நம்பிமார் மீன் தின்றார் - நேரிசை வெண்பா

'நம்பிமார் என்பவர்கள், திருமால் கோயில்களில் பணி செய்கின்ற சிறப்பினை உடையவர்கள். மிகவும் ஒழுக்க சீலராகவும், சிறந்த பக்தியாளராகவும், ஆழ்ந்த ஞான சீலராகவும் இவர்கள் விளங்குவார்கள்.

எனினும், திருக்கண்ணமங்கை நம்பிமார்களுள் சிலர், காளமேகத்திடம் ஏதோ தாறுமாறாக நடந்திருக்கின்றனர். காளமேகத்தின் சைவச் செலவால், அவர்கள் மனக்கசப்பு அடைந்தும் இருக்கலாம். எனவே, அவர்களை நிந்தித்துக் காளமேகம் இப்படிப் பாடுகின்றார்.

நேரிசை வெண்பா

தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தார் எல்லாம்
திருக்குளத்து மீனொழியத் தின்னார் - குருக்கொடுக்கும்
நம்பிமார் என்றிருந்தோம்; நாட்டில் அழிகூத்தி
தம்பிமா ராயிருந்தார் தாம். 215

- கவி காளமேகம்

பொருளுரை:

"திருக்கண்ணமங்கைத் தானத்தாராகிய நம்பிமார்களை எல்லாம் பெருமை கொடுப்பதற்குரிய சிறந்தவர்கள் என்று இதுவரை நாம் எண்ணியிருந்தோம். ஆனால், மரங்கள் செறிந் திருக்கும் கண்ணமங்கையிலுள்ள நம்பிமார்களோ, கோயில் திருக்குளத்து மீன்களுள் ஒன்று விடாமல் தின்று விட்டார்கள். இந்தச் செயலால், நாட்டின் அழிவுக்குக் காரணமாகும் கூத்தியரின் தம்பிமாராகவே இவர்களைக் கருதுதல் வேண்டும்" என்பது இதன் பொருள்.

'திருக்குளத்து மீன் தின்னார்' என்பதைத் 'திருக்கு உளத்து மீன் தின்னார்’ எனப் பகுத்துக் கொண்டு, மயங்கித் திரியும் உள்ளத்து நினைகளாகிய மீன்களை அடக்கி ஆட்கொண்டனர் எனவும் பொருள் கொள்ளலாம்.

ஆனால், கண்ணபுரத்தைப் பற்றி இவர் பாடியிருக்கும், 'கண்ணபுரமாலே’ என்னும் செய்யுளை நோக்கினால், இவர் நம்பியார்கள்மீது வசைபாடியதாகவே கொள்ள இடமேற்படுகின்றது. மற்றும் 'கண்ணபுரம் கோயிற் கதவடைத்து' என்ற செய்யுளும் இதனை வலியுறுத்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-20, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே