தீர்த்தாள் - நேரிசை வெண்பா
கம்பர் பாடியதாகக் கந்தமலர்ப் பிரமன்' எனத் தொடங்கும் வெண்பா ஒன்று வழக்கிலிருக்கிறது. இதனைக் கம்பர் பாடல்கள் என்னும் நூலிற் காணலாம்.
நேரிசை வெண்பா
கந்த மலர்ப்பிரமன் கன்னிமட வார்க்கெல்லாம்
அந்தவிள நீரைமுலை யாக்கினான் - சுந்தரஞ்சேர்
தோற்றமிகு வல்லிக்குத் தோப்பைமுலை யாக்கினான்
ஏற்றமிதில் யார்தான் இயம்பு. 216 கவி காளமேகம்
என்பது அந்தச் செய்யுள். அதில், தன்னுடைய பருவ முதிர்ச்சியை ஒப்பனைகளால் மறைத்துக் கொண்டு மினுக்கிக் குலுக்கி வந்த ’வல்லி’ என்னும் தாசியைக் கம்பர் நகையாடியதைக் கண்டோம்.
அந்தச் செய்யுளைப் போலவே, தமிழ் நாவலர் சரிதையுள், காளமேகம் பாடியதாகவே ஒரு செய்யுள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதனை நாம் இங்கே காண்போம்.
திருக்கண்ணபுரத்தில் காளமேகத்திற்கு எங்கும் எதிர்ப்பாகவே இருந்ததை அவரது செய்யுட்கள் பலவும் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வூர்த் தாசியருள் ஒருத்தி தீர்த்தாள் என்பவள். அவளுடைய வனப்பை இகழ்ந்து கவிஞர் பாடிய வசை இது.
நேரிசை வெண்பா
கந்த மலரயனார் கண்ணபுர மின்னாருக்
கந்தவிள நீரைமுலை யாக்கினார் - சந்ததமுந்
தோற்றமுள தீர்த்தாட்குத் தோப்பைமுலை யாக்கினார்
ஏற்றமெவர்க் காமோ வினி? 217
- கவி காளமேகம்
பொருளுரை:
“தாமரை வாசராகிய பிரமதேவர், திருக்கண்ணபுரத்தில் வாழ்கின்ற பிற பெண்களுக்கெல்லாம், அழகிய தென்னங் குரும்பைகளை மட்டுமே மார்பகங்களாகப் படைத்தனர். ஆனால், எப்போதும் கவர்ச்சியாகத் தோன்றும்படி வருகின்ற இந்த தீர்த்தாளுக்கோ, அவர் தென்னந் தோப்பையே மார்பகங்களாக்கி விட்டார். இனி, இவர்களுள் சிறப்பு எவர்க்கு ஆகும்? சிறப்பு தீர்த்தாளுக்குத்தான் என்பது போலத் தோன்றினாலும், தோப்பை என்ற சொல்லைத் தோற் பை எனப் பகுத்து, 'தோலாகிய பை' எனப் பொருள் கண்டு, அவளை இகழ்ந்து பாடியதாகக் கொள்ளல் வேண்டும்.