சாகலானான் - நேரிசை வெண்பா
வேளாளன் ஒருவன் வீட்டிற்குக் காளமேகம் சென்றார். வேளாளர்கள் விருந்தினைப் பேணுகின்ற பண்பு கொண்டவர்கள். ஆனால், அந்த வேளாளனோ பண்பற்றவனாக இருந்தான். வீட்டில் இருந்து கொண்டே, மனைவி மூலம், வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லிக் கவிஞரை அனுப்பிவிட முயன்றான். அவனுடைய செயல் கவிஞரை வருத்த, அவர் பாடிய செய்யுள் இது.
நேரிசை வெண்பா
பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக்
காலமென வந்த அடைக்கலவன் - சூலந்
திருக்கையி லேந்தும் சிவனிருக்க வேளான்
இருக்கையிலே சாகலா னான். 214
கவி காளமேகம்
பொருளுரை:
“ஒருபால் உடலைத் தாங்கி நின்றே பேயாக உருமாறிய காரைக்கால் அம்மையார், அக்காலத்தே பரிவுடன் பேணிக் காத்த சிவனடியார் கூட்டத்திலே தான் வாழுதற்கான காலபேதம் என்ற ஒன்றைக் கருதியே வந்து சேர்ந்திருக்கின்றான் இந்த வேளாளன். எமனது பாசத்துட்படாது அடைக்கலம் தருபவனாகிய, சூலத்தைத் திருக்கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான் இருக்கவும், இவன் உடலில் 'உயிர் இருக்கையிலேயே இல்லாமற் போய்ச் சாகிறவன் ஆகின்றானே' என்பது பொருள்.
இருந்தும் இல்லையென்பதனால், அவனை இல்லாதவனாகவே கொண்டு, 'சாகலானான்’ என்கின்றார் கவிஞர். இதன்பின், அவன் தன் செயலுக்கு நாணியவனாகக் கவிஞரைப் பணியக் கவிஞரும் அவனை மன்னித்து, அவனாலே உபசரிக்கப் பெற்று மகிழ்ந்தனர்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
