அல்லாதார் செல்லாத காசாகச் செல்வத்தைச் சீரழித்தழிவர் - உலோபம், தருமதீபிகை 680

நேரிசை வெண்பா

நில்லாப் பொருளை நிலையாகச் செய்பவர்
பல்லார்க்கும் நல்கிப் பயன்பெறுவர் - அல்லாதார்
செல்லாத காசாகச் செல்வத்தைச் சீரழித்து
நில்லா(து) அழிவர் நிலை. 680

- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நிலையில்லாத பொருளை நிலையாகச் செய்பவர் பலர்க்கும் உதவிப் பயன் மிகப் பெறுவார்; அவ்வாறு உதவாதவர் செல்வத்தை வீணே பழுதுபடுத்திப் பழியோடு அழிவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொருள் எவரிடமும் நிலைத்து நில்லாது; குறைவது, தேய்வது, மறைவது, அழிவது என்னும் நிலைகளை இயல்பாகவுடையது. இவ்வாறு அழிவு நிலையிலுள்ள பொருள் கழிந்து ஒழிந்து போகுமுன் நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளை வீணே செலவழிப்பதும் தவறான வழிகளில் தள்ளுவதும் குற்றமாம், புகழ், புண்ணியம் என்னும் நிலையான உயர்ந்த பொருள்களுக்குக் தன் பொருளைத் தகுந்த வகையாகத் தந்து மாற்றிக் கொள்ளின் அவன் தெளிந்த மதிமானாய்ச் சிறந்து உயர்ந்த சமர்த்தனாய் விளங்கி நிற்கின்றான்.

பிறர்க்குக் கொடுத்தால் தன்பொருள் குறைந்து போகும் என்றே எவரும் அஞ்சுகின்றார், இந்த அச்சம் உலோபியிடம் உச்ச நிலையில் ஓங்கி நிற்கிறது; ஆகவே ஈதலை அவன் சாதலைப் போல் எண்ணி நடுங்குகிறான். ஈ என்று சிறு பூச்சியின் பேரை யாரேனும் சொல்ல நேர்ந்தாலும் தன்னைக் கொல்ல நேர்ந்தது போல் அவன் உள்ளம் துடிக்கின்றது.

ஈபவனை வள்ளல் என்றும், ஈயாதவனை உலோபி என்றும் சொல்கின்றனர். ஈகையாளனை உலகம் புகழ்ந்து போற்றுகிறது, ஈயாதவனை எவரும் இகழ்ந்து தூற்றுகின்றனர்.

ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம்
காயா(து) இருந்தென்ன காய்த்துப் பலனென்ன?

என காய்ந்து உலோபரை வையம் வைது வருகிறது. நசையுடையவர் வசவுகளை அடைய நேர்ந்தனர்.

உலோபி உள்ளத்தில் திடம் இல்லாதவன்; பேடி போல் பிழை நிலையில் உள்ளவன்; கொடுத்தால் பொருள் குறைந்து போகும்; அது போனால் ஏழையாய் வருந்த நேரும் என்னும் கொடிய அச்சமும் நெடிய திகிலும் அவனுடைய நெஞ்சில் என்றும் குடி கொண்டுள்ளன; ஆகவே அவன் யாருக்கும் ஏதும் ஈயாமல் இறுகப் பற்றி நிற்கிறான்’ என ஒரு மானச தத்துவக் கலைஞன் ஒர் அரச சபையில் கூறினான்.

அங்கே யிருந்த பெரியவர் ஒருவர் வள்ளலும் அவ்வாறு உள்ளம் வெருவியே பிறர்க்கு உதவி செய்கிறான் என உரைத்தார். அரசன் திகைத்து ’அது எப்படி?’ என்று வினவினான். பெரியவர் விளக்கினார்: பொருள் குறைந்து அழிந்து போகும் என்று பயந்தே உலோபி கொடாதிருக்கிறான்,

வள்ளல் உள்ளத்திலும் அந்தப் பயம் உள்ளது: "பொருள் நிலையில்லாதது; விரைவில் அழியும் இயல்பினது; அது நம் கையை விட்டுப் போகுமுன்னரே அதனைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’ என்னும் துடிப்பினாலேயே அவன் கொடுத்துத் தன் உயிர்க்கு ஊதியங்களாகப் புகழ் புண்ணியங்களை வளர்த்துக் கொள்கிறான்.

நேரிசை வெண்பா

உலுத்தன் மிடிவருமென்(று) உள்வெருவி நல்கான்
நிலத்தென்(று) ஒருவன் நிகழ்த்த - நலத்திசைகூர்
வள்ளலுமவ் வச்சம் மருவியே நல்குமென
விள்ளலுற்றான் மற்றொருவன் மெய்.

உலோபியும் வள்ளலும் உள்ள நிலைகளை இது வினோதமாய் விளக்கியுள்ளது.

அவனது அச்சம் ஊன நிலையில் ஊன்றியது; இவனுடையது ஞான நிலையில் தோன்றியது, ஈகையாளன் இம்மையிலும் மறுமையிலும் பெருமை பெறுகின்றான், உலோபன் இருமையும் சிறுமையுறுகின்றான். கொடுத்து வந்தவன் அந்தப் புண்ணியத்தால் பெருஞ் செல்வங்களை அடைய நேர்கின்றான்; கொடாது நின்றவன் மறுபிறப்பில் வறுமையாளனாகவே வருகின்றான்.

நரக துன்பம் பாவத்தால் வருகிறது; பாவம் வறுமையால் உறுகிறது; அந்த வ.றுமை இரங்கி ஈயாத கொடுமையால் நேர் கிறது; ஆகவே கொடிய நரகத்திற்கும் நெடிய தரித்திரத்திற்கும் மூல காரணம் உலோபம் என்பது தெளிய வந்தது.

படர்நரகம் பாவத்தால் பாவம் மிடியால்
மிடிஈவி லாமையினா மே.

இதனை இங்கே கருதிநோக்கி உறுதியுண்மையை யுணர வேண்டும்.

ஈயாத உலோபர் வாழ்வு எவ்வழியும் வெவ்விய பழியும் துயரங்களுமாய் மருவி விரிகிறது. கடுநசையோடு பொருளைச் சேர்த்து வைக்கின்றார், அதிலிருந்து ஒரு பயனும் பெறாமல் ஊனமாய் ஒழிந்து போகின்றார்.

நேரிசை வெண்பா

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி. 10 செல்வம் நிலையாமை, நாலடியார்

தாம் வருந்திச் சேர்த்து வைத்த தேனைப் பிறர் கவர்ந்து போக ஈக்கள் கலைந்து அலைந்து திரிதல் போல் உலோபிகள் பொருளையிழந்து மருளராய்த் திரிவர் என இது குறித்துள்ளது. பிறர்க்குதவி செய்ய அவர் மனம் இசையாதாதலால் அது விசையாய் வெளியேறி அயலே போய் விடுகின்றது.

நேரிசை வெண்பா

பிறர்க்(கு)உதவி செய்யார் பெரும்செல்வம் வேறு
பிறர்க்(கு)உதவி ஆக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4 - நன்னெறி

யார்க்கும் பயன்படாதபடி உலோபியிடம் பெருகிக் கிடக்கும் பொருளை உபகாரி வாரிக் கொண்டு போய் உலகம் உண்டு மகிழ உதவுவான் என இது உணர்த்தியுள்ளது.

இன்னிசை வெண்பா

கொடுத்துலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும். 274 ஈயாமை, நாலடியார்

உலோபியின் செல்வத்தை மற்றவரே அனுபவிப்பர் எனும் காட்சியை இது காட்டியுளது. நல்ல பெண்ணைப் பெற்றவன் பருவம் கண்டு அவளைத் தக்க ஒருவனுக்கு உரிமையாய் மணமுடித்துத் தர வேண்டும். அவ்வாறு தரின் அவள் சுக போகமாய் மனமகிழ்ந்து வாழ்வாள். மக்களும் உளவாம்; மருமகன், மகள், பேரன், பேத்திகள் என்னும் கிளைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து கொள்ளலாம். அப்படிக் கொடாதிருந்தால் மகள் குமரியாய் வீட்டிலிருப்பாள். அந்நிலையை நோக்கி உலகமும் பழிக்கும். எவனாவது ஒருவன் வந்து அவளைக் கவர்ந்து செல்வான்; அவளும் துணிந்து போக நேர்ந்தால் தந்தை பழியடைந்து வருந்துவான்;

பொருளைப் பெற்றவன் பக்குவமாய்த் தக்கவர்களுக்கு உதவினால் உபகாரி எனவுயர்ந்து புகழும், புண்ணியமும் மருவி உவகை மிகப் பெறுவான். உதவாதிருந்தால் உலோபி என இழிவான்; பொருளும் எப்படியும் வெளியே போய் பழி துயரங்களை அடைந்து இழிவாய் நொந்து அலைவான்.

ஈயும் பொருளே இசையும் இன்பமும் தருவதாம். ஈயாதது வசையும், துன்பமும் தந்து விரைவில் வெளியே தொலைந்து போய்விடும். உரிய வழியில் அளியாதது கொடிய பழியில் ஒழிகிறது.

‘ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.' என்று எழுத்து முறையில் இங்ஙனம் சுருக்கி உரைத்த ஒளவையார் பின்பு தனியே விரித்து ஈயாத பொருள்கள் போகும் வழிகளை விளக்கியிருக்கிறார்.

நேரிசை வெண்பா

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண். - ஒளவையார்

நல்ல வழியிலே நல்காத பொருள் பொல்லாத வழிகளிலே புலையாடிப் போகும் நிலைகளை இது காட்டியுள்ளது.

தனக்கு உடைமையாய் வந்த பொருளை உடையவன் கடமை ஓர்ந்து தக்க வழிகளிலே மிக்க கவனத்தோடு பயன் படுத்த வேண்டும்; அவ்வாறு நெறிமுறையே முறையாகச் செலுத்தாமல் பொருள் வெறி கொண்டு மருள் மண்டி மடையனாய் நின்றால் மடைதிறந்த வெள்ளம் போல் அது வறிதே வெளியேறி விடுகின்றது. பொருளுடையவன் நல்ல அறிவுடையனாயிருந்தால் அவன் செல்வம் ஊருணி நீர்போல் உலகம் உவந்து புகழ உயர்ந்து திகழ்கின்றது; பொல்லாத புல்லனாயிருந்தால் அது அல்லலாயிழிந்து அவமே அழிகின்றது.

மனிதன் அடையவுரிய உறுதி நலங்களுக்குப் புருடார்த்தம் என்று பெயர். அது அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு வகையாய் அமைந்துள்ளது. பொருள் ஒன்று மாத்திரம் கண்ணுக்குத் தெரிவது, மற்ற அறம் முதலிய மூன்றும் அருவமானவை. உளம், உணர்வு, உயிர்கள் போல் ஒருமையாய் மருவியுள்ள அவற்றிற்குப் பொருள் உடலாய் அமைந்திருக்கிறது.

உரிய பொருளைக் கொண்டு அரிய உறுதி நலங்களை அடைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அடையவில்லையானால் உயிர் இழந்த உடலாய்ப் பொருள் இழிந்து படுகிறது. உடலைப் பேணுவதும் புண்ணியத்தை நோக்கியே இருக்க வேண்டும். அந்த உயர்ந்த நோக்கை உடையதே சிறந்த திருவாம்; அல்லாதது இழிந்த மருளாம். பயன் படிந்த அளவு பணம் மணம் பெறுகின்றது.

உண்மையை உணர்ந்த பெரியோர்கள் பொருளின் தன்மையை அறிந்து அதனை நன்மையான வழிகளில் செலுத்தி நலம் பல பெறுதலால் அவர் உயர்ந்த வானத்தில் ஓர் சிறந்த தானம் பெற்றவராய்த் தகைமையுற்று விளங்குகின்றார்.

நேரிசை வெண்பா

செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு - நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு. 179 அறநெறிச்சாரம்

செல்வம் பெற்றவர் வாழவேண்டிய வகைகளையும், அவ்வாறு வாழ்ந்து வந்தால் அவர்க்கு வரும் பயன்களையும் இது விளக்கியுள்ளது. வைப்பு - சேம நிதி, செவ்விய இடம்.

’அழியும் இயல்பினையுடைய பொருளை அழியாமல் பேணுபவர் யார்?' என்று ஓர் அரசன் பலர் குழுமியிருந்த சபையில் சிலரது நிலைமை தெரியக் கேட்டான். ’அதனை நல்ல வழியில் வைப்பவரே’ என்று ஒரு பெரியவர் அதற்குப் பதிலுரைத்தார்

கலிநிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

செட்டும் சீருமாய் வாழ்பவர் செல்வத்தைச் சிறந்த
கட்டும் காவலும் ஆகவே பேணுவார்; கதியாய்
எட்டி மேல்வரும் இன்பநன் னலங்களை எண்ணி
இட்டு வைகலும் இசையினை எய்துவர் இனிதே.

மறுமையில் வறுமையுறாமல் வழிசெய்து கொள்பவரே பொருளை அழியாமல் போற்றினவராவார் என இது காட்டியுளது. நிலையாததை நிலையாகச் செய்பவர் தலையான நிலையானார்.

நேரிசை வெண்பா

ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங் கொள்ளாத வாறெண்ணி - மேவரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து தம்முடமை
பற்று விடுதல் இலர். 182 அறநெறிச்சாரம்

இந்தக் கவியின் கருத்தைக் கண் ஊன்றி நோக்குபவர் கலையின் சுவையையும் பொருளின் நிலையையும் உணர்ந்து மகிழ்வர்.

ஈயாதவரை உலோபர் என்பது தவறு, ஈகின்றவரே பெரிய உலோபிகள். தமது பொருள் யாதும் குறையாமல் எவரும் கொள்ளாமல் என்றும் அழியாமல் தாம் இறந்த பின்பும் தம்மை விட்டு அகலாதபடி கண்ணும் கருத்துமாய்ப் பொருளைப் பொத்தி வைத்திருத்தலால் வள்ளல்களே நல்ல உலோபிகள் என உல்லாச வினோதமாய்ச் சொல்லியிருக்கும் இதன் அழகையும் சுவையையும் கூர்ந்து நோக்கி உண்மையை ஓர்ந்து கொள்ள வேண்டும்.

வருந்தும் உயிர்களுக்குத் தன் பொருளை அருந்த உதவி அருள் புரிந்து வருபவன் பெருந்திருவாளனாய் உயர்ந்து பேரின்ப நலங்களைப் பெறுகிறான். எய்திய செல்வம் இனிது பயன்படுங்கால் அது செய்தவமாய்ச் சிறந்து உய்தி புரிந்து வருகிறது.

பெற்ற பொருளால் பெரிதும் பெறுதற்குரியது தன் உயிர்க்கினிய உறுதி நலனேயாம். அவ்வாறு அடைந்து கொள்பவன் அதிசய பாக்கியவானாகிறான்; அடையாதவன் கடையாயிழிந்து கதிநலம் இழந்து கழிகிறான்.

இன்னிசை வெண்பா

முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்
இழவென்(று) ஒருபொருள் ஈயாதான் செல்வம்
அழகொடு கண்ணின் இழவு. 343 பழமொழி நானூறு

நல்ல உருவ அழகு அமைந்திருந்தும் கண் இல்லையானால் அவன் குருடனாய் இழிவுறுதல் போல் ஈகையில்லாத செல்வமும் இழிவுபடும் என இது உணர்த்தியுள்ளது. பொருள் அழகுக்கும் ஈகை கண்ணுக்கும் இனங்களாயின. இனிய பொருளைப் பெற்றிருந்தும் ஈயாத உலோபி கண்ணில்லாதவ போல் இழிந்து கழிந்து அழிந்து போகின்றான். அவ்வாறு அவலமாய் ஒழிந்து போகாமல் எவ்வாறும் உதவி நலங்கள் புரிந்து உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-20, 11:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

மேலே