அறங்கருதி இம்பரிசை ஏற இனிதீயார் - உலோபம், தருமதீபிகை 674

நேரிசை வெண்பா

ஐம்புலனும் ஆர அருந்தார் அறங்கருதி
இம்பரிசை ஏற இனிதீயார் - வம்பமைய
ஈட்டி இருந்தார் இருந்துயரே கண்டுபழி
நீட்டி யழிந்தார் நிலை. 674

- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலோபிகள் நல்ல சுகபோகங்களை அனுபவியார், தரும நலம் கருதி உதவிபுரியார்; பொருளை ஈட்டித் தொகுத்து வீணே கூட்டி வைத்துப் பழி இழிவுகளை நீட்டி நிறுத்தி அழிவார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உலோபியின் மயல் இயல்களை உணர்த்துகின்றது.

சீவ கோடிகள் யாவும் தேக போகங்களை ஆவலோடு நுகர்ந்து வருகின்றன. படுகின்ற பாடுகள் எல்லாம் வயிற்றுப் பசியைத் தணித்துச் சுகமாய் வாழவேண்டும் என்றே யாவரிடமும் தொடர்ந்து வந்துள்ளன. இயல்பான இந்த நியமம் உலோபிகளிடம் அயலாய் விலகி நிற்கிறது.

ஈட்டிய பொருள் யாதும் குறைந்து விடாமல் நிறையச் சேர்த்து வைப்பதே அவரது இயல்பாய் இசைந்திருத்தலால் பொறி நுகர்ச்சிகளை ஆனவரையும் அவர் அடக்கிக் கொள்கின்றனர். மானம் மரியாதைகளையும் இழந்து விடுகின்றனர்.

நல்ல உணவுகளை உண்ணார்; சிறந்த ஆடைகளை அணியார்; உயர்ந்த காட்சிகளைக் காணார்; எப்படியாவது வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிப் பொருளைச் சேர்த்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பராதலால் உலோபிகளுடைய வாழ்வு வறுமை தோய்ந்து எவ்வழியும் பரிதாபமாகவே படிந்து நிற்கும்.

பொருள் வளங்கள் நிறைந்திருந்தாலும் உலோபத்தால் யாதொரு போகங்களையும் அனுபவியாமல் இருப்பதால் உலோபி செல்வம் பெற்றும் ஏழையாய், உயிரிருந்தும் செத்தவனாய் எள்ளி இகழப்பட்டு வீணே இழிந்துள்ளான்.

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த(து) இல். 1001 நன்றியில் செல்வம்

வீடு நிறைய அதிகமான பொருளை வைத்திருந்தும் உலோபத்தால் நல்ல உணவு முதலிய போகங்களை அனுபவியாதவன் உயிர் உளனாயினும் செத்தவனே என வள்ளுவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். அறிவுடைய உயிரின் பயனை அடைந்து கொள்ளாமையால் ‘செத்தான்’ என்றார். நுகர்வில் உணவு மிகவும் அவசியம் ஆனது; அதனையும் உலோபி சரியாக உண்ணான் என்றதனால் அவனது ஊனநிலை உணர வந்தது.

நேரிசை வெண்பா

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திரும்பானேல், ‘அஆ
இழந்தானென்(று) எண்ணப் படும். 9 செல்வம் நிலையாமை, நாலடியார்

உலோபியின் இழவையும் இழிவையும் அழிவையும் மேலோர் இங்ஙனம் பரிவோடு உணர்த்தியுள்ளனர். பொருள் எப்படியும் அழியும் இயல்பினது; அது தன் கையில் உள்ள போதே அனுபவித்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் அனுபவியாமல் உலோபி அவலமாய் அழிந்து போகிறான்; அதனால் அந்தப்பொருளை அயலார் கவர்ந்து போகின்றார். பொருளின் பயனை அடையாமல் உலோபி மருளனாயிழிந்து உழலுதலால் அவனை யாவரும் இகழ்ந்து பழிக்கின்றார். மானமும் மதிப்பும் மனிதத் தன்மையும் இல்லாதவனாய்ப் பிசுனன் பிழைபட்டு நிற்கின்றான். அவனது நிலை பரிதாபமாயுளது.

Misers are generally characterised as men without honour or without humanity, who live only to accumulate, and to this passion sacrifice every other happiness. - Goldsmith

'கண்ணியமும் மனிதத்தன்மையுமின்றிப் பொருளைச் சேர்த்து வைப்பதே உலோபிகளின் இயல்பாயுள்ளது; இந்தப் பணப்பற்றால் எல்லா இன்ப நலங்களையும் அவர் துறந்து விடுகின்றனர்' என்னும் இது இங்கே அறியவுரியது.

பொருளின் மேலுள்ள மருளால் மனிதன் பேயனாய்ப் பிழைகளில் இழிந்து பழிகளில் ஆழ்ந்துள்ளான். உலோபம் உள்ளத்தில் புகுந்தால் அந்த மனிதன் உலகத்தின் எள்ளல்களையெல்லாம் மறந்து பொருள் ஒன்றையே எவ்வழியும் இறுகத் தழுவி இருள் மண்டிக் கிடக்கின்றான்.

கருமி, உலுத்தன், பிசுனன், கிருபணன் என்று உலோபிக்குப் பெயர்கள் வாய்ந்துள்ளன. இந்தப் பெயர்க் குறிப்புகள் அவனுடைய இழிவுகளை விளக்கிப் பழிகளையும் துலக்கி நிற்கின்றன. உற்ற நாமங்களால் குற்றங்கள் தெரிந்தன.

தருமம், புகழ் முதலிய அருமை நலங்களையெல்லாம் இழந்து சிறுமையாளனாய் இருத்தலால் உலோபி கருமி என நேர்ந்தான்.

புண்ணியவான் தருமி என வந்தான். பாவி கருமி என நின்றான்.

தீய காரியங்களைச் செய்கின்ற பாவகாரியைக் குறித்து வரும் கருமி என்னும் பேரைத் தனக்குக் தனி உரிமையாக உலோபி பெற்றிருத்தலால் அவனுடைய புலை நிலைகளை அது உய்த்துணரச் செய்தது.

பொருளை இறுகப் பற்றி மருளனாய் இருள் மண்டிக் கிடப்பானே அன்றி வேறு தீய செயல்களை உலோபி துணிந்து செய்யான். அப்படியிருந்தும் அவன் பாவி என நேர்ந்தது நிலைமைகளைக் கூர்ந்துணர்ந்து கொள்ள வந்தது.

அறம், புகழ், இன்பங்களை ஆக்கவுரிய பொருளை அநியாயமாய்த் தடைசெய்து அவலப்படுத்தி யிருத்தலால் உலோபி பாபி என நேர்ந்தான். அவனது இருப்பு பலருக்கும் வெறுப்பாய்ப் பழி விளைத்து நின்றது.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. 1003 நன்றியில் செல்வம்

பொருள் ஈட்டம் ஒன்றிலேயே நசைகொண்டு மண்டி வேறு புகழ் நலங்களை விரும்பாத மனிதரது பிறப்பு இந்த உலகத்திற்குப் பெரிய பாரமாம் என வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். உலோ:பிகள் பெரிய பாவிகளாதலால் அவரைத் தாங்கிக் கொண்டிருப்பது கொடிய சுமையாகப் பூமிதேவி தவித்துக் கொண்டிருக்கிறாள். இதனால் அவரது ஈனமும் இழிவும் எளிது புலனாம்.

’ஈட்டி இருந்தார் பழிநீட்டி அழிந்தார்’ புகழ் யாதும் ஈட்டாமல் பழிகளையே யீட்டி உலோபிகள் பாழாயிழிந்து அழிந்து போகும் அவல நிலைகளைக் கவலையோடு இது காட்டியுள்ளது. பொருளில் மருளாய் இழிந்து போகாமல் தெருளுடையராய் உயர்ந்து கொள்வோரே அருளும் அறமும் படிந்து உத்தம கதிகளை அடைந்து கொள்ளுகின்றார். உலுத்தனாய் இழியாதே; உத்தமனாய் உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Oct-20, 12:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே