மருத்துவ வெண்பா – வேர்க்கடலை - பாடல் 99
நேரிசை வெண்பா
மெத்த வினிப்பகும் மேவுரத்த மூலமறும்
பித்த வனிலம் பிறக்குங்காண் – இத்தரையில்
தீர்க்கவிந் தூறுஞ் சிறியவுடற் றான்பருக்கும்
வேர்க்கடலை தாணுண்ண வே!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
வேர்க்கடலையால் ரத்த மூலம் போகும். தாது புஷ்டி, தேகப் பெருக்கம், பித்த வாயு உண்டாகும்.
உபயோகிக்கும் முறை:
இந்தக் கடலைக்காயினின்று எடுத்த வித்தை வறுத்தாவது, வேகவத்துச் சுண்டலாகச் செய்தாவது அல்லது வறுத்த வேர்க்கடலையுடன் வெல்லப்பாகு கூட்டி உருண்டையாகப் பிடித்தாவது உண்பது வழக்கம்.
இது தேகத்தைப் போஷிக்கும்; தாது விருத்தி உண்டாக்கும்; மலமிலகுவாய்ப் போகச் செய்யும். இதனின்று எடுக்கப்பட்ட எண்ணெயை நல்லெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிப்பதும் உண்டு. இது சில சரீரத்திற்குப் பொருந்தாமல் பித்தத்தை விருத்தி செய்யும்.