தேர்தல் களம்

-----------
இலவசத்தை அள்ளி தெளித்து
கோடிகளை அடைய நினைக்கும்
கட்சிகளை கத்தி சாடுவதா?

தன் உழைப்பு ஏதுமின்றி
கிடைக்கும் பொருளை கூச்சமின்றி
எதிர் பார்க்கும் நம்கூட்டம் மீது
கோபம் கொண்டு எழுவதா?

நூறு வருடம் நாம் வாழ்ந்தாலே
வாழ போகும் நாட்களென்னவோ
முப்பத்து ஆறாயிரம் சொச்சம் தானே..

உணவு உடை உறைவிடமென
ஒருத்தனுக்கு தினச்செலவு
சராசரி சில நூறுகள் வைத்தாலே
அது லட்சங்களை தாண்டாது..

காவி பச்சை வெள்ளையென
சாதி மத சாயம் எடுத்து..
கரை வேட்டி கூட்டத்துடன்
கத்து குட்டி கூட்டம் சில
அண்டி பிழைக்க பார்க்குது..

லட்சம் கோடிகள் கடன் இருக்க
கோடிகளில் கடன் வாங்கி
அடுத்த ஐந்தாண்டு மீண்டும்
ஆட்டை போட்டு ஆட்டம் போட
கட்சிகள் எல்லாம் அலையுது..

பிறரின் பணமோ.. உழைப்போ..
இனாமாய் எனக்கு வேண்டாமென
தனி மனிதன் நினைக்கும் வரை
எத்தேர்தலிலும் மாற்றம் வரா..
--------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Mar-21, 8:37 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : therthal kalam
பார்வை : 362

மேலே