கந்தா காந்தம் நீ

உணர்ந்தோர்க்கு உயர்வாய்
ஓதுவோருக்கு வேதமாய்
பயந்தோர்க்கு ஒளியாய்
பகுத்தறிவோர்க்கு அறிவாய்
பாங்கானவன் நீ கந்தா

பசித்தோர்க்கு உணவாய்
கெடுப்போர்க்கு காலனாய்
தொழுவோர்க்கு கடவுளாய்
விதைப்போர்க்கு பயிராய்
விழிகள் கொண்டவன் நீ கந்தா

ஈவோர்க்கு புண்ணியமாய்
பெறுவோர்க்கு மகிழ்வாய்
பெற்றோர்க்கு நல் பிள்ளையாய்
பிணியோர்க்கு மருந்தாய்
பிறப்பில் காப்பவன் நீ கந்தா

திக்கற்றோருக்கு தெளிவாய்
தெளிந்தோர்க்கு அடக்கமாய்
உழைப்போர்க்கு உயர்வாய்
உயர்ந்தோருக்கு நிறைவாய்
உடனிருப்பவன் நீ கந்தா

பழிப்போர்க்கு கோபமாய்
பாசத்தோருக்கு நெகிழ்வாய்
பரிகாசிப்போர்க்கு வெட்கமாய்
பணிவோர்க்கு வளர்ச்சியாய்
பலமானவன் நீ கந்தா

தேடுவோர்க்கு விளக்கமாய்
நாடுவோர்க்கு தோழனாய்
நகைப்போர்க்கு நாணமாய்
நற்குணத்தோர்க்கு சோதனையாய்
நலம்பயப்பவன் நீ கந்தா

தாகத்திற்கு தண்ணீராய்
மோகத்திற்கு ஈடுபாடாய்
முடிவிற்கு பெருமையாய்
மூலத்திற்கு முதன்மையாய்
முக்காலம் அறிந்தவனே கந்தா

குறிஞ்சிக்கு அரசனாய்
குன்றின் மேல் ஆட்சியாய்
நெஞ்சிற்கு நற்நினைவாய்
கொஞ்சுவதற்கு குழந்தையாய்
குலங்காக்கும் வேந்தனே கந்தா

பழமையில் புதுமையாய்
பாதுகாப்பதில் மூலிகையாய்
கோபத்தில் மேன்மையாய்
கூட்டத்திற்கு பெருந்தலைவனாய்
குவலத்தின் மூத்தோனே கந்தா

அறிவினை ஊட்டுவனாய்
அறிவியலுக்குள் ஊடுறுவியவனாய்
ஆழ்கடலிலும் ஆழமாய்
ஆகாயத்திலும் உயர்ந்தவனாய்
ஆற்றல்களின் ஆளுமையே கந்தா

ஐந்துப்புலனக்கும் அகப்படாதவைகளை
ஒன்பது வாசலுக்கும் பலன் தருபவைகளை
இரு உலகுக்கும் உரமானவைகளை
உயிர்கள் அனைத்திற்கும் உண்மைக்காட்டி
உய்வதற்கேற்ற உரிய வழியை தருவாயோ நீ.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Dec-20, 7:30 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 69

மேலே