தன்னுயிர்க்கு நன்மை நாடி நின்றவன் மன்னுயிர்க்கோர் தீமை செய்யான் - பாவம், தருமதீபிகை 723
நேரிசை வெண்பா
தன்னுயிர்க்கு நன்மை தனைநாடி நின்றவன்
மன்னுயிர்க்கோர் தீமை மறந்தேனும் - பின்னுயிர்த்துச்
செய்யான் செயலெல்லாம் செய்ய நலமாகி
வையம் மகிழ வரும். 723
- பாவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தன் உயிர்க்கு நன்மையை நாடுகின்றவன் பிற உயிர்கட்கு யாதும் தீமையைச் செய்யான்; எவ்வழியும் நன்மைகளையே நாடிச்செய்து உலகம் உவந்து மகிழ உயர்ந்து வருவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
அறிவு மனிதனுக்குத் தனி உரிமையாக இனிதமைந்திருக்கிறது. நன்மை தீமைகளை நாடியறிந்து தன் வாழ்க்கையைச் செம்மை செய்து கொள்ள அது உதவி புரிகிறது. தனது அனுபவங்களால் நிலைமைகளை நுணுகி உணர்ந்து புனிதமான வழிகளில் ஒழுகி வருபவன் எவ்வழியும் இனியனாய் உயர்கின்றான்.
நல்லது செய்வதால் இன்பமும் பெருமையும் வலிமையும் வருகின்றன. தீயது செய்வதால் துன்பமும் சிறுமையும் எளிமையும் விளைகின்றன. எளியனாய் இழிந்து போக எவனும் விரும்புவதில்லை; வலியனாயுயர்ந்து கொள்ளவே யாவரும் ஆவலோடு விழைந்து வருகின்றனர். தன்னுடைய இந்த இச்சை நிறைவேறிப் பலனுக்கு வர வேண்டுமானால் அதற்குத் தகுதியான வினைகளை அவன் செய்து வர வேண்டும். வித்தியபடியே விளைவுகள் வருகின்றன.
கெட்ட விதை கேடான பலன்களைத் தருகின்றது.
நல்லவிதை நன்மையான விளைவுகளை அருளுகின்றது.
தான் கேடு செய்தால் தனக்கே கேடாய் அது ஓடி வருகிறது; நன்மை செய்தால் நல்லதாய் இன்பம் சுரந்து எவ்வழியும் இதம் புரிகிறது. செய்த வினைகளுக்கு நேரான பலன்களையன்றி மாறானவைகளை யாரும் யாண்டும் அனுபவிக்க முடியாது.
கலி விருத்தம்
ஆலமது நல்குமவர் ஆரமுதம் உண்ணும்
பாலுடையர் ஆவதும்,ப டிக்கணுள தாமோ?
சாலமது ரக்கனிகள் தாம்நுகரு வாரோ
ஞாலமிசை எட்டிமரம் நட்டவர்கள் தாமே? – சேதுபுராணம்
வினைப்பயன்களின் நிலைகளை இது விளக்கியுள்ளது.
தான்செய்த செயல்களின் அளவே பலன்கள் மனிதனுக்கு விளைந்து வருகின்றன. அந்த வினைகளின் விளைவுகளையே அவன் அனுபவிக்க நேர்கின்றான். அயலாக யாதும் அவனை அனுகாதாதலால் கருதிய இன்பம் கிடையாத போது மறுகி மயங்குகிறான்.
தேகபோகங்கள் பலவகை நிலைகளில் அமைந்துள்ளன. இனிய சுவை நுகர்வுகள் யாவும் நல்வினையினாலேயே நன்கு வருகின்றன. இந்தப் பிறப்பில் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் முந்திய பிறப்பில் உபகாரம் முதலிய இதங்களை உயிர்களுக்கு இரங்கி உரிமையோடு அவன் செய்யாதிருந்தால் செல்வம் முதலிய வளங்கள் அவனைச் சேர முடியாது. ஆகவே வருந்தி உழைத்தே அவன் அருந்த வேண்டும்.
குசேலர் மிகவும் நல்லவர்; கல்வியில் தேர்ந்தவர்; சிறந்த அறிவாளி, உயர்ந்த பண்பாடுகள் அமைந்தவர்; தெய்வ பத்தி நிறைந்தவர்; இவ்வளவு மகிமைகள் மருவியிருந்தும் அவர் வறுமையால் வருந்தினார். அவருடைய பிள்ளைகள் பசித்துயரால் வாடினர்; காய்ச்சிய கூழைத் தாய் பகுத்துக் கொடுக்குமுன் அவர் பதைத்துத் துடித்தனர். அப் பதைப்பு பரிதாபமுடையன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
ஒருமகவுக்(கு) அளித்திடும்போ தொருமகவு கைநீட்டும்;
உந்தி மேல்வீழ்ந்(து)
இருமகவும் கைநீட்டும்; மும்மகவும் கைநீட்டும்;
என்செய் வாளால்?
பொருமியொரு மகவழும்கண் பிசைந்தழும்;மற் றொருமகவு
புரண்டு வீழாப்
பெருநிலத்தில் கிடந்தழும்;மற்(று) ஒருமகவெங் கனம்சகிப்பாள்?
பெரிது பாவம்! 70 குசேலர் மேல்கடலடைந்தது, குசேலோபாக்கியானம்
குசேலருடைய பிள்ளைகள் பட்டுள்ள பரிதாப நிலைகளை இதனால் அறிந்து கொள்கிறோம். இது எவ்வளவு துயரம்! இதனைக் கண்டு வருந்திய மனைவியை நோக்கி அப்பெரியவர் ஆறுதலாய்த் தேறுதல் கூறினார். அவ்வுரைகள் யாவும் உணர்ந்து சிந்திக்க வுரியன அயலே வருகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
மக்களுக் கிரங்கி வாடும்
மடத்தகை யணங்கு கேட்டி!
தக்கமுற் பவத்தில் ஆன்ற
தருமம்நன் கியற்றி னோர்கள்
ஒக்கவிப் பவத்தில் இன்பம்
ஒருங்கனு பவிப்பர் இன்றேல்
மிக்கவெந் துயரத் தாழ்வர்
இதற்குளம் மெலித லென்னே?. 94
தேற்றமுற் பவத்திற் செய்த
தீங்குநன் கெனுமி ரண்டும்
ஆற்றல்சால் கரும மென்பர்
அக்கரு மத்தை நோக்கிச்
சாற்றுமிப் பிறப்பில் தக்க
தரித்திரஞ் செல்வம் நல்கிப்
போற்றுவன் உயிரை யெல்லாம்
பொலிசுடர்த் திகிரி வள்ளல். 96
மைந்தர்கள் தம்மைப் போற்ற
வளநிதி வேண்டும் என்றாய்!
நந்திய பறவை கானம்
நயந்துறை விலங்கு முன்னா
வந்தபல் லுயிர்க்குச் சேம
வைப்புண்டோ? வருவா யுண்டோ?
எந்திடத் தேனும் போயொன்(று)
இரப்பது தானும் உண்டோ?. 97
அல்லது நாளைக் கென்செய்
வாமெனுங் கவலை யுண்டோ
எல்லையி லொன்றி னாலொன்(று)
இடிப்புண்டு வாழ்தல் உண்டோ
ஒல்லுமவ் வுயிர்கள் தம்முள்
உணவிலா திறந்த துண்டோ
சொல்லரி பரந்த உண்கண்
துடியிடைப் பேதை மாதே. 98
கல்லினுள் சிறுதே ரைக்குங்
கருப்பையண் டத்து யிர்க்கும்
புல்லுண வளித்துக் காக்கும்
புனத்துழாய்க் கண்ணி யண்ணல்
ஒல்லும்நின் மைந்தர்க் காவா(து)
ஒழிவனோ ஒழியான் உண்மை;
மெல்லியல் கொண்ட துன்பம்
விடுவிடு மறந்தும் எண்ணல். 99 குசேலோபாக்கியானம்
வறுமையை நினைந்து மறுகிய மனைவியை நோக்கிக் குசேலர் இவ்வாறு தேற்றியிருக்கிறார். உரைகள் அவருடைய உள்ளத் தெளிவையும் ஞான நிலையையும் நன்கு விளக்கியுள்ளன. இவ்வளவு பெரிய நல்லவர் நல்குரவால் நைந்தது பழவினைப் பயன் என்று தெரிந்தது. அந்தப் பிறப்பில் அவர் புரிந்து வந்த புண்ணியத்தால் எண்ணரிய செல்வங்களை எய்தி மகிழ்ந்தார். இன்ப நலங்கள் யாவும் நல்வினைகளால் வருகின்றன என்பதை இங்கே அறிந்து கொள்கிறோம். இனிய வினைகள் இன்பங்களை அருளும்.
செய்த வினையின் விளைவுகளை அன்றி வேறு யாரும் யாதும் அயலே எய்த இயலாது; இது தெய்வ நியமமாயுள்ளது. தன் உயிர்க்கு நல்லதை நாடுகின்றவன் அல்லலான காரியங்களை யாண்டும் செய்யலாகாது; எவ்வழியும் நல்ல கருமங்களையே பழகி வர வேண்டும். அந்த நல்ல பழக்கம் நலம் பல தருகிறது.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
இனியநல் வினையினால் இன்பம் எய்துவர்;
துனிசெய்,தீ வினையினால் துன்பம் தோய்குவர்;
மனிதரிம் மரபினை மறந்து தீயராய்ப்
பனிதுயர் படிவது பாவம் ஆகுமே.
பாவம் படியாமல் பாதுகாத்து ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர் .