குன்றுகள் கூட்டமே

கார்முகில் கால் கொண்டு
தரையில் நடப்பது போல்
போர் முரசொலியாய் பிளிறும் களிறே
ஞாயிறின் கதிர்களும் அடி தொடா
அடரிருள் அடவியில் தும்பிக்கை தூரிகையால்
காட்டைப் புனையும் கண்ணெழுத்து கலைஞர்களே
காலங்காலமாய் அடியடியாய் குடிகுடியாய்
தம் வங்கை வரைந்த வழிகளை மறவா
குடி மூத்தோள் நடத்திடும் குன்றுகள் கூட்டமே
அருகும் காட்டின் காலச்சருகுகளே
பெருகும் கட்டிட களைகள் அறுத்திடும்
வழிவழி மறவா வலசை வழிகள்
கூரிருள் காட்டைக் குடையும் குன்றுகள் தாமே
காட்டைத் தின்னும் மனுசப் பசிக்கு
முதல் படையல் ஏனோ

எழுதியவர் : கொற்றன் (8-Feb-21, 8:15 am)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 45

மேலே