அன்புசெய வந்த அரிய பிறவியைத் துன்புசெய ஊக்கும் மடமை - கொடுமை, தருமதீபிகை 670
நேரிசை வெண்பா
அன்புசெய வந்த அரிய பிறவியைத்
துன்புசெய ஊக்கித் துயரமாய் - வன்பழியுள்
மாயும் கொடுமைபோல் மாநிலத்தில் ஓர்மடமை
ஆயும் பொழுதில் இலை. 670
- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அன்பு செய்யவே இந்த அரிய மனிதப் பிறவி வந்துள்ளது; இதனைத் துன்ப வழிகளில் செலுத்தித் துயர்புரிந்து பழியடைந்து இழியும் கொடுமை போல் கொடிய மடமை யாதும் இல்லை என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் பிறவிப் பயனை உணர்த்துகின்றது.
இந்த உலகில் சீவகோடிகள் பல தோன்றி நின்று மறைந்து போகின்றன. அவற்றுள் மனித உருவில் மருவி வருவது அரிய செயலும் பெரிய பேறுமாய்ப் பெருகியுள்ளது. அறிவு நலங்கள் பல நன்கு அமைந்திருத்தலால் மானிட சன்மம் அதிக மேன்மையுடையதாய் மேவி நின்றது. எல்லாப் பிராணிகளையும் படைத்த சிருட்டிகர்த்தா மனிதனைப் படைத்த பின்பே மகிழ்ச்சி அடைந்தான்; அதனால் மானிடர் மகிமை தெரிய வந்தது.
ஊனுடம் புடைய உயிர்களைப் படைத்தும்
உளமிக மகிழ்ந்திலன் முடிவில்
மானுடம் படைத்த பின்னரே மலரோன்
மகிழ்ச்சிமீக் கூர்ந்தினி(து) அமர்ந்தான்.
இவ்வாறு மாட்சிமை மிகுந்த பிறப்பினை அடைந்தே மனிதன் இங்கு வந்திருக்கிறான். இங்ஙனம் எடுத்து வந்த பிறவி இன்பமுடையதாய் உயர்ந்த தெய்வீக நிலையை அடைய வேண்டுமாயின் இனிய பல பண்பாடுகளைப் பழகி ஒழுக வேண்டும். பண்புகளுள் அன்பு தலை சிறந்தது. தன்னையுடையானை உயர்ந்த மனிதனாக்கி என்றும் குன்றாத இன்பநிலையில் உய்த்தருளுதலால் அன்பு சீவ அமுதமாய் மேவியுள்ளது.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 10 - முதல் தந்திரம் - 21. அன்புடைமை, திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை
அன்புக்கும் இறைவனுக்கும் உள்ள உரிமையை இது உணர்த்தியுள்ளது.
உள்ளம் இரங்கி அருளும் நீர்மையே அன்பாதலால் அதனையுடையவன் எல்லா உயிர்களும் உவந்து போற்றும் மகிமையை எளிதே அடைந்து கொள்ளுகின்றான். அன்புநலம் ஒன்றே எல்லா இன்பநலங்களுக்கும் மூல காரணமாயுள்ளது.
துன்பத் தொடர்புகள் நீங்கி உயிர் இன்பநிலையை அடைய வேண்டின் அன்பைத் தனி உரிமையாக அது.அடைய வேண்டும். அன்பு ஒன்றை அடைந்து கொள்ளின் மனிதப்பிறவி துன்பங்களை யெல்லாம் நீங்கி இன்ப நிலையை அடைந்து கொண்டதாம்.
இங்ஙனம் தனக்கு உரிமையான இனிய அன்பை இழந்துவிடின் அந்த மனித வாழ்வு பயனிழந்து பாழ்படுகின்றது. பிறவுயிர்களிடம் நன்கு அன்பு செய்யாதவன் தன் உயிர்க்கு என்றும் துன்பத்தையே செய்தவனாகின்றான்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
ஈசனுக்(கு) அன்பில்லார் அடியவர்க்கன் பில்லார்
..எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்குமன் பில்லார்
பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற்
..பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ
ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு)
..அவர்கருமம் உன்கருமம் ஆகச் செய்து
கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று
..கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே. 2 பயனியல்-பன்னிரண்டாஞ் சூத்திரம், சிவஞான சித்தியார், திருநெறி 2
அன்பு இல்லாதவர் தம் உயிர்க்கு இன்பநலன்களை இழந்தவர்; அறிவில்லாப் பிணங்கள் என இதில் குறித்துள்ளதைக் கூர்ந்து நோக்குக. நல்ல நீர்மையை இழந்தவன் பொல்லாத புலைகளில் அழுந்திப் பொன்றி ஒழிகின்றான்.
’கொடுமை போல் மடமை இலை’ அன்பு செய்ய உரிய அருமைப் பிறவியைச் சிறுமைப் படுத்தித் துன்பமான கொடுமைகளைப் பழகி நிற்பது முழுமூடமேயாகும். தனக்கு வருகிற இழிபழியையும் அழிதுயரங்களையும் அறிந்து கொள்ளாமையால் மனிதன் கொடிய செயல்களைச் செய்து அடியோடு கெடுகின்றான்.
இனிய நீர்மையாளர் பெரிய மனிதராய்ப் பெருமகிமை பெறுகின்றார், கொடுமையாளர் சிறுமையாளராய்ச் சீரழிகின்றார். உரிய தகுதி மனிதனை உயர்த்தி யருளுகின்றது; அதனை இழந்து நின்றவன் இழிந்து படுகின்றான்.
“Worth makes the man, and want of it the fellow” (Pope)
'அரிய தகுதி பெரிய மனிதன் ஆக்குகிறது, அஃது இல்லாதவன் சிறியவனாய் நிற்கிறான்' என்னும் இது இங்கே அறிய வுரியது. இயல்பு இழியவே உயர்வு ஒழிகின்றது.
பண்டு செய்த கொடுமையின் விளைவே இன்று அல்லல்களில் அழுந்தி மனிதர் அவலமாயுழலுவதற்குக் காரணமாயமைந்தது. கொடிய வினைப்பயன்கள் அடுதுயரங்களாய் அடர்ந்துள்ளன.
தனக்கு இதத்தையே எவ்வழியும் எவனும் விரும்புகின்றான். அவ்வாறான அனுபவமிருந்தும் பிறர்க்கு ஒருவன் இடர் செய்ய நேர்வது முழுமடமையாகின்றது. தான் செய்தது எதுவோ அது தனக்கே மாறி வருகிறது.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
3108 நெருப்புயிர்க்(கு) ஆக்கிநோய் செய்யின் நிச்சமும்
உருப்புயிர் இருவினை உதைப்ப வீழ்ந்தபின்
புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொதிந்து சுட்டிட
இருப்புயிர் ஆகிவெந்(து) எரியுள் வீழுமே. - கேவலோற் பத்தி, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி)
பிறவுயிர்கள் வருந்தும்படி கொடுமை செய்தவன் துயரங்களையே அனுபவித்து இழிபிறவிகளை அடைந்து எரிநரகில் விழுந்து வருந்தி அழுத்துவான் என இது குறித்துள்ளது.
தன்னைப் போல் பிறரை எண்ணி ஒழுகுபவன் நீதிமான் ஆகின்றான். அவ்வாறு கருதாமல் அவகேடு செய்பவன் அநீதியாளனாய் அவலமடைகின்றான். தரும நீதியைக் கடந்தபோது தான் மனிதன் பாவத் தீமைகளைச் செய்ய நேர்கின்றான்.
Where law ends, tyranny begins. - Johnson
'நீதி எங்கே விலகுகிறதோ அங்கே கொடுமை விளைகிறது: என்னும் இது இங்கே அறிய வுரியது. தன் உயிர்க்கு இதத்தை நாடும் இயல்பினன் பிறவுயிர்க்கு அகிதத்தைச் செய்ய முயல்வது அநியாயமாயது; ஆகவே அதன் பலனை அனுபவிக்கிறான்.
கொடுமையால் பாவம் விளைகிறது; அதனால் வறுமை முதலிய துயரங்கள் வந்து உயிர்களை வாட்டி வருத்துகின்றன.
நேரிசை வெண்பா
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி
எண்ணம் பழுதாய் இழிந்துமே - வண்ணம்
குலைந்து திரியும் கொடுமை நினையின்
உலைந்து குலையும் உளம்.
இதனை நினைந்து நெஞ்சம் இரங்கி வாழுக எனவும், கொடிய தீமைகளை மறந்து விடுக எனவும் இனிய நீர்மைகள் நிறைந்து உயர்ந்து கொள்ளுக எனவும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.