கொடுமை புரியின் கொடியவன் ஆகிப் படுதுயரில் வீழ்ந்து பதைப்பாய் - கொடுமை, தருமதீபிகை 669

நேரிசை வெண்பா

கொடுமை புரியின் கொடியவன் ஆகிப்
படுதுயரில் வீழ்ந்து பதைப்பாய்; - கொடுமையின்றி
உள்ளம் இரங்கி ஒழுகின் உயரின்ப
வெள்ளம் பெருகும் விரைந்து. 669

- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொடிய செயல்களைச் செய்தால் கொடியவன் என்று பழிபடிந்து படுதுயரங்களில் வீழ்ந்து பதைப்பாய்; கொடுமையின்றி உள்ளம் இரங்கி உதவி புரியின் பேரின்ப வெள்ளம் விரைந்து பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவன் செய்துவரும் செயல்களால் அவனுடைய மனநிலைகளும் மருவியுள்ள வாசனைகளும் அறிய வருகின்றன. வெளி அசைவுகள் உள்ளத்தின் இசைவுகளாயுள்ளமையால் அவை மனிதனை அளந்து காணச் செய்கின்றன. இனிமை இன்பங்களையே யாவரும் விரும்புகின்றனர்; கொடுமை துன்பங்களை எவரும் விரும்புவதில்லை. இவ்வாறு வெறுப்பாயுள்ளவற்றை விரும்பிச் செய்வது விசித்திர வியப்பாயுள்ளது.

இளமையிலிருந்தே சிறிது சிறிதாகத் தீமைகளில் பழகி வருவதே பின்பு கொடுமைகளைத் துணிந்து செய்ய ஏதுவாகின்றது. பழகிய பழக்கத்தின் பயனாகவே மனிதன் விளைவுற்று நிற்கின்றான். கொடுமையால் சீவ இம்சை மருவியிருத்தலால் அதனையுடையவன் பாவியாய்ப் பழிக்கப்படுகிறான்.

தன் செயலால் தான் இழிந்து கெடுவதை அறிந்து கொள்ளாமல் ஒருவன் களித்துத் திரிவது.அவகேடான மூடமாயுள்ளது.

’கொடியது கொம்பு ஒடியும்; கடியது கால் ஒடியும்’ என்பது பழமொழி. கடுமை கொடுமைகளால் வரும் கேடுகளை இது விளக்கியுள்ளது. இனிய அமைதி மனிதனைத் தனி மகிமையில் உயர்த்துகிறது. கொடிய துடுக்குச் சிறுமையில் ஆழ்த்தி நெடியதுயரங்களை விளைக்கின்றது.

’படுதுயரில் வீழ்ந்து பதைப்பாய்’ என்றது கொடிய செயலால் வரும் பயனை முடிவாக உணர்ந்து கொள்ள வந்தது. செய்த கொடுமை செய்தவனை உய்தியில்லாத துயரில் ஊக்கித் தள்ளுமாதலால் அந்த உண்மையை ஊன்றி நோக்கி அவன் உய்தி பெற வேண்டும்.

உள்ளம் இரங்கி ஒழுகின் இன்ப வெள்ளம் பெருகும். இரக்கத்திற்கும் இன்பத்திற்கும் உள்ள உறவுரிமையை இது உணர்த்தி நின்றது. எவ்வுயிர்க்கும் யாதும் கொடுமையைச் செய்யாதவன் தன் உயிர்க்குப் பெரிய இன்ப நலனைச் செய்தவனாகின்றான். அதிசய விளைவு மதி தெளிய வந்தது.

அருள் இரக்கம் மனிதனைப் பெரிய மகானாக்கி விடுகின்றது; அரிய மகிமைகள் எல்லாம் அவனை நோக்கி ஆவலோடு வருகின்றன. இனிய பரிவு இன்பப் பேறாகின்றது.

பிற பிராணிகள் ஏதேனும் அல்லலடையக் கண்டால் அருளாளர் உள்ளம் உருகி அயர்கின்றனர்; அந்த இயல்பினால் அவரது பரிவு நிலையும் பரிபாக நிறைவும் அறியலாகும்.

நேரிசை வெண்பா

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க – தெரிஇழாய்!
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண். 20 - நன்னெறி

பிறர் துயருறுவதைக் காணின் பெரியோர் உள்ளம் நெருப்பிலிட்ட வெண்ணெய் போல் நெகிழ்ந்து உருகும் என இது உணர்த்தியுள்ளது. கண்ணை அவருக்கு உவமை கூறியிருப்பது எண்ணி யுணரவுரியது. நீர்மை சுரந்த பொழுது சீர்மை நிறைந்து உலக சமுதாயத்தில் தலைமையாய் மனிதன் உயர்ந்து விளங்குகிறான். உயிர்களிடம் இரக்கமுடையவன் துயரம் நீங்கி உயர் பதவியை மருவி மகிழ்கின்றான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உருமலி உலகில் உன்னைநான் கலந்தே
..ஊழிதோ றூழியும் பிரியா(து)
ஒருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன்
..உன்னையே பாடிநின் றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்(கு)
..இடுக்கணுற் றாலவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடை யவராய்ச்
..செய்யவும் இச்சைகாண் எந்தாய்! 17 - 019. பிள்ளைச் சிறு விண்ணப்பம், ஆறாம் திருமுறை

வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
..வழக்கிலென் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
..விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவயென் உயிர்தான் உயிர்இரக் கந்தான்
..ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவிலென் உயிரும் ஒருவுமென் உள்ளத்
..தொருவனே நின்பதத் தாணை. 97- 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம், ஆறாம் திருமுறை, திருவருட்பா

இந்த இரண்டு பாசுரங்களும் இங்கே சிந்தனைக்கு உரியன. இராமலிங்க சுவாமிகளுடைய அனுபவ நிலைகளை இவை உணர்த்தியுள்ளன.

‘இரக்கமே என் உயிர்; அது இல்லையேல் எனக்கு உயிரில்லை’ என அந்த அருள்வள்ளல் உரைத்திருப்பது ஊன்றி உணரவுரியது.

சீவ தயை மீதூர்ந்து உள்ளம் உருகி உயர்ந்தவர் பெரிய மகான்களாயுள்ளனர். நெஞ்சக்கனிவு பரம நீர்மையை மருவி மிளிர்கிறது. வஞ்சக் கொடுமை வன் துயரமாகிறது.

கொடியர் கடையராயிழிந்து ஒழிகின்றார்; இனிய நீரர் தனி மகிமை அடைந்து இன்ப நிலையில் உயர்கின்றார். கொடுமை புரிந்து குடி கெடாதே. கருணை புரிந்து கதிகலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Nov-20, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே