ஊறல் அமிர்தம் - நேரிசை வெண்பா
காளமேகத்தின் ஓலையைப் பெற்ற தொண்டியும், அவர் விரும்பியபடியே, விரைந்து குடந்தைக்கு வந்து சேர்ந்தாள். இருவரும் ஆராத காம மயக்கத்தில் ஆழ்ந்து திளைத்தனர். அப்பொழுது, அவளை வியந்து சொல்லிய செய்யுள் இது.
நேரிசை வெண்பா
தேற லமிர்தம் தெவிட்டிடி னுங்கனிவாய்
ஊற லமிர்தம் உவட்டாதே - வீறுமதன்
தன்னாணை நள்ளாறர் தம்மானை யும்மாணை
என்னாணை தொண்டியா ரே! 213
- கவி காளமேகம்
பொருளுரை:
தேன் கலந்த பாலாகிய அமுதம் உண்ணத் தெவிட்டினாலும், உன்னுடைய கோவைக் கனிபோன்ற வாயிதழ்க்கடையில் ஊறிவரும் அமுதம் உண்ண உண்ணத் தெவிட்டாத இன்பத்தைத் தருவதாயிருக்கிறது. வீறு மதனின் ஆணை! நள்ளாற்றில் கோயில் கொண்டிருக்கும் பெருமான் மீது ஆணை உன்மீது ஆணை! என்மீது ஆணை! தொண்டியாரே! எம்மைக் கைவிடாதேயும் என்பது பொருள்.