பண்பின் தகுதி - நேரிசை வெண்பா

பண்புடையவர், பண்பற்றவர், பாவிகள், பாவஞ் செய்யாதவர், நண்பர், நண்பரல்லார் இவர்களை நாம் கொள்ள வேண்டிய முறைமைகளைப் பற்றி மதுரையிற் பாடிய செய்யுள் இது

நேரிசை வெண்பா

பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை யழகியசொக் கர்க்கரவம்
நீள்வா கனநன் னிலம். 207

- கவி காளமேகம்

பொருளுரை:

"பண்புள்ளவர்களுக்கு ஒர் பறவை (அது ஈ - கொடு); பாவத்திற்கு ஒர் இலக்கம் (அது அஞ்சு (5) பாவத்திற்கு அஞ்சி ஒதுங்க வேண்டும் என்பது கருத்து); நண்பில்லாதவரைக் கண்டால் நாற்காலி - (அது விலங்கு - விலகிப் போய்விடு) என்பது பொருள்.

செறிவுற்ற நிலத்தினை எல்லாம் ஆட்கொள்பவராகிய மதுரை நகரத்து அழகிய சொக்கநாதப் பெருமானுக்கு நிலையாகப் (அரவம் – வாகனம், நன்னிலம் என்க) பணிவிடை செய்”

பண்பாளர்க்குக் கொடுத்தும், பாவத்திற்கு அஞ்சியும், பகைவரிடத்திலிருந்து விலகியும், சொக்கநாதப் பெருமானுக்குப் பணிவிடை செய்தும் வாழ்வாயாக என்பது கருத்து.

'ஓர் பறவை' என்பதனை, ஒப்பற்ற பறவை' எனப் பொருள் கொண்டால், 'அன்னம்' என்றாகிச் சோறிடுதலைக் குறித்ததாக அமையும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-20, 6:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே