பித்தம் படிந்த பிசுனன் எதையும் ஒடிந்தும் உதவான் உணர் - உலோபம், தருமதீபிகை 678

நேரிசை வெண்பா

செத்த சவமும் சிலர்க்குதவி யாயிருக்கும்
ஒத்த உருவில் உயிரிருந்தும் - பித்தம்
படிந்த பிசுனன் படியில் எதையும்
ஒடிந்தும் உதவான் உணர். 678

- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செத்த சவமும் சிலர்க்கு உதவியாயிருக்கும்; உயிரோடு இருந்தாலும் உலோபி யார்க்கும் யாதும் உதவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்,

பொருந்திய மனித வடிவத்தை ஒத்த உருவு என்றது. அரிய பேறாய்க் கிடைத்துள்ள மனித உருவை அடைந்திருந்தும் உரிய பயனை அடையாமையால் அந்தப் பிறப்பு அவலமாயிழிந்து கழிந்து போகிறது.

உலகப் பொருள்கள் உயிரினங்களுக்குப் பயன்படும் அளவு உயர்வாக மதித்து உவந்து போற்றப் படுகின்றன. பயன் இல்லாதன இகழ்ந்து தள்ளப்படுகின்றன. பிற உயிர்களுக்கு இதமாய்ப் பயன்பட்டுவரின் அந்த மனிதன் தன்னுயிர்க்கு உயர்ந்த பயனடைந்தவனாய் ஒளி நிறைந்து வருகிறான், வெளியே விதைத்தது உள்ளே விளைவாய்த் தழைத்து வருகிறது. பருவம் கண்டு விதையாதவன் வறியனாய் வாடி வசையும் துயரும் நீடி இழிந்து போகிறான். ஈனப் போக்குகள் இழிவுகளாய் வருகின்றன.

இந்த இழிவையும் அழிவையும் தழுவி உலோபி பழியாய்ப் பாழ்படுகின்றான். பொருளாசையால் குருடுபட்டு அறிவுக்கண் பாழாயுள்ளமையால் தனக்கு நேருகிற பழிகேடுகளையும் அழி துயரங்களையும் அறிய முடியாமல் அவன் வெறியனாய் விளிந்து கழிகிறான். ஆவதை அறிந்து கொள்வதே அறிவின் பயனாம்.

’பொருளைப் போற்றி வாழ்’ என்பது பொருளாதாரத்தின் நீதி போதனை. கருதிப் பேணி வருவது காணியாய் வருகிறது.

’ஊணின் மிச்சம் உலகம் ஆளும்’ என்பது பொருள் வளர்ச்சியின் பழமொழி. அதுவளர்ந்து வர யாவும் கிளர்ந்து வருகின்றன.

இவ்வாறு பொருளைப் போற்றி வாழாமல் அதனைத் தூற்றி விடலாமா? கையிலுள்ளதை வெளியே விடின் பின்பு வறியனாய் நைய நேருமே! வறுமையுறின் சிறுமைகள் பலவும் வந்து விடுமே! என இன்ன வகையான ஐயங்கள் இங்கே தோன்றலாம்.

செட்டும் சிக்கனமும் உயர்ந்த வாழ்க்கையின் சிறந்த அறிகுறிகள். உழைப்பும் சிக்கனமும் எவ்வழியும் பொருளைப் பெருக்கி வருகின்றன. அப்பெருக்கம் மகிமைகளை அருளுகின்றது.

வெண்ணெய்நல்லூர் சடையப்பர் பெரிய கொடை. வள்ளல்; நிறைந்த செல்வர். செட்டும் சீருமான வாழ்க்கையில் கட்டும் காவலும் உடையவர். ஒரு நெல் வெளியே சிந்திக் கிடந்தாலும் அதனை எடுத்துச் சேர்ப்பார். முற்றத்தில் சிதறிக் கிடந்த நெல் மணிகளை ஒருநாள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவ்வமயம் பரிசில் கருதி அவரிடம் ஒரு புலவர் வந்தார். நிலைமையைப் பார்த்தார். இப்படிக் கஞ்சத்தனமாயிருப்பவர் நமக்கு என்ன கொடுப்பார்? என்று அவர் கருதினார். பின்பு அவரை உபசரித்து விருந்து புரிந்து ஒரு பெருந்தொகையை இவர் உவந்து கொடுத்தார். அவர் வியந்து மகிழ்ந்தார். தான் கருதிய பிழையை உரியவரிடம் அவர் மறுகி மொழிந்தார். இப்படிக் காணி காணியாய்த் தேடுவது கோடி கோடியாய்க் கொடுக்கவேயாம்' என இக் கொடை வள்ளல் உரைத்தார். புலவர் புகழ்ந்து போயினர்.

நேரிசை வெண்பா

சிந்தியவோர் நெல்லையுமே சிந்தாமல் சேர்த்துவந்தார்;
வந்தவருக்(கு) எல்லாம் வழங்கினார்; - அந்த
அருளாளர் செய்கை அரசர் முதலாய்ப்
பொருளாளர் கண்டார் புகழ்ந்து.

இங்கே நிகழ்ந்துள்ள நிலைகளைச் சிந்திக்க வேண்டும். செட்டு நல்லது. உலோபம் கெட்டது. செட்டும் சீருமாய் உள்ளவரை உலோபி என்று சொல்லி விடலாகாது. அளவறிந்து செட்டாய் வாழ்பவரே வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாய் நடத்துபவராவர்.

உலோபம் எவ்வழியும் யாருக்கும் யாதும் உதவாத ஈன இயல்பாதலால் அதனையுடையவர் யாவராலும் இழிக்கப்படுகின்றார். யாதொரு வகையிலும் இரங்கி உதவாமல் மடமையாய் மருள் மண்டி நிற்பவரை வையம் வைது வருகிறது. கண் இருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்ச் சுவை கெட்டிருத்தலால் உலோபிகள் பூமிக்குப் பாரங்களென இகழப்பட்டுள்ளார். பயன் அற்றவர் பழியாளராயினார்.

நேரிசை வெண்பா

வள்ளல் எனக்கூறி வாழ்த்தினும் வாய்திறவார்;
எள்ளளவும் ஈய இசையாரே! - உள்ளும்
செவிக்குணவு கொள்ளாச் செவிடரிவர் அன்றிப்
புவிக்குப் பொறையார் புகல்.

அரிய பொருளை அடைந்திருந்தும் கொடிய உலோபத்தால் இவ்வாறு கடையராய்க் கழிய நேர்ந்தார். பயன் இலாமையால் பழிகள் படிந்து இழிவுகள் மிடைந்து அழிவுகள் அடைந்தன.

பன்னிருசீர் விருத்தம்

பதரா கிலும்கன விபூதிவிளை விக்கும்,
பழைமைபெறு சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடுரிஞ் சிடும்,மலம்
பன்றிகட்கு பயோகம்ஆம்,

கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும்,வன்
கழுதையும் பொதிசுமக்கும்,
கல்லெனில் தேவர்களும் ஆலயமும் ஆம்,பெருங்
கான்புற்ற ரவமனைஆம்,

இதமிலாச் சவமாகி லும்சிலர்க் குதவிசெய்யும்,
இழிவுறு குரங்காயினும்
இரக்கப்பி டித்தவர்க் குதவிசெயும், வாருகோல்
ஏற்றமா ளிகைவிளக்கும்,

மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்
மற்றொருவ ருக்குமுண்டோ?
(மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. - குருபாததாசர்

பன்னிருசீர் விருத்தம்
(மா மா காய் / மா மா காய் அரையடிக்கு)

கல்ஆ லயமாம், தேவருமாம்; கழுதை கசடர் பொதிசுமக்கும்;
கடாவோ உழுது பயிரிடற்காம்; கட்டம் பன்றிக்(கு) இரையாகும்;

புல்ஏ(று) ஈசர் வாகனமாம்; பொதியும் சுமக்கும்; பிணம்எனிலோ
பூசி முடித்து மறையோர்க்குப் பொருளை ஈந்து புகழ்எய்தும்,

மல்லார் குட்டிச் சுவர்எனிலோ மாடும் உரைஞ்சும்; மறைவாகும்;
மதியாத் துடைப்பம் தானெனிலோ மாட கூடங் களைவிளக்கும்;

அல்லா உலுத்தன்.தனக்கினையாய் யாரை உரைப்பேன் புவிமீதில்
அவனைக் குறித்துக் கூறுமிடத்து) அவனுக்(கு) அவனே சரிதானே. - இராமச்சந்திர கவிராயர்

இந்த உலகிலுள்ள எந்தப் பொருளும் ஏதேனும் பயனுடையதாம்; உலோபி மாத்திரம் யாதொரு வகையிலும் பயன்படாதவன் என இவை உணர்த்தியுள்ளன. பாழான அவனது இழி நிலை தெரிய வந்தது.

பொருள் மயக்கால் மயங்கி மருள் மண்டியிருத்தலால் உலோபனை யாரும் திருத்த முடியாது, யாண்டும் அவமே நீண்டு எவ்வழியும் நசையாய் வசைபடிந்தே நிற்பான்.

தேன்கொண்ட துளிஒன்றி னால்ஏழு கடலெலாம்
தித்திக்கவே செய்யினும்
செய்யபூ மலரினால் வச்சிரம் தன்னைச்
சிதையவே பொடிசெய்யினும்
கான்கொண்ட மலையெலாம்.கைக்கொண்டு வெண்ணெயால்
கவினுற்ற மெருகு செயினும்
கயவர்க்கு நீதியும் பேடிக்கு வீரமும்
கபடர்க்கு மெய்ஞ்ஞானமும்
ஊன்கொண்ட மூடர்க்கு இரக்கமும் தெளிவுற
உரைத்து நலமே செய்யினும்
ஊமை செவிடன் குருடன் முத்தமிழ் படிக்கினும்
உலோபருக்கு ஈவு வருமோ? - மணவாள நாரணர்

ஈயாத உலோபரின் தீய நிலைமையை இது தெளிவாக விளக்கியுளது. உலோபி எந்த வகையிலும் இரங்கான்; யாதும் கொடான்; எனவே அவனது மடமையும் கொடுமையும் மருளும் மயக்கமும் அறியலாகும். இவ்வாறு வெறியனாயிழிந்து வீணே அழிந்து போகாமல் உதவி புரிந்து உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Nov-20, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே