மன வாசனை

மதகு மேல் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான் அமர்.மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்று சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்தது . மலையின் பழுப்பும் பச்சையும் கலந்த போர்வை பாதி சூரிய ஒளி பட்டும் பாதி கருமேக நிழல் பட்டும் இரவும் பகலும் இங்கே தான் உருவாகிறதோ என்பது போல் தோன்றியது.
ஒரு சீரான சத்தத்தோடு மதகில் இருந்து சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தது தண்ணீர்.
மழையையும் பார்த்து மதகு தண்ணீரின் வேகத்தையும் பார்த்த அமர் புன்னகைத்துக் கொண்டான். மலைபோல் மனம் தைரியமாக இருந்தாலும் அழுத்தம் காரணமாக சீறிக்கொண்டு பாயும் தண்ணீர் போலத்தான் மனமும் சிலநேரங்களில் சீறிப்பாய்ந்து தன் உணர்வை முடியாமையை வெளிப்படுத்துகிறதோ எனத் தோன்றியது.
டேய் அமர் ஏண்டா வெறிச்சு பாத்துக்கிட்டு இருக்கே? வந்து கொண்டு இருந்த நண்பன் சிலம்பு குரல் கொடுத்தான். குரல் கேட்டு திரும்பினான் தன் நண்பர்கள் நான்கு பேர்கள் வந்தார்கள்.
டேய் நம்ம பசங்க கிரிக்கெட் விளையாடறாங்க. வாங்க நாமளும் போய் விளையாடலாம் என்று அமரை அழைத்தார்கள்.
நீங்க வேணா போங்க நான் கொஞ்ச நேரம் மழையை பார்த்துட்டு வரேன்.
டேய் இவன் ஒரு லூசுடா. அந்த மலையையும் மழையையும் என்னடா ரசிக்கிறே?
என்ன லூசுன்னு சொன்னா சொல்லுங்கடா. ரசிக்கனும்டா. இந்த மாதிரி இயற்கையை உன்னால உண்டாக்க முடியுமா ?அங்க பாரு .அந்த மலைமேல் எப்படி விழுகிற மழை திறை பாதி பாதியா பிரிஞ்சி தெற்கேயும் வடக்கேயும் யாரோ இழுக்கிற ஸ்கிரீன் போல போறத பாருடா என்ன அற்புதம் என்ன அற்புதம்.
‌‌ ஏண்டா எப்படிடா இப்படி கற்பனை பண்றே?
கற்பனை இல்ல முத்து நெசம் .இந்த அழகை ரசிக்கும் மனம் நெசம் .மனசுல அதன் வாசனைகள் நெசம். மண்வாசனை எப்படியோ அதுமாதிரி மனவாசனையும் நெசம்டா. எல்லாத்தையும் ரசிக்க கத்துக்கிட்டா கவலையே இல்லையே.
எல்லாத்தையுமா ?உன் மாமன் மகளைக்கூடவா நீ ரசிக்கிறே?
சட்டென திரும்பிய அமர் இயற்கையை ரசிக்க மனம் வேறே.இது பரந்து விரிந்து பரவசப்படுத்தும் .பெண்களை ரசிக்கிற மனம் வேறே. அது காமத்தோடு கலந்து காணாமல் போகும்.
டேய் வாங்கடா இவன் புலம்ப ஆரம்பிச்சிட்டான்.நாம போய் விளையாடலாம் .நண்பர்கள் கலைந்து போனார்கள்.
மாமன் மகள் .பாவாடை தாவணி போட்ட நாளிலிருந்து பார்க்காத நாள் இல்லை .நான்கு வீடுகள் தள்ளி இருந்த அவளை வம்புக்கு இழுக்காத நேரமில்லை .கண்ணாமூச்சி ஆடியதும் பாண்டி ஆடியபோது தள்ளிவிட்டு சிரித்ததும் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவள் வெட்கம் காட்டியதும் அழுவது போல் பாசாங்கு செய்து கொண்டு நின்றிருந்ததும் நினைவுக்கு வரும் .ஆனால் காதல் வந்ததில்லை.
காலம் ஓடியது. இசைக் கல்லூரியில் தான் படித்தபோதுதான் தன் ரசனைகள் இசையோடு சம்பந்தப்பட்டது என புரிந்தது .பாரதியும் பாவேந்தரும் தன் குரலுக்குள் காலடிஎடுத்து வைத்தபோதுதான் தன் கணீர் குரலோடு கலந்து ஒரு காண குயிலின் குரலும் இணைந்து இசையை உயிரோட்டம் ஆக்கியது .மனம் ஏதோ ஒரு உணர்வில் துள்ளியது. இசையோடு காதல் ராகமும் இணைந்தது .மனம் மகிழ்ந்தது .தன்னைச் சுற்றிலும் வாசனை கலந்தது போல் தெரிந்தது.
இசை படிப்பு முடிந்து தான் பிறந்த தேவாரம்கிராமத்து மதகின் மேல் மாலை நேரத்தில் அமர்ந்து பாரதியின் கண்ணம்மா வைப்போல் தன் செல்லமான கவிதாவை நினைத்து பாடுகிற போது பறவைகள் கூட தன் சிறகை விரித்து வட்டமடித்து ரசித்ததை பார்த்து மயங்கி கிடப்பான் அமர்.
ஆனால் இன்று
மாலை நேரத்து மதகு நீரின் சங்கீதம் தன் குரலின் சாதகத்தில் கண்சிமிட்டி பார்க்கும் நட்சத்திர வெட்கம் நண்பர்களின் கிண்டல் வார்த்தைகள் ஏதுமில்லா தற்போதைய நகர வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே நரகமாக இருந்தது.
ஒரு நாள் மதகு மேல அமர்ந்து அமர் பாடுகையில் "டேய் தாவாரத்திலே தேவாரம் பாடறான்டா"என்று சுருளி சொல்ல அதற்கு சிலம்பு "டேய் நீயும் சில நேரத்துல உண்மையை கவிதையா சொல்றேடா ".என்றான்.
என்னடா உண்மை என்றான் பஞ்சு.
பின்னே நம்ம கிராமத்துப் பேரு தாவாரம் தாண்டா .இதை நம்ம எம்ஜிஆர் தான் தேவாரம்னு மாத்தினாரு மறந்து போச்சா?
கவிதை என்று யார் சொன்னாலும் அந்தக் கவிதைதான் நினைவுக்கு வரும் அமருக்கு .மறக்கமுடியாத கவிதை மட்டுமல்ல. அழிக்கமுடியாத வடுவும் கூட
பூ பூத்தால் வண்டு வரும்
மழை பெஞ்சா தவளை கத்தும் மனக்கவலை எனக்கு இருக்கு மாமா .மனம் திறந்து சொல்லிபுட்டேன் ஆமா
பூ ப்பான நாள் அன்னிக்கி
புது புடவை சீர் செனத்தி
காரோடு வந்து நின்ன மாமா
நீ காதலிக்க வேறு ஒருத்தியா மாமா. உன் படிப்பு எனக்கில்லை
ஆனாலும் என் மனசு உன் கிட்ட மாமா
நீ வேறொருத்திக்கி கணவனாக லாமா ?நகரத்து நாகரீகம்
நாக்கோடு ஒரு பேச்சு எனக்கில்லை ஆனாலும்
உன் பேரை தினம் சொல்லும் கிளிப்பிள்ளை மாமா
என்னை இலவு காத்த கிளியாக
நீ மாத்தலாமா?
தன் மாமன் மகள் தனக்கு எழுதிய கவிதையை இன்னும் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறான் அமர்.
என்னங்க மறுபடியும் கணவா ?அடிக்கடி பைத்தியம் பிடித்தது போல உட்கார்ந்து இருக்கிறீர்கள். குழந்தை அழுகிறது கூடவா கேட்கலை?
என்ன மனுஷனோ போ. கவிதாவின் அதட்டல் அத்தனை பழைய நினைவுகளும் மணதுக்குள் பதுங்கிக் கொண்டன .ஆனால் மனவாசனை மட்டும் அவ்வப்போது இருந்து கொண்டுதான் இருக்கிறது.

எழுதியவர் : சு.இராமஜோதி (30-Nov-20, 4:42 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : mana vasanai
பார்வை : 142

மேலே