உள்ளம் தன்னை விரிப்பாய்
சின்னச் சின்ன மொட்டே _நீ
சிரிக்க வைப்பாய் தொட்டே !
வண்ண வண்ண மலராய் –நீ
விரிந்து மலர்வாய் இனிதாய்.
நெஞ்சில் வஞ்சம் இல்லை –நீ
கொஞ்சும் இனிய மழலை
பஞ்சு போலுன் மேனி –நீ
பாடித் திரியும் தேனி.
உளரும் மொழியோ மழலை –அதில்
உருகிக் கிடக்கும் இனிமை.
கிளர்ச்சி உணர்வில் தோன்றும்-அது
உள்ளம் தன்னைத் தீண்டும்.
மண்டும் துயர மெல்லாம் –உன்
மழலைச் சிரிப்பால் அகலும்
கொண்ட வலியும் மறையும் –உன்
காலால் உதைக்க ஒழியும்.
பறந்து செல்ல துடிப்பாய் –ஒரு
பாசம் கொண்டு உதைப்பாய்
பற்றும் பொருளை பிடிப்பாய் –அதை
பவள வாயில் திணிப்பாய்.
பெற்ற தாயைக் கண்டால் –நீ
பார்த்து பார்த்து சிரிப்பாய்
உற்ற உறவு உணர்ந்து –உன்
உள்ளம் தன்னை விரிப்பாய்.