பன்றியாய் மனம்

உழைப்பிற்குரிய ஊதியமில்லாததாலும்
ஊதரித்தனங்கள் உடலைப் பற்றியதாலும்
உள்ளார்ந்த அறிவு ஊமையானதாலும்
பணத்தின் தேவை மிகுதியானதாலும்

பன்றியாய் மனம் பரபரக்கின்றது
அசுத்தங்களும் இப்போது அமிழ்தமானது

வசிப்பிடம் இப்பொழுது இம்சையானதும்
வரிந்து வந்த உறவு வம்பாய் போனதும்
நிறைந்து இருந்த சொர்ணம் குறைந்து போனதும்
குடியால் வந்த கூறில்லா குறைபாட்டால்

பன்றியாய் மனம் பரபரக்கின்றது
அசுத்தங்களும் இப்போது அமிழ்தமானது

சொல்லும் வாக்கும் பொருந்தாத வகையில் செயலும்
சொற்ப சுகத்திற்கு சுற்றத்தாரோடு பெரும்பகையும்
காமத்தால் எழுந்த காதலினாலான பிணைப்பால்
காலந்தோறும் பெரிய குடைச்சலால் நிதானங்கெட்டு

பன்றியாய் மனம் பரபரக்கின்றது
அசுத்தங்களும் இப்போது அமிழ்தமானது

சதுரக் கதிரவன் கிழக்கில் தோன்றுமென எண்ணியும்
உதிரம் வெள்ளையாய் உருவாகி உயிர் காக்கும் என
ஊமையிடம் தோன்றி இறை இரகசியம் கூறியதாய்
உதவாத கற்பனையை வளர்த்து வாழும் மனிதர்போல்

பன்றியாய் மனம் பரபரக்கின்றது
அசுத்தங்களும் இப்போது அமிழ்தமானது
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Nov-20, 10:57 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 96

மேலே