மானிட சமூக ஆராய்ச்சியியல்- 2 மானிட சமூகத்தின் ஆரோக்கிய அளவீடு
.......................................................................................................................................................................................................
...................................................................ஆரோக்கிய அளவீடுகளின் தேவை
தனி மனிதனாக இருக்கும் ஒரு நோயாளியைக் கையாளும் மருத்துவர், சில அறிகுறிகளை வைத்து நோயைக் கண்டறிகிறார். மருந்து மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தும்போது நோயாளி நலமடைவது மருத்துவருக்குக் கண்கூடாகத் தெரிகிறது.
ஆனால் சமூகம் நலமாக இருக்கிறதா அல்லது ஏதாவது வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி அறிவது?
சமூகம் என்பது பலர் சேர்ந்த கூட்டம். ஆண், பெண், குழந்தைகள் என்ற பாகுபாடு இருக்கிறது. ஏழை பணக்காரர், சாதி, மதம், தொழில் சார்ந்த பிரிவினைகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொருவரிடமும் சென்று நீங்கள் நலமாக உள்ளீர்களா என்று கேட்டால் எனக்கு தலைவலி, திருகுவலி, ரத்தக்கொதிப்பு, மன உளைச்சல் என்று ஒருவரே ஆயிரம் காரணங்களைச் சொல்லக்கூடும். இந்நிலையில் சமூகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?
சமூகத்தின் நலனை அறிய கீழ்க்காணும் சில அடிப்படைத் தகவமைப்புகள் தேவைப்படுகின்றன.
..........1. இருப்பிடம் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணிக் கணக்கிடுவதற்கு வசதியாக சின்ன இடமாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
...........2. அந்த இடத்தில் வசிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரிந்திருக்க வேண்டும்.
...........3. காலத்துக்கேற்ப அது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
...........4. எது நலம் என்பது வரையறுக்கப்பட்டு அதற்கான அளவீடுகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
...........5. அளவீடுகளை வைத்துக் கணக்கிட ஒரு வழிகாட்டுதல் அல்லது முறை வேண்டும்.
...........6. அளவீடுகளை வைத்துக் கணக்கிட ஆள்பலம் வேண்டும்.
ஆரோக்கிய அளவீடுகள் எப்படி இருக்க வேண்டும்?
ஆரோக்கிய அளவீடுகள் ஆரோக்கியத்தோடு நேரடி சம்பந்தம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியத்தோடு நேரடி சம்பந்தம் கொண்டவையாக எதை நாம் தீர்மானிக்கிறோம்?
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன. சூரியனின் புற ஊதாக் கதிர் தொடங்கி வருமானம், கல்வி சமூகப் பழக்கம் எல்லாமே ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுள் எது ஆரோக்கியத்தோடு நேரடி சம்பந்தம் கொண்டவையாக நம்மால் தீர்மானிக்க இயலும்?
இதற்காகத்தான் மனித சமூகத்தில் மிகவும் பராமரிக்கப்பட வேண்டிய, அப்படி பராமரிக்க வில்லையென்றால் இறந்து படுகிற பகுதியினரை வரையறுக்க வேண்டியிருக்கிறது.
ஒரு வயது நிறையாத குழந்தைகள் இந்த வரையறைக்கு நன்கு பொருந்துகிறது, இல்லையா? ஒரு வயது நிறையாத குழந்தைகள், சிசுக்கள் (infants) என்று அழைக்கப்படுகின்றன.
ஆக, சிசுக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த சமூகமே ஆரோக்கியமாக இருக்கிறது என்று கொள்ளலாம்தானே?
எனவே ஆரோக்கிய அளவீடுகளில் முதலில் வருவது சிசுக்களின் இறப்பு விகிதம்.
அதென்ன இறப்பு விகிதம்?
இறப்பு என்பது மிகத் தெளிவான, குழப்பமே இல்லாத அளவீடு. இந்த அளவீட்டில் பகுதி, விகுதி என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும்.
சிசுக்களின் இறப்பு விகிதம் இவ்வாறு கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சிசு இறப்புகளின் எண்ணிக்கை X1000 / அதே இடத்தில் அதே காலத்தில் நிகழும் உயிர்த்த பிறப்புகளின் எண்ணிக்கை. இதில் 1000 என்பது, பொது அலகு ஆகும். அதாவது 1000 உயிர்த்த பிறப்புகளுக்கு எத்தனை சிசு இறப்பு என்று கணக்கிடலாம். ஆயிரத்துக்கு பதில் பத்தாயிரம் அல்லது ஒரு லட்சம் என்று கூட பொது அலகை நியமித்துக் கொள்ளலாம். பொதுவாக சிசு இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு கணக்கிடும்போது சிறிய எண்ணாக இருந்தால், அதாவது சமூகத்தில் சிசு இறப்பு விகிதம் குறைவாக இருந்தால் ஆயிரத்துக்குப் பதில் பத்தாயிரத்தையோ லட்சத்தையோ பொது அலகாக வைத்துக் கொள்ளலாம். சிசு இறப்பு விகிதத்தை ஆயிரத்தில் கணக்கிடும்போது பெரிய எண்ணாக வந்தால் நூற்றுக்குக் கணக்கிடுகிற வழக்கமும் உண்டு.
அதென்ன உயிர்த்த பிறப்பு?
கருவில் இறந்த சிசுவும் பிறக்கலாமல்லவா? அவை நீத்த பிறப்பு (still birth) எனப்படுகின்றன. உயிரோடிருக்கிற சிசுக்களை பிரசவிப்பது உயிர்த்த பிறப்பு (live birth) எனப்படுகிறது.
உயிரோடு பிறந்த சிசுக்களுள் எத்தனை பேர் தங்கள் முதல் பிறந்த நாளைக் கொண்டாட இயலாமல் இறந்து படுகின்றனர் என்பதே சிசு இறப்பு விகிதம். இதில் சிசு இறப்பு என்பது பகுதியாகும். உயிர்த்த பிறப்பு விகுதியாகும்.
இது ஆரோக்கிய அளவீடுகளில் முக்கியமானதாகும். இந்தியாவில் சிசு இறப்பு விகிதம் 1000 உயிர்த்த பிறப்புகளுக்கு 36 ஆகும். தமிழ்நாட்டில் இதுவே 16 ஆகும். உலகிலேயே ஆப்கானிஸ்தானில்தான் சிசு இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. 1000 உயிர்த்த பிறப்புகளுக்கு 116 சிசுக்கள் இறந்து போகின்றன. ( 2019 ம் ஆண்டு நிலவரப்படி)
கணக்கு
ஒரு சமூகத்தில் 28,000 பேர் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டு அந்த சமூகத்தில் 1245 உயிர்த்த பிறப்புகளும் 27 சிசு இறப்பும் நிகழ்ந்தன. அப்படியானால் அந்த சமூகத்தின் சிசு இறப்பு விகிதம் என்ன?
சிசு இறப்பு விகிதம் = 27 X 1000/ 1245 = 21.7/1000 உயிர்த்த பிறப்புகள்.
இரண்டாவது ஆரோக்கிய அளவீடு ஒரு வயதிலிருந்து தொடங்கும் ஆயுள் கணிப்பு ஆகும்.
அதென்ன?
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை மிகவும் நாசுக்கானது. இவ்வுலகத்துக்கேற்ப அது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அதில் வெற்றி பெற்று அது தன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் அந்த தினத்திலிருந்து அதன் கணிக்கப்பட்ட ஆயுள் அது வாழும் நாட்டிலுள்ள சராசரி வயது வந்த மனிதர்களின் ஆயுளாக மாறி விடுகிறது! இது இயற்கை அதற்குத் தரும் பிறந்த நாள் பரிசு. அதாவது முதல் பிறந்த நாள் கொண்டாடுகிற குழந்தை இறப்பதற்கான வாய்ப்பு, அதன் தந்தை இறப்பதற்கான வாய்ப்புக்குச் சமம்.
மூன்றாவது அளவீடு பெண்களின் கல்வி விகிதம் ஆகும்.
பள்ளிக்குச் சென்று படிப்பறிவு பெற்ற பெண்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். பிரச்சினைகளை தலையெழுத்தே என்று எடுத்துக் கொள்ளாமல் தீர்க்க முயல்கிறார்கள். இதற்கான நிறுவனங்களைக் கண்டறிந்து அங்கு சென்று வழிவகை தேடுகிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல; அவர்களின் குடும்பமும் முன்னேறுகிறது. இந்த ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் ஓர் அங்கமாக ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதனால் பெண்களின் கல்வி விகிதம் ஆரோக்கிய அளவீடாகக் கொள்ளப்படுகிறது.
இவை தவிர மற்ற ஆரோக்கிய அளவீடுகளும் உள்ளன. தனி மனித வருமானம், நோய்களின் தாக்கம், சுற்றுச் சூழல் மாசு போன்றவையும் ஆரோக்கிய அளவீடுகளே ஆகும்.