துளிர்
துளிர்
_____________________________________ருத்ரா
ஏதோ ஞாபகம்.
பத்து வயதில் என்
அரைஞாண் கொடிக்கு
ஷாக் அடித்தது போன்று.
அதன் பிறகு அந்த
தாமிரபரணியில் கூட
நான்
அம்மணமாக முக்குளி போட்டு
குளிப்பதை நிறுத்திக்கொண்டேன்.
அரை ட்ராயருடம் தான்
குளித்து விளையாடினேன்.
அதன் பிறகு
காக்கா கடி கடித்து
அந்த மாவடுவை
என் கூட அந்த மாமரத்துக்கிளையில்
விளையாடும்
அந்த எலிவால் பின்னல்காரிக்கு
கொடுக்கும் போது
அந்த மின்காந்த அதிர்ச்சியை
உணர்ந்தேன்.
"என்னடா..இன்னிக்கு
என்னமோ புதுசா பாத்து மொறைக்கிறே.."
அது தான்
நான் கேட்ட பூங்குயிலின்
கடைசி ஓசை.
அப்புறம்
புத்தகங்களும் படிப்புகளும்
கடமைகளும்
வேலை தேடல்களும் என் மீது
கழுதைப்பொதியாக
அமுக்கிக்கொண்டது.
வாழ்க்கை எந்திரம் தன்
முரட்டுச்சக்கரத்தின்
கடைவாய்ப்பற்களைக்கொண்டு
கூழாய் அரைத்துத் தள்ளியது.
அந்த பத்துவயதின் மின்னல் பிஞ்சு
வைக்கோல் படப்பில் விழுந்த
வைர ஊசியாய்...
என்னால் தேட முடியவில்லை.
தேடல் தான் வாழ்க்கை என்று
சில கவிதைவரிகள்
பிளந்து காட்டின...
திமிங்கிலத்தின் திறந்த வாய் போல..
தொலைத்தல் தான் வாழ்க்கை
என்னும்
அதைவிட இனிய கவிதைவரிகள்
நிழலாடிக் கொண்டே இருக்கின்றன.
விளிம்புக்கு வந்து விட்ட போதும்
அதோ
அது இன்னும் அங்கே
துளிர் விட்டு நிற்கின்றது.
______________________________________________
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
