பாம்பு கொண்டதோ - நேரிசை வெண்பா
தென்றல் வருகின்ற காலத்தில், ஒரு சமயம் தென்றற் காற்றையே காணவில்லை. திருச்செங்காட்டிலிருந்த கவிஞர், அப்போது இவ்வாறு பாடினார்.
நேரிசை வெண்பா
அம்பேந்து கையால் அவன்பதியில் ஐம்மாவைக்
கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ - அன்பா
வரிந்த மகவை யமுதுக் கழையென்றி
ருந்தவன்றன் செங்காட்டி லே. 205
- கவி காளமேகம்
பொருளுரை
“சிறுத்தொண்டன் சிவனடியார்க்கு அமுதிடுகின்ற பேரன்பிலே அரிந்த சிறுபிள்ளையை, 'உடனிருந்து அமுது உண்பதற்கு அழைப்பாயாக’ என்று சொல்லி வீற்றிருந்தவன் சிவபிரான். அவன் கோயில் கொண்டிருக்கின்ற திருச்செங் காட்டிலே, கமண்டலத்தை ஏந்தியிருக்கும் கையினனான அகத்தியனின் பொதியமலையினின்று வருகின்ற தென்றற் காற்றினை, கொம்புகளைச் சுமந்திருக்கும் விநாயகப் பிரானின் தகப்பனுடைய ஆபரணமான பாம்புகள் தாம் இப்போது உண்டு விட்டனவோ?
அம்பு - கமண்டலமும் எழுகடலும் ஆம். கொம்பு ஏந்தி - ஒற்றைக் கொம்பினைக் கையிலே ஏந்தியிருப்பவனும் ஆகும்.
பணி - ஆபரணம்; பாம்பு, 'பாம்பு காற்றைக் குடித்ததோ?’ என்று வினவும் நயத்தினை அறிக.