கப்பட்ட சிறுமியாக இருக்கலாம்.

3. பூச்சி மருந்து குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவரை எடுத்துக் கொள்வோம். இங்கு பிரகிருதி உயிரற்ற ஒரு பொருள்- அதாவது பூச்சி மருந்து. ஏற்பிதான் பாதிக்கப்பட்டவர். பூச்சி மருந்து குடித்த சமயம் அவர் வயிறு காலியாக இருந்ததா, பக்கத்தில் ஆட்கள் இருந்தனரா, எவ்வளவு நேரம் கழித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்பதெல்லாம் சூழ்நிலைகள்.

மேல் நாடுகளில் பெருமளவு நோய்த் தொற்று தடுக்கப்பட்ட போதும் நோயுறுவதும் இறப்பு விகிதமும் குறையவில்லை. கிருமிகளால் அழிவது குறைந்து போய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களால் உயிரை விடும் அபாயம் அங்கு அதிகரிக்கலாயிற்று. இந்த நோய்கள் அனைத்தும் தொற்றா நோய்கள் எனப்பட்டன. இவ்வகை நோய்கள் நுண்ணுயிரிகளால் பரவுவதில்லை. மனிதனின் வாழ்க்கை முறைகளால் உண்டாகின்றன. இவை வாழ்க்கை முறை நோய்கள் என்றும் வழங்கப்பட்டன. வாழ்க்கை முறை நோய்களுள் புற்று நோய் மற்றும் மரபணு சார் குறைபாடுகளும் அடங்கும்.

வாழ்க்கை முறை நோய்களையும் ஆராய்கிற அவசியம் வந்தபிறகு மானிட சமூக ஆராய்ச்சியியலாகி விட்டது.

வாழ்க்கை முறை நோய்கள் தொற்று நோய்களிலிருந்து சில விதங்களில் மாறுபடுகின்றன.

1. வாழ்க்கை முறை நோய்கள் உண்டாக நுண்ணுயிரிகள் தேவையில்லை.
2. வாழ்க்கை முறை நோய்களுக்கு ஒரே ஒரு காரணம் அமைவது கடினம். உதாரணமாக நீரிழிவு நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன் என்பது அதிலொரு முக்கியமான காரணம். ஆனால் உடல் பருமன் மாத்திரம் நீரிழிவு நோயை ஏற்படுத்துவதில்லை. உடல் பருமன், மூப்பு, பாரம்பரியம் இப்படி நிறைய காரணங்கள் வலைப்பின்னல் போல செயல்படும்போது நீரிழிவு உண்டாகிறது. இது காரணிகளின் வலைப்பின்னல் எனப்படுகிறது.
3. வாழ்க்கை முறை நோய்கள் குறுகிய காலத்தில் ஏற்படுவதில்லை; மிக மெதுவாக ஆரம்பித்து வளரும். இந்த நோய்கள் பல சமயம் எந்த அறிகுறியும் காட்டாமல் உடம்புக்குள் ஆண்டுக் கணக்கில் அப்படியே இருக்கும். ஆரோக்கியமாக உணரும் நாற்பத்தைந்து வயதுக்காரர் தற்செயலாக பரிசோதனை செய்து பார்த்து நீரீழிவு நோய் இருப்பதைத் தெரிந்து கொண்ட அனுபவங்கள் மருத்துவ உலகில் ஏராளம்.
வாழ்க்கை முறை நோய்களுக்கு நெடுங்கால நோய்கள் என்று மற்றொரு பெயரும் உண்டு.

மானிட சமூக ஆராய்ச்சியியலின் பயன்கள்:

1. மனிதனின் ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட கோட்பாடு அல்லது மருந்தைப் பரிசோதித்துப் பார்க்க முடிகிறது. சோதனை முடிவு ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது மாறி வரும் மருத்துவ உலகிற்கு இன்றியமையாதது.

2. ஒரு நோயின் பிரகிருதி, ஏற்பி, சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

3. பிரகிருதியின் வீரீயம், நோயின் தாக்கம், தொற்றுக்கான கால அளவு காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் மனித இனத்துக்கு இனம் எப்படி மாறுபடுகிறது என்று ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது.

4. மானிட சமூகத்தின் ஆரோக்கிய அளவீடுகளைப் (Health population data) பெற முடிகிறது.

5. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை (Preventive & containment measures) எடுக்க உதவுகிறது.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-Sep-20, 11:20 am)
பார்வை : 98

சிறந்த கட்டுரைகள்

மேலே