நினைவு காலண்டர்

சென்னையில் ஒரு நினைவலை....

ஜெயம் ரவி அவர்கள் நடித்த நிமிர்ந்து நில் என்று ஒரு படம் வந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அந்தப் படம் நான் பார்த்திருக்கவில்லை.

சென்னையில் எனது நண்பன் ஒருவனிடம் நிமிர்ந்து நில் படம் நான் கதை சொல்ல வேண்டிய அவசியம் வந்தது. அவனும் பயங்கர ஆர்வமாக இருந்தான்.

நம்ம தான் படமே பார்க்கலையே. சரி நம்ம டெக்னிக்கை யூஸ் பன்னி கதையை சொல்லி விடலாம் என ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்தவுடன் ஒரு மருத்துவமனையில் ஒரு தாய்க்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த இரட்டை குழந்தைகளும் முதுகில் கூன் விழுந்து போன குழந்தைகளாகப் பிறந்து விடுகிறது.

இதனால் அந்த குழந்தையின் அப்பா குழந்தையை கொன்று விடும்படி தனது பணியாட்களுக்கு கட்டளையிடுகிறார்.

அந்த குழந்தையை கொல்ல மனமில்லாத ஒரு விசுவாசி ஒரு குழந்தையை தான் எடுத்து வளர்க்கிறார். இன்னொரு குழந்தையை பல வருடங்களாக குழந்தை இல்லாத தனது தங்கச்சி வீட்டிற்கு கொடுத்துவிடுகிறார்.

தங்கச்சி ஹைதராபாத்தில் வசிக்கிறாள். இந்த விசுவாசி மற்றொறு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார்.

அப்படியே கதையை கட் பன்னுனா இரண்டு குழந்தைகளும் வளர்ந்து விடுகிறது. வளர்ந்த இரண்டு குழந்தைகளும் தான் ஜெயம் ரவி.

சென்னையில் வாழும் ஜெயம் ரவி ஒரு கூனனாக அதாவது நிமிர்ந்தே நிற்கமுடியாத ஒரு கேரக்டராகவே வளர்ந்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் 2 ஜெயம்ரவி களும் ஒன்றாக சந்திக்க நேரிடுகிறது.

ஹைதராபாத்தில் வளர்ந்த ஜெயம்ரவி கூனனாக இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறார். இயல்பான ஒரு மனிதனாக இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என அங்கே ஒரு பிளாஷ்பேக்.

ஹைதராபாத்தில் வளர்ந்த ஜெயம்ரவி ஒரு பிசியோதெரபிஸ்ட் மூலம் கொடுக்கப்பட்ட வைத்தியம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து போய் குனிந்தே இருந்த முதுகு நிமிர ஆரம்பித்து ஒருகட்டத்தில் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்து விடுகிறார்.

அவர் எப்படி என்ன மருந்து அவருக்கு கொடுத்தார் என்பதை அவரிடம் கேட்பதற்காக சென்னை ஜெயம் ரவியின் வளர்ப்பு அப்பா ஹைதராபாத் செல்ல அந்த இடத்தில் இன்டர்வெல்.

சரிடா கதையை சொல்லுடா மீதி என கூறிய நட்பிடம் "டயர்டா இருக்கு நண்பா அப்படியே சாப்பிட்டு கதையை சொல்லுறேன் வாடா போகலாம் தலப்பாக்கட்டுக்கு" என நண்பனை அழைத்து முறையான விருந்து அவனது பணத்தில் ருசித்து சாப்பிட்டது இன்றும் எனது ரசனையில் மறக்க முடியாத ஒன்று.

நண்பன் குஸ்கா மட்டும் தான் சாப்பிட்டான் கதை ஆர்வம் பசியை தூண்ட வில்லை போல அவனுக்கு.

செகன்ட் ஆஃப்....

வளசரவாக்கத்தில் ஜிகர்தண்டா சாப்பிட்டுக்கொண்டே நண்பனை கதைக்குள் அழைத்து சென்றேன்.

ஹைதராபாத்தில் அந்த மருத்துவர் ஒரு ரவுடி கும்பலால் வெட்டிக் கொல்லப் படுகிறார்.
அந்த மருத்துவரை வெட்டிக்கொன்ற ரவுடி கும்பலை பழிவாங்க சென்ற ஹைதராபாத் ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் குண்டு வைத்துக் கொல்லப்படுகிறார்கள்.

ஏமாற்றத்துடன் வளர்ப்பு அப்பா சென்னைக்கு திரும்ப அங்கு வந்து பார்த்தால் ஓர் அதிர்ச்சி.

கூனனாக தான் வளர்த்த ஜெயம் ரவி நிமிர்ந்து நிற்கிறார். இயல்பான மனிதனைப்போல் ஓடுகிறார் ஆடுகிறார் சண்டை கூட போடுகிறார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னையில் ஜெயம்ரவியை வளர்த்த அப்பா மாரடைப்பில் இறந்து போகிறார்.

எப்படி சென்னை ஜெயம் ரவி கூனன் ஆக இருந்தவர் நிமிர்ந்து நின்றார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ் என்று கூறி கிளைமாக்சை கூறாமலே நண்பனை அலைய விட்டேன் மூன்று நாட்களுக்கு மேலாக.

அவனும் நிமிர்ந்து நில் படத்தை தியேட்டரில் பார்க்க முயற்சி செய்து தோற்றுப் போய் கடைசியில் டிவிடி வாங்கி போட்டு பார்த்துவிட்டு என்னை வந்து போட்டு தாக்கினான்.

அப்போது நான் அவனிடம் கூறினேன் "கிளைமாக்ஸ் சொல்லிடுறேன் அடிக்காத" அப்படி என்று அவன் படம் பார்த்த விஷயம் தெரியாமல்.

சரி சொல்லுடா என்றான்.

ஆகஸ்டு 15 அன்று கூனன் ஜெயம்ரவி ஒரு பள்ளிக்கூடம் வழியே வளைந்த முதுகோடு நடந்து செல்ல அந்தப் பள்ளியில் தேசிய கீதம் பாடல் ஒலிக்கிறது.

ஜன கன மன.. என நமது நாட்டு தேசிய கீதம் ஒவ்வொரு வரிகளாய் ஒலிக்க ஜெயம் ரவியின் ஒவ்வொரு முதுகெலும்பும் புடைக்கிறது. இந்த சீனுக்கு மட்டும் 3 கோடி செலவு பன்னியிருக்காங்க என நான் கூற நண்பன் ஆச்சிரியத்தில் என்னடா சொல்லுற என்றான்.
நீ ஸ்கிரீன்ல பார்க்கும்போது தெரியும் டா அந்த எஃபெக்ட் என்று தொடர்ந்தேன்.

ஜெயஹே என்று முடியும் நமது தேசிய கீதம் பாடல் முடிவில் ஜெயம் ரவி நிமிர்ந்து நின்று சல்யூட் அடிக்கிறார்.

அந்த இடத்தில் சமுத்திரகனி உள்ளே புகுந்து ஜெயம் ரவியின் தோள் மீது கைபோட்டு அமலாபாலை அறிமுகப்படுத்தி வைத்து திருமணம் செய்து வைக்கிறார். தட்ஸ் ஆல் கிளைமாக்ஸ் ஓவர் என்றேன்.

படம் பார்த்து வந்த எனது நண்பனும் சிரித்து விட்டான்.
நீ சரியான கேடி டா என்று கூறி என்னை நட்புடன் விரட்டினான்.

நினைவலைகளை ஒவ்வொரு முறையும் நான் எழுதுகின்ற பொழுது கொஞ்சம் கற்பனை கலந்தும் எழுதுவது வழக்கம். காரணம் எனக்கு நேரலையில் ஏற்பட்ட சுவாரசியங்களை கொஞ்சம் கற்பனை கலக்கும் போது மட்டுமே படிப்பவர்களுக்கு கொஞ்சம் சுவாரசியம் இருக்க வாய்ப்பு உள்ளது.

அதுவே ஒரு சில இடங்களில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றுத் தருகிறது.

டிஸ் லைக் ஆப்ஷன் இல்லாதது எனக்கு சாதகமான ஒரு விஷயம். ஏனென்றால் எனது இன்பாக்ஸோடு முடிந்து போகிறது அந்த ரகசிய வார்த்தைகள்.

🙏

எழுதியவர் : மன்னை சுரேஷ் (17-Jan-21, 1:21 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 53

சிறந்த நகைச்சுவைகள்

மேலே