புரையும் பிழையும் புரியின் துன்பக் கடலில் வீழ்ந்தாய்காண் - பாவம், தருமதீபிகை 724

நேரிசை வெண்பா

உரையும் செயலும் ஒருநிலை யின்றிப்
புரையும் பிழையும் புரியின் - கரைகடந்த
துன்பக் கடலில் துடித்துநீ வீழ்ந்தாய்காண்;
இன்பமே காணாய் எதிர். 724

- பாவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சொல்லும் செயலும் நேர்மையோடு தோய்ந்து நல்லனவாயிருக்க வேண்டும்; அங்ஙனமின்றிப் பொல்லாதனவாய்ப் பிழை புரியின் எல்லையில்லாத துன்பங்களை அடைந்து நீ வருந்த நேர்வாய்; இந்த உண்மையை உணர்ந்து நன்மையை விரைந்து தெளிந்து யாண்டும் செம்மையாய் ஒழுகி உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பேசுதற்கு வாய், எண்ணுதற்கு நெஞ்சு, செய்தற்குக் கைகள் மனிதனுக்கு நன்கு அமைந்திருக்கின்றன. இந்த மூன்று நிலைகளால் வாழ்க்கை இயங்கி வருகிறது. உயிர் விளக்கமான இவை திருந்திய பண்போடு அமைந்துவரின் அந்த மனிதன் பெருந்தகையாளனாய் உயர்ந்து வருகிறான்; பிழைகள் மலிந்தால் பழிநிலையாளனா யிழிந்து பாழ்படுகின்றான்.

வாயிலிருந்து வருமொழி இதமும் இனிமையும் நேர்மையும் தோய்ந்திருக்க வேண்டும். அவ்வாறு அமைந்துவரின் அம்மொழியாளன் ஒளியும் இன்பமும் எய்தி எவ்வழியும் திவ்விய மகிமைகளை அடைந்து சிறந்து திகழ்கின்றான்.

தன்னைப் புனிதனாக்கிப் புண்ணிய போகங்களை அருளுகின்ற சத்தியத்தை ஒருவன் பேணி வராமல் பிழையாயிழிந்திருப்பின் அது எவ்வளவு பழி! எத்தனை அழிவு! அசத்தியன் உயிரோடிருந்தாலும் சவமே, சீவ ஒளியில்லாத அந்த நடைப்பிணம் பாவப் படுகுழியில் நெடிது புதைக்கப் பட்டுளது.

பொய்யால் பாவங்கள் யாவும் வருகின்றன.
மெய்யால் புண்ணியங்கள் எல்லாம் விளைகின்றன.

எவன் பொய் பேசக் கூசுகிறானோ அவனிடம் தெய்வத் தேசு ஒளி வீச நேர்கிறது; ஈசன் அருள் அவனை நோக்கி வருகிறது. ஒரு சத்திய விரதம் அரிய பல மகிமைகளை அருளி அற்புத சித்திகளைத் தருகிறது. தரும நிலையமாய் அது தழைக்கிறது.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 297 வாய்மை

ஒருவன் யாண்டும் பொய் பேசாமல் எவ்வழியும் மெய்யே பழகி வருவானாயின் அவன் பெரிய புண்ணியவான் ஆகின்றான்; வேறு யாதொரு தருமமும் அவன் செய்ய வேண்டியதில்லை; எல்லா இன்ப நலங்களும் அவனுக்கு தனி உரிமையாய் அமைகின்றன என வள்ளுவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்,

மெய் தலைமையான அறம் என்றதனால் பொய் புலையான பாவம் என்பது பெறப்பட்டது. பழி பாவங்களை விளைத்து அழி துயரங்களைத் தருகிற பொய்யை மனிதன் தழுவி வாழ்வது முழு மடமையாம். எவ்வளவு பெரியவனாயிருந்தாலும் பொய் அவனைப் புலையனாக்கி நிலைகுலைத்து அவல நிலையில் ஆழ்த்தி விடுகின்றது. படுபாதகமாய் அடுநரகத்தில் தள்ளிவிடுமாதலால் பொய் கொடிய நீசம் என மேலோர் அதனை அஞ்ச நேர்ந்தனர்.

பொய் பேசுபவர் புலையாயிழிந்து எவ்வழியும் அழிவே அடைகின்றார். குடிகேடு தெரியாமல் அடியோடு முடிகின்றார்,

கலி விருத்தம்
(விளம் கூவிளம் தேமா கூவிளம்)

சலம்தலைக் கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர்; செருக்களத்(து) அஞ்சி னார்அலர்;
புலம்தெரி பொய்க்கரி புகலும் புன்கணார்
குலங்களின், அவிந்தனர், குரங்கி னாலென்றார். 58

- கிங்கரர் வதைப் படலம், சுந்தர காண்டம், இராமாயணம்

பலசாலிகளான அரக்கர் பல்லாயிரம் பேர் திரண்டு வந்தார்; அனுமானோடு போராடி அழிந்து போனார். அந்த அழிவு நிலையை இந்தவாறு விளக்கியருளினார். பொய்ச்சாட்சி சொன்னவனுடைய குலம் நாசமாய் அழிந்து போனது போல் மூண்டு வந்த நிருதர் முழுவதும் மாண்டு போயினார் என்றது அழிவுநிலையின் எளிமை தெரிய வந்தது. பொய்யர் பெரிய செழிப்பாய்த் தழைத்து நின்றாலும் இருந்த இடமும் தடந்தெரியாமல் விரைந்து அழிந்து போவர் என்னும் உண்மையை இங்ஙனம் இது உணர்த்தியுள்ளது.

இப்படி நாசப்படுத்துகின்ற நீசப் பொய்யை மனிதன் பேசலாமா? பொய் பேசினால் நீசன் ஆவாய், என்று மேலோரும் நூலோரும் பரிந்து போதித்தும் அறிந்து திருந்தாமல் அவமே அழிந்து போவது அஞ்ஞான இருளின் மருளாயுள்ளது. மடமையால் மடிந்து போகின்றார்.

மிருகங்களை விட மனிதன் பெரியவனாயிருப்பது வாய் பேசும் வாய்ப்பினாலேயாம்; இந்த வாயை நல்ல வழியில் பயன்படுத்தி நலம்பல பெறாமல் பொல்லாத பொய்யைப் பேசி புலையாயிழிந்து போனால் மீண்டு எந்த வழியில் அவன் உயர்ந்து வர முடியும்? இதனை ஈண்டு நன்கு சிந்தனை செய்ய வேண்டும்.

நேரிசை வெண்பா

வாய்பேச மாட்டாது மாடு; மனிதனே
வாய்பேசும் வாய்ப்போடு வந்துள்ளான்; - வாய்பேசி
நல்லது காணாமல் நாசமாய்ப் போகின்றான்
பொல்லாத பொய்பேசப் போய்.

நீசமான இந்த நாசப் போக்கு ஒழிந்த போதுதான் மனிதன் ஈசன் அருளை எய்த முடியும். மெய் ஈசனுக்கு வடிவமாதலால் அதனை இழந்த அளவு அவன் நாசமே அடைகின்றான்.

பொய் மனிதனைப் பாவி ஆக்கிப் படுதுயர்களைச் செய்யும்; மெய் தருமவானாக்கி இருமையும் இன்பங்களை ஊட்டியருளும். இந்த உண்மையை ஊன்றி உணர்ந்து நன்மையை நாடிக் கொள்பவர் எம்மையும் இனியராய் இன்பம் பெறுவர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

மெய்யே சிறந்த பெருநலமாம்
..மெய்யே எவையும் நிலைபெறுத்தும்
மெய்யால் அழல்கால் கதிர்பிறவும்
..தத்தந் தொழிலின் விலகாவாம்
மெய்யே எவைக்கும் இருப்பிடமாம்
..மெய்யே மெய்யே சிவமாகும்
மெய்யே பிரம பதமுமெனப்
..புகன்றான் வினைதீர் காசிபனே. 16 வாய்மை, காஞ்சிப் புராணம்

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

உவமம் தீர்ந்திடு வாய்மையொன் றேஉறின் உலகில்
தவமும் தானமும் ஒருங்குறச் செய்தலின் தலையாய்ப்
பவம கன்றுநான் மறைமுடி வாகிய பரம
சிவன ரும்பதம் பெறும்படி உயர்த்திடும் தெரியின். - திருக்கூவப் புராணம்

மெய்யின் மகிமையை இவை விளக்கி யுள்ளன. பொருள் நிலைகளைக் கருதிக் காணுக. பொல்லாத புலையான பொய்யைப் பேசி அல்லலுறாதே, எல்லாத் தருமங்களுக்கும் நிலையமான சத்தியத்தையே பேசி யாண்டும்.உத்தமனாய் உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-21, 7:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே