இரங்கார் இதம்செய்யார் வெய்தாம் அவர்வாழ்வு வீண் - உலோபம், தருமதீபிகை 679
நேரிசை வெண்பா
பொல்லா உலோபம் புகுந்திருக்கும் நெஞ்சிலருள்
நில்லா ததனால் நெடுஞ்செல்வம் - எல்லாம்கை
எய்தியிருந் தாலும் இரங்கார் இதம்செய்யார்
வெய்தாம் அவர்வாழ்வு வீண். 679
- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை: கொடிய உலோபம் புகுந்திருக்கும் நெஞ்சில் இனிய அருள் இராதாதலால் உலோபிகள் எவ்வளவு செல்வங்களை எய்தியிருந்தாலும் யாதும் இரங்கார்; யாருக்கும் இதம் செய்யார்; அவருடைய வாழ்வு பயனற்ற பாழாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பொல்லா என்னும் அடை உலோபத்தின் எல்லாத் தீமைகளையும் எதிருணர வந்தது. நல்ல மனிதப் பிறப்பை அடைந்து செல்வ வளங்கள் நிறைந்து சிறந்த மனிதனெனத் தோன்றியுள்ளவனை இழிந்தவனாக்கி எவ்வழியும் பழிகளைச் சுமத்தி அழிவு செய்து வருதலால் உலோபம் பொல்லாதது, புலையானது, பழி பாவங்கள் படிந்தது என இளிவு கொண்டு நின்றது.
தன் பொருளைப் பிறர்க்கு உபகாரமாய் உதவுகின்றவன் ஈகையாளன் ஆகின்றான். அன்பு, அருள், இரக்கம், கண்ணோட்டம் என்னும் அரிய நீர்மைகள் ஈதலுக்கு உரிமைகள் ஆகின்றன. பிற உயிர்களின் துயர்களுக்கு இரங்கியருளுவது உயர்ந்த மேன்மக்களின் தனி இயல்பாயமைந்துள்ளது.
உலோபம் கொடிய நீசம் உடையதாதலால் அந்தப் புலை படிந்த உள்ளத்தில் அருள் முதலிய நல்ல இயல்புகள் நில்லா. தன் உயிர் போக நேர்ந்தாலும் பொருளைக் கைவிடாத பொல்லாத நிலையிலேயே நெடிது பழகிக் கடிது தோய்ந்து வந்துள்ளமையால் பிற உயிர்கள் துயருறக் கண்டாலும் உள்ளம் இரங்கி உலுத்தன் உதவ மாட்டான். சீவ தயை எதையும் உதவ நேர்கிறது; அந்த அனுதாபம் நெஞ்சில் இல்லாமையால் உலோபியிடம் உபகாரம் நில்லாமல் ஒழிந்து போயது.
Nature never makes men who are at once energetically sympathetic and minutely calculating.(George Eliot)
’உலோபமும் கருணையும் ஒருங்கே வாய்ந்த மனிதரைக் கடவுள் ஒரு போதும் படைக்கவில்லை’ என்னும் இது இங்கே அறியவுரியது. பொருளின் மருள் அருளை இழந்து விடுகிறது.
பிறர்க்கிரங்கி இதம் செய்வதால் தன்னுயிர்க்கு உயர்ந்த இன்ப நலங்கள் விளைந்து வருகின்றன. இந்த அரிய வரவுகளை உலோபி அநியாயமாயிழந்து விடுகிறான். செல்வம் கிடைத்தும் நல்ல பயனை அடையாமல் நாசமடைந்து போதலால் அந்த வாழ்வு நீசம் என நேர்ந்தது.
கொடாதிவறும் மடாஅ வெறுக்கையின்
துனியுறு வறுமை நனிசிறந் தன்றே;
இம்மைப் பழியும் அம்மை நரகும்
பெரும்பசி உழக்கும் இரும்பேய்ப் பிறவியும்
ஓவின்று யாண்டும் ஈவின்று மாதோ!
ஈயாத உலோபி இழிநிலையில் வாழ்ந்து பழி நரகங்களை அடைந்து அழி துயரடைவான் என இது குறித்துள்ளது. அருமையான பொருள் தன் கையில் உரிமையாய்க் கிடைத்திருந்தும் அதன் பயனை அடையாமல் பாழ்படுதலால் உலோபியின் தோற்றம் இழிவாய்த் தூற்றப்பட்டது.
நேரிசை வெண்பா
ஈயாது வீயும் இளிவுடையார் இவ்வுலகில்
காயாத புன்மரம்போல் கண்தோன்றி - தீயார்தன்
வாயில் உடலை வறிதொழித்துப் பேயாகி
ஓயா(து) உழல்வர் உழந்து.
ஈயர்மல் மாயும் இழி நிலையாளர் காயாத புன்மரம் போல் வீணே தோன்றி வளர்ந்து முடிவில் தமது உடலைத் தீயினுக்கு இரையாய் இழந்து விட்டுப் பேயாய்ப் பிறந்து ஓயாமல் உழலுவர் என இது உணர்த்தியுள்ளது.
கட்டளைக் கலித்துறை
நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை யாடி நயம்புரியும்
தாயார் வயிற்றின் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயா மரமும் வறளாம் குளமும்கல் ஆவுமென்ன
ஈயா மனிதரை ஏன்படைத் தாய்கச்சி ஏகம்பனே! 21 திருவேகம்பமாலை, பட்டினத்தார்
நாயும் ஓர் உதவி புரியும்; உலோபி யாதும் பயன் இல்லையே! அவனை ஏன் படைத்தாய்? தெய்வமே; என இறைவனை நோக்கிப் பட்டினத்தார் இப்படிப் பரிந்து நொந்து பாடியிருக்கிறார்.
’ஆன்மாவை நாசப்படுத்தி நரகத்தில் தள்ளும் கொடிய தீமைகள் காமம், கோபம், உலோபம் என்னும் மூன்றுமேயாம்; இவற்றை மனிதன் கடிந்து ஒழிக்கவேண்டும்” எனக் கண்ணன் போதித்துள்ளார். உலோபம் நரகத்தின் வாசல் என்றதனால் அதன் கொடுமையைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளலாம். உயிர்க்கு ஊனம் புரிதலால் ஆன்ம நாசமாய் நின்றது.
இரக்கமின்றிக் கொடிய வன்கண்மையாயிருத்தலால் உலோபம் படுபாதகமாய் வந்தது; ஆகவே அதனையுடையவன் பாவியாய் நரக துன்பத்தை அடைய நேர்ந்தான்.
செல்வத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்ல மனிதன் அதனை நல்லவகையில் உபயோகப்படுத்தாமல் ஊனமாய் நின்றால் அது அவனை மானம் கெடுத்து ஈனனாக்கி இகழ்ந்து விட்டு ஒதுங்கிப் போகின்றது.
பிறர்க்கு உதவாமையால் உலோபி தருமத்தை இழந்தான்; தான் அனுபவியாமையால் இன்பத்தையும் இழந்தான். இன்னவாறு இழவுகள் அவனைத் தழுவிக் கொள்வதால் அவனுடைய வாழ்வு அவலத் துயரங்களாய் நின்றது.
பேய்வாயில் சிக்கிய பிள்ளைபோல் பொருளாசையால் பித்தேறியிருத்தலால் ஒத்தது யாதும் உணராமல் ஒரு வகையிலும் உதவாமல் உலோபி சவமாய்த் திரிய நேர்கின்றான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
நல்லுடை புனையான்; உண்டி
..நயந்தெரிந்(து) உண்ணான்; நல்லோர்
சொல்லிய அறமும் செய்யான்;
..சுகமென்ப(து) ஒன்றும் ஓரான்;
புல்லிய உலோபம் என்னும்
..பூதம்வாய்ச் சிக்கி என்றும்
அல்லலே அடைந்தான்; செல்வம்
..யாவுமே இழந்தான் அந்தோ!
உள்ளத்தில் உலோபமுடையவன் உலகத்தில் வாழ்ந்து கழியும் நிலையை இது குறித்துள்ளது. பெற்ற திருவின் பயனைப் பெறாமல் ஒழிவது பெருங்கேடாய் நின்றது.
நேரிசை வெண்பா
உண்ணாது நின்றான் உறுதி நலமிழந்து
கண்ணாணை செத்தான் கதியற்றான் - அண்ணா,நீ
தேர்ந்து பொருளின் திறமறிந்து நல்லறத்தை
ஓர்ந்து புரிக உடன்.
உலோபியாயிருந்த தன் தமையனை நோக்கி ஒரு தம்பி இப்படிப் புத்தி கூறியிருக்கிறான். சேர்ந்து நின்ற பொருளைச் செவ்வையாய்ப் பயன்படுத்தின் அவன் சீர்மையும் சிறப்பும் பெறுகின்றான். பிறவிப்பேறு தெரிந்து பெருமை பெறவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.