அக்டோபர் இரண்டு

அக்டோபர் இரண்டு

அந்தக் கண்ணாடிக்காரனின்
கனவுகளின் வேர்களில்
அமிலம் அரித்துக்கொண்டிருப்பதை
அறியாமலே

செடியின் மேல் முளைத்த ரோஜாவை
முள்கிழித்த கைகளால்
தடவிக்கொண்டிருக்கிறோம்

அங்கே அவன் அழுது கொண்டிருப்பதை
அறியாமல் மறைக்கவே
காகித பணத்தில் கண்ணாடி அணிந்து
சிரிக்க வைத்தோம்

ஏதேனும் ஒரு படியில் அந்த மாகாத்மாவை மறந்துவிடும்
பயத்தில் சாதுர்யமாக பணத்தோடே
பயணிக்க வைத்தோம்

ஆனால் வழியில் வரும் வலிகளில்
அவனை மறக்கவும் கூடும்

வரிகட்டாது வீடு கட்டி குடியிருக்கும்
தூக்கனாங்குருவி கண்டு தேசத்தின் கூரைகள் நொருங்கி விழுகிறது

சாலை வரிகட்டாது பாம்பு ஒன்று
சுங்கச்சாவடியை கடக்கும் போது என்
சுதந்திர சுவாசத்திற்குள் அமில வாடை வீசுகிறது

சாதியற்ற அந்த தெருநாய்
எல்லா வீதிகளையும் சுற்றும்போது
மனிதனுக்கான சுதந்திரத்திற்குள்
மனிதம் மட்கிய வாடை

பயணச்சீட்டின்றி பறந்து
நினைத்த குளத்தில் நனைந்து நீரருந்தி
எழும்பும் சிட்டுக்குருவி எனை பார்த்து
சிரித்ததில் பாம்பு உரித்த சட்டையாகிப்போனது என் சுதந்திரம்

கூடுகட்டும் பறவைகளே
காடு வாழும் விலங்குகளே
மனிதம் பெற்றது சுதந்திரமல்ல
நீங்கள் வாழ்துதான் சுதந்திரம்

அங்கேயும் அரசியல் இல்லாதவரை

எழுதியவர் : இளவல் (2-Oct-20, 6:30 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : october irandu
பார்வை : 306

மேலே