மண்நன்றி

மண்நன்றி
ஆக்கம்:சோமன் ஸ்ரீதரன்

“ஒரு மண்ணுமில்ல” எனில்
முற்றும் அற்றுப்போனதாம்.
“மண்ணா மூளையில” எனில்
ஆற்றல் அற்றுப்போனதாம்.
“மண்ணை கவ்வியது” எனில்
முற்றிலும் தோற்றுப்போனதாம்

வெற்றுக்கு உவமையாக்கி
ஆற்றலின்மைக்கு மாதிரியாக்கி
தோல்வியின் ஒப்புமையாக்கி
மண்ணை தூற்றலின் உச்சமாக்கி
குற்றமே குறுகுறுக்காமல்
சேற்றுக்கே சேறிறைத்தோமே

சுற்றம் கூடி இகழ்ந்தோம்
ஏற்றப்பாதை மறந்தோமா?
தோற்றியவை நுகர்ந்தோம்
தோற்றம் உணர்ந்தோமா?
கூர்ப்பு கேட்டோமே.
கூறு கெட்டோமா?

மண் நினக்கு முன் தோன்றி
நின் உயிருக்கு நீர் தோற்றி
பயிருக்கு வயல் தோற்றி
உறைவுக்கு காடு தோற்றி
பெயர்வுக்கு கடல் தோற்றி
உயர்வுக்கு பாலை தோற்றி…

நாற்கால் நகரல்
கூன் முதுகு தாவல்
பச்சை பண்ட பசியாறல்
என்ற தொடக்கம் மாற்றி
இரட்டை கைகால் மருவல்
முதுகெலும்பு நிமிரல்
சுட்ட உப்பிட்ட படையல்
என ஆற்றல் கூட்டி

மண் அன்றி
செய்தார் யாருமில்லை
செய்வார் யாருமில்லை
எந்நன்றி கொன்றாலும்
மண்நன்றி கொல்லாதே
மானிடமே
சோமன் ஸ்ரீதரன்(26.03.2021)

எழுதியவர் : சோமன் ஸ்ரீதரன் (29-Mar-21, 11:53 am)
சேர்த்தது : சோமன் ஸ்ரீதரன்
பார்வை : 357

சிறந்த கவிதைகள்

மேலே