மண்ணில் பிறந்தமகன் கீர்த்திமானானால் உலகமெலாம் ஒளிர்வான் - புகழ், தருமதீபிகை 733
நேரிசை வெண்பா
மண்ணில் பிறந்த மகன்கீர்த்தி மானானால்
விண்ணில் பிறந்த விரிகதிர்போல் - எண்ணும்
உலகமெலாம் ஓங்கி ஒளிர்வான் மனுவின்
திலகமே யாவன் தெளி. 733
- புகழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இம்மண்ணுலகில் பிறந்த ஒருவன் கீர்த்தியுடையவனானால் விண்ணுலகில் விளங்கும் சூரியன் போல் எங்கும் பேரொளி வீசிப் பெருமையாய் விளங்குவான்; மனித இனத்தின் இனிய திலகமாய் அவன் தனியே உயர்ந்து மிளிர்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
அறிவுடைய அரிய பிறப்பை மனிதன் மருவி வந்துள்ளான்; அங்ஙனம் வந்தவன் உரிமையாய் அடையவுரியது இனிய புகழேயாம். உற்றபிறப்பு பெற்ற புகழால் பெருஞ்சிறப்படைகிறது.
மகன் என்னும் சொல் அதன் தகவு தெரிய வந்தது. மனிதன் எதையும் அடையலாம்; உயர்கதிகள் எல்லாம் அவனுக்காகவே அமைந்திருக்கின்றன. மகன் சிறிது உயர்ந்தால் மகான் ஆகலாம். அந்த உயர் ஆக்கத்தை அதன் பெயர் அமைதி துலக்கி நிற்கிறது. மானவன் நிலை மகிமை மிக வாய்ந்தது.
குணங்களால் உயர்ந்த போதுதான், மனிதன் உண்மையான உயர்ச்சியை அடைகிறான். ஏற்றம் என்று புகழுக்கு ஒரு பெயர். கீழ்மை நீங்கி மேன்மையில் ஓங்கி மேலே ஏறிப் போவது ஏற்றம் என வந்தது. அந்த ஏற்றம் பெறுவதே இசைமையாம்.
ஏற்றம் கியாதம் இசை மேம்பாடு
சீர்த்தி கீர்த்தி சொல்திகழ் புகழாம்;
மீக்கூற்(று) என்று விளம்பவும் பெறுமே. - பிங்கலங்தை
புகழுக்கு இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன. பரியாய நாமங்கள் சரியான காரணங்களைக் கருதி வந்திருக்கின்றன. கீர்த்தி, சீர்த்தி என்பன சிறந்த புகழை வரைந்து காட்டியுள்ளன. மேலாக வியந்து கூறுவது மீக்கூற்று என வந்தது.
ஊற்றமாம் சீர்த்தி கீர்த்தி ஒளிபுகழ் மீக்கூற் றும்பேர்
மேற்றிகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இருபே ராமே, - நிகண்டு
புகழுக்கு உரிய பெயர்களை இங்ஙனம் அறிந்து கொள்கிறோம். நெடிய பெரிய புகழையே சீர்த்தி என்று தனியே விதந்து சொல்ல வேண்டும் என்பதும் ஈண்டுத் தெரியவந்தது.
சீர்த்தி மிகுபுகழ் (தொல்காப்பியம், சொல், உரி, 15) என ஆசிரியர் தொல்காப்பியரும் இவ்வாறு குறித்துள்ளார்.
தக்க பொருளைத் தகுதியான சொல்லால் தகவோடு கூற வேண்டும் என மேலோர் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. உரிய இடத்தில் உரியசொல் வைப்பது அரிய கலையாய் அமைந்துள்ளதாதலால் அங்ஙனம் வைக்காதாரை வெய்யர் எனக் கலையின் தெய்வம் தடுத்து வைது வெறுத்து விடுகிறது.
'மனு என்னும் வயங்கு சீர்த்திக் குன்று ஒன்று தோளான்’ என ஆதி மனுவைக் குறித்து இங்ஙனம் சிறப்பாக ஓதியுள்ளார்.
தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும்
வீற்றிருக்கும் சீர்த்தியான் - (இராமா, குக, 82)
பரதனை இவ்வாறு கவிச்சக்கரவர்த்தி குறித்திருக்கிறார்.
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடர். (இரா, இரணி, 165)
திருமாலின் அரிய பெரிய புகழைச் சீர்த்தி என்னும் வார்த்தையால் வார்த்து விளக்கியுள்ளார். பரம நீர்மைகள் சீர்மைகளாய்ச் சிறந்து திகழ்தலால் சீர்த்தி என வந்தது. இனிய இயல்புகள். எவராலும் புகழ்ந்து போற்றப்படுகின்றன. அந்தப் புகழ்மாலைக்கு மொழிகள் இனிய நறுமலர்களாய் மருவியுள்ளன.
தேவாரம், திருவாய்மொழி, பாமாலை, புகழ்மாலை, கீர்த்தி மாலை எனத் தெய்வத் துதிகள் கிளர்ந்து வந்துள்ளன. கீர்த்தித் திருஅகவல் என மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். புகழ்ச்சிகளை நோக்கியே உயர்ச்சிகளும், உணர்ச்சிகளும் தோன்றியிருக்கின்றன. உயர்ந்து விளங்குவதை உலகம் புகழ்ந்து வந்துள்ளது.
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
இருவ ரேபுகழ்ந் தேத்தற் கினியராம்
ஒருவ ரேதுணை என்றுண ராய்நெஞ்சே
வருவ ரேகொடுங் காலர்கள் வந்தெதிர்
பொருவ ரேயவர்க் கென்கொல் புகல்வதே. 73
புகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா
அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே
சுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங்
ககன மேனியைக் கண்டன கண்களே. 74
கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே. 75 பொன்னை மாதரை, தாயுமானவர்
சிவபெருமானை நினைந்து தாயுமானவர் இப்படி உவந்து துதித்திருக்கிறார். துதிமொழிகளில் அவரது பரிபக்குவ நிலை தெரிய வருகிறது. உருகிய அன்பு உயர் பேரின்பம் அருளுகிறது.
அரிய புகழை மருவிய பொழுது மனிதன் பெரிய தெய்வமாய்ப் பெருகி எழுகின்றான். புகழ் அடைந்துவரின் அதனோடு புண்ணியமும் தொடர்ந்து வருதலால் புகழாளன் புண்ணியவானாயுயர்ந்து விளங்குகிறான்; ஆகவே விண்ணும் அவனை வியந்து மகிழ்கிறது. வானுலகமும் புகழை விழைந்து வாழ்த்துகிறது.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 254 புகழ்
இந்த நிலவுலகில் ஒருவன் நிலைத்த புகழைச் செய்யின் அந்த வானுலகம் தன்பால் மேவியுள்ள தேவர்களைப் பேணாது; இவனையே ஆவலோடு நோக்கிப் போற்றி நிற்கும் எனப் புகழின் ஏற்றத்தை இது உணர்த்தி யிருக்கிறது. புலவர் - தேவர்.
தாம் பண்ணிய புண்ணிய பலத்தால் தேவர் விண்ணுலக வாழ்வை அடைந்து கொண்டார். இம்மண்ணுலகில் நெடிய புகழைச் செய்பவர் கீர்த்தியால் இங்கே நிலையாய்ப் பெருமை பெறுகின்றார்; அவ்வுலகிலும் தலைமையாய் உரிமையுறுகின்றார். பழைய தேவர்கள் தம் புண்ணிய பலனை அனுபவித்துக் கழிந்து கிழவர் ஆயினாராதலால் இளமையோடு புதிதாய் இந்நிலவரையிலிருந்து வரவுரிய புகழாளரை அதிக ஆவலோடு புத்தேள் உலகம் எதிர்பார்த்திருக்கும் என்பது இங்கே உய்த்துணர வந்தது.
புகழால் இங்கும் அங்கும் எங்கும் இன்பமும் மதிப்பும் உளவாம்; காலம் உள்ள பொழுதே கருத்தோடு விரைந்ததனை நன்கு செய்து புகழாளனாய்ப் பொங்கி உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.