பிராய்லர் கோழிகள்
==================================
அரவணைக்க அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..
வலிகள் சொல்ல வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..
சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..
வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..
ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..
உணவுக்காகப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...
இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?
சிந்திப்பீர் மானிடரே!
உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..
ஆதலால்..
வேண்டுகின்றோம் உங்களிடம்..
இயற்கையோடு வாழ்வீர்!
இயற்கையாக வாழ்வீர்!
வல்லூருகள்
வானில் வட்டமிட்டாலும்..
இயற்கையோடெமை
வாழ விடுவீர்!
=================================