கொடுமையுளம் கொண்டான் கோடி மிகினும் கையிழிவே காட்டும் - கொடுமை, தருமதீபிகை 664

நேரிசை வெண்பா

கொடுமை யுளம்கொண்டான் கோடி மிகினும்
கடுமொழியும் கையிழிவே காட்டும் - நெடுமரமாய்
நின்று கனிநீழல் நீட்டினும் எட்டிதான்
நன்று கனிவாமோ நாடு. 664

- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எட்டிமரம் நெடிது வளர்ந்து நிழல் விரிந்து கனி சொரியினும் தீமை மிகுந்தே நிற்கும்; அதுபோல் உள்ளத்தில் கொடுமையுடையவன் வெளியே நல்ல செல்வங்களை எய்தியிருந்தாலும் சொல்லும் செயலும் இழிந்து அல்லலாகவே யிருக்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இனிய பண்பு மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகிறது. அருள் நீர்மை தோய்ந்த அளவு பெரு மேன்மைகள் வாய்ந்து வருகின்றன. உயர்ந்த சான்றோர், சிறந்த மேலோர் என விளங்கி நிற்பவர் எவரும் அன்பான குணநலங்களாலேயே எங்கும் இன்ப நிலையமாய் உயர்ந்து வந்துள்ளனர்.

தண்ணளி எவ்வழியும் இதங்களையே செய்து வருதலால் அதனையுடையவர் புண்ணிய சீலர்களாய்ப் பொலிந்து விளங்குகின்றனர். எவரையும் உத்தம நிலையில் உயர்த்துகின்ற இத்தகைய நல்ல நீர்மையை இழந்து பொல்லாத புன்மைகளைப் பழகி வருபவர் என்றும் புல்லியராயிழிந்து அல்லலுழந்து அழிகின்றார்.

மனம் கடுமையாய்க் கொடுமை படிந்தபொழுது மனிதன் கொடியவன், தீயவன் என நெடிய பழிகளை அடைய நேர்கின்றான், நெஞ்சம் கெடவே நஞ்சம் படிந்து நாசம் வருகின்றது.

தன் உள்ளத்தில் இனிய இரக்கம் இல்லாமையால் பிற உயிர்களுக்குக் கொடிய துன்பங்களைச் செய்யத் துணிகிறான். அந்த நீசச் செயல்கள் தனக்கே நாசங்களை விளைத்து பிறவிகள் தோறும் பெருந்துயரங்களை அடைந்து நரக வாழ்க்கையாய் அவன் நைந்து உழலுகின்றான்.

நல்ல அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்தும் உரிய உறுதி நலங்களை அடையாமல் கொடியராயிழிந்து போவது நெடிய மதிகேடாய் நீண்டு நிற்கின்றது.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். 246 அருளுடைமை

'உயிர்களிடத்து அருளின்றிக் கொடுமைகளைச் செய்பவர் உறுதிநலனை இழந்து தம் உயிர்க்கு நெடிய துயரங்களைச் செய்து கொள்ளுகின்றனர்” என வள்ளுவர் இங்ஙனம் இரங்கி மறுகியுள்ளார். அருள் நீங்கிய அளவில் இருள் ஓங்கி வருகிறது; எவ்வழியும் இன்னலே வீங்கி இழிபழிகள் எழுகின்றன.

அருள்தீர்ந்த காட்சியான் அறன்நோக்கான் நயம்செய்யான்
வெருவுற உய்த்தவன் நெஞ்சம்போல் பைபய
இருள்துார்பு புலம்பூரக் கனைசுடர் கல்சேர. (கலி-120)

'அருள் இல்லாதவன் தரும நோக்கமின்றி யாதும் இதம் செய்யாமல் எவ்வுயிரும் வெருவும்படி யாண்டும் கொடுமையே செய்வான்; அவனுடைய நெஞ்சம் இருள் மண்டியிருக்கும்’ என இது குறித்துள்ளது. அருள் இழந்தவன் மருளுழந்து மடிகின்றான்.

’கோடி மிகினும் இழிவே காட்டும்’ என்றது கொடிய இயல்பின் முடிவு காட்டி நின்றது.

உள்ளத்தில் கொடுமையுடையவன் வெளியே எவ்வளவு நல்ல செல்வங்களை எய்தியிருந்தாலும் இதம் செய்யான்; எவ்வழியும் அல்லலே செய்வான்; அவன் வாழ்வு அவலமேயாம்.

இனியது செய்யாமல் இன்னாமையே புரியும் இயல்பு கொடியவரிடம் அமைந்திருத்தலால் அவர் நெடிய செல்வங்களை அடைந்திருந்தாலும் மதிப்பும் மாண்பும் பெறார்; பழிப்பும் இழிப்புமே பெற்றுப் பாழ்பட்டு உழலுவார்.

இன்னிசை வெண்பா

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும். 347 கீழ்மை, நாலடியார்

பொன்னும் மணியும் அழுத்திச் செய்தாலும் செருப்பைக் காலில் இட்டே மிதிப்பர்; பொல்லாத கீழ்மக்கள் செல்வம் பெற்றாலும் மதிப்பு அடையார் என இது உணர்த்தியுள்ளது.

எட்டி கனி நீட்டினும் கனிவு ஆமோ? என்றது கெட்டவரது கெடுநிலை தெரிய வந்தது.

உள்ளம் கொடியவர் இனிய பொருளை அடையினும் இன்னாதவராகவே இருப்பாராதலால் அவர் யாண்டும் இழிக்கப்படுவார்; அவரது இருப்பு வெறுப்புக்கே இடமாகும்.

தன் நெஞ்சில் கொடுமையை வளர்த்து வருபவன் தனக்கு நீசத்தையே வளர்த்து நாசத்தை அடைகிறான்; அவ்வாறு நீசமும் நாசமும் அடையாமல் நல்ல நீர்மையை வளர்த்து நலம் பல பெறுக. இனிய பண்பு பெரிய இன்பம் ஆகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Oct-20, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே