காதலியே! காதலியே!

காதலியே ! காதலியே !

தலை சாய்த்து நீ சிந்தும்
மௌனங்கள் -
என் மனத் தரையை
அழகாக்கும் மலர் வனங்கள்;

சின்ன சின்ன சேதிகளைச்
சொல்லிச் செல்லும் உன் கண்கள் -
அகன்ற அழகை
தனக்குள் வைத்திருக்கும்
அதிசய போன்சாய் மரங்கள்;

காற்றிலாடும் உன் சுடிதார் துப்பட்டா -
காதல் கவிதையின்
ஏதோ ஒரு வரியினால்
என்னை அழைக்கும் தூது மடல் ;

உன் இதழ்ப் பாட்டின்
அழகிய புன்னகை ராகம் -
இந்த ரசிகனின் இதய மண்டபம் எங்கும் நிறைந்திட
வந்து கலக்கும் சிலிர்ப்பின் சங்கமம்;

உன் கருங்கூந்தல் கடல் அலையில்
வெண் நுரையாய்ச் சிரிக்கும்
முல்லைச்சரம் -
என் உணர்வு இயக்கத்தை
தடுத்தாளும் மந்திரச் சாரம்;

மொத்தத்தில் நீ ஒரு
அழகின் கருமுகில் கொண்ட காதல் வானம்;
நான் உன்னால் விளைந்திருக்கும் பரவச பூமியின் பசுமை வனம்.

எழுதியவர் : முத்து நாடன் (24-Sep-11, 7:41 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 294

மேலே