நான் எனக்கு யார்
(ஓர் அறிவிப்பு...
இந்த கதை என் சொந்த படைப்பு அல்ல. இலியிச் எழுதியதாக நம்பப்படும் ஒரு நாவலின் நடுவில் இடைச்செருகலாக வந்து இருக்கும் சிறுகதை இது என்று நம்பத்தகுந்த எனது இலக்கிய நண்பர்கள் மூலம் இப்போது தெரிய வருகிறது.
ஒருவேளை பதிப்புரிமை தொந்தரவு எழுப்பப்பட்டால் நான் இந்த கதையை நீக்கி விடுவேன். இந்த கதைக்கு நானே என் மனம் போன போக்கில் ஒரு தலைப்பு வைத்தேன். உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களும் வைத்து கொள்ளலாம்.)
இனி கதை.
==================
இருக்கட்டும்.
அதனாலென்ன?
என்னை இன்று எப்படியேனும் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு. இப்படி நீங்கள் ஒன்றுகூடி குவிந்து நின்று இருப்பதை நான் முன்பு பார்த்ததே இல்லை.
உங்கள் கண்களில் மின்னி சிதறும் அந்த கொடிய குரூரத்தை ஒருநாளும் நீங்கள் கண்ணாடியில் பார்த்திருக்க மாட்டீர்கள்.
உங்கள் முகக்கண்ணாடியில் வழுக்கி விழும் மழைக்காலத்தின் வெயில் பற்றிக்கூட உங்களுக்கு தெரியாது.
சற்று தொலைவில் கோடரியோடு நிற்கும் அந்த பிரெஞ்ச் இளைஞனை பார்க்க பார்க்க ஆத்திரம் வருகிறது. உங்கள் வெறியை அவனுக்குள்ளும் பிரயோஹித்து கோடரியோடு இங்கே நிற்க வைத்திருக்கிறீர்கள்.
அவனோடு நான் கடலோரம் சிறிது நாட்கள் சல்லாபித்து இருக்கிறேன். மோவைக் போதையில் அவன் மூக்கு விடைக்கும் போது என்னை அடைந்து இருப்பான்... அல்லது நான் அவனை...
அவனுக்கு அருகில் இருக்கும் கொம்பலஸ் ஒரு நூல் வியாபாரி. அவன் மனைவி ஜாந்திசோனா வட்டி வியாபாரி. நகவெட்டியை கொண்டு குழந்தையின் சொத்தை பற்களை பிடுங்குவதில் கை தேர்ந்தவள்.
நான் அவளிடம் ஒருநாள் கிழக்கின் திசை எது என்று கேட்டேன். அதற்கு அவள் யோசித்தாள். அன்றிலிருந்து அவளுக்கு பேய் பிடித்தது என்று ஊரார் நம்பினர். நான் என்ன செய்ய?
உங்கள் தேடல் தீவிரமாக இருக்கிறது. கிம்னோ தன் மூக்கால் மோப்பம் கொள்ள ஆரம்பித்து விட்டான். புதர் மண் அவன் கண்களை கோதி விட்டு பறக்கிறது. அவன் பிடரி சிவப்பு நிறம்.
ஐயா...
நான் குற்றம் செய்தது உண்மைதான். அந்த குற்றம் ஒரு வாத்தை உணவுக்கு கொல்வது போல் நிகழ்ந்து முடிந்த ஒன்றுதான்.
என் கனவில் வந்த அந்த திரைப்பட இயக்குனரை கொலை செய்து விட்டேன். அது கனவிலேயே நிகழ்ந்து முடிந்து விட்ட சம்பவம்.
அவன் உங்கள் வாழ்க்கையை திருடி இருக்கிறான். உங்களின் திசையை திருப்பி தன்னை மட்டும் வளமாக்கி கொண்டவன். கொன்றது தவறா?
கனவில் ஒருவனை நான் கொன்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க தியிப்பினோ மோனசா என்ற டச்சு நாட்டு பெண்ணை நீங்கள் கடத்தி வந்து உங்களோடு வைத்திருப்பதும் அதற்காக தூதரக அதிகாரிகளின் மனைவிமார்களை பலாத்காரம் செய்ததும் எனக்கு தெரியாதா என்ன?
நானும் இப்போது உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் வெறி பிடித்த தேடல் ஒழுங்கற்று சுயம் இழந்து இருக்கும்போது நான் சற்றே ஆசுவாசமாகி கொள்கிறேன்.
உங்கள் சோம்பலை கலைக்கும்படி துயண்டர் திமிங்கலத்தின் பாலை காய்ச்சி பருக கொடுக்கிறான். அவன் ஜெர்மனியில் இருந்து கழுகின் மீது பறந்து வந்தவன் என்று நீங்கள் நம்பிய காலத்தில் அப்படி இல்லை அவன் பொன்னமராவதியில் கல்பனா தியேட்டரில் இண்டெர்வெல் நேரத்தில் முறுக்கு விற்பவன் மட்டுமே என்று சொன்னேன்.
அவன் ஆண்குறி மிகவும் நீளம் மிகவும் தடியாகவும் இருக்கும் என்று வித்யா ஊரெல்லாம் சொன்னபோது உங்கள் ஊர் பெண்கள் அவனை தேடி பிடித்து வெட்டிவேர் எலுமிச்சை நன்னாரி ஊற வைத்த சூடான நீரில் குளுப்பாட்டியதும் அவன் நிறம் வெளுத்து போனான். அவன் நாக்கு சுளுக்கி பாஷை இடறியது. எப்படியோ ஜெர்மன் மொழி அங்கே ஒட்டி கொண்டது. இன்றோ அவன் உங்களில் ஒருவன் ஆகி விட்டான்.
நான் மட்டும் பாவியாகி விட்டேன்.
என்னை மன்னிக்க கூடாதா?
ஒரு கொலைதான் மனிதத்தின் அபத்தமான எதிர்காலத்தை முடித்து வைத்திருக்கிறது என்பதற்காகவும் நீங்கள் எனக்கு கருணை காட்டலாம்.
தோன்ஷிய நாட்டு இளவரசன் பதுப்பிர்நோ என்னிடம் உங்கள் நாட்டு முதலிரவு எப்படி இருக்கும் என்று கேட்டான். நான் விளக்கி சொன்னேன்.
கடும் இருட்டில், ஒரு சிறு அறையில், சிறு கட்டிலில் அல்லது தரையில் ஏராளமான பண்டங்களுடன் மூச்சு முட்டும் வாசனையில் வாடிய பூக்களுடன்....
பதுப்பிர்நோ என்னிடம் கேட்டான்... நீங்கள் என்ன மூட்டைப்பூச்சிகளா?
பிற்காலத்தில் நான் அவன் நாட்டில் இருந்த ஒரு நங்கையை மணமுடித்து கொண்டேன். கியசிக்கினோ அவள் பெயர். எங்களுக்கு முதலிரவு வேறு மாதிரி அந்த நாட்டு வழக்கப்படி நிகழ்ந்தது. அதாவது,
பட்டப்பகலில்... வெட்ட வெளியில்... தங்கத்தால் ஆன மேடையில்...
ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்து கொண்டாடி மகிழ அது நடந்தது.
அந்த தேசத்தின் குதிரைகள் பேசும். ஒருநாள் ஒரு குதிரை இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டது. "எனக்கு நான் யார்"?
இந்த கேள்வியோடு நான் கடற்பயணங்கள் மேற்கொண்டேன். என் அன்பிற்குரிய கியசிக்கினோவை
மீத்தாகு வளைகுடாவில் ஒரு கடல் நோயில் பறி கொடுத்தேன். அவள் நீல நிறமான உடலை கடலில் எறிந்தனர்.
எங்கெங்கோ சுற்றினேன். இந்த நாட்டுக்கு வந்தேன். இங்கும் எங்கெங்கோ சுற்றி அலைந்தேன்.
ஒருநாள் நந்தியாதோப்பு குஞ்சுமாலிக் என்னோடு பேசிக்கொண்டு இருந்தான். சைக்கிளில் டீ கேன் வைத்து ஊரெல்லாம் விற்பனை செய்வது அவன் தொழில். சைக்கிளை பிடித்தபடி அவனுக்கு உறுதுணையாக இருப்பவன் ஆசியாபட்டியை சேர்ந்த கிஸ்விலா தான்ட்ரிக்.
நாங்கள் பசியில் பிறக்கிறோம். பசியில் வாழ்ந்து மடிகிறோம். எங்கள் மனதில் சோற்று பருக்கைகள் புதைந்து வெடித்து சிதறும்போது நாங்கள் சாகிறோம். எங்கள் கனவை அந்த இயக்குனன் விற்று விற்று வயிறு வளர்க்கிறான். கடற்பிரபுவே... அவனை நீங்கள் சம்ஹாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ஆம்...
நான் அந்த வேண்டுகோளுக்கும் அன்புக்கும் ஒரு குவளை சீன தேநீருக்கும் இணங்கி கனவில் வந்த இயக்குநனை கொன்று உங்களை அவனிடமிருந்து விடுவித்தேன்.
நீங்களோ என்னை கொலை செய்ய பகலை வாளாக்கி இரவை ஈட்டியாக்கி இங்கே வந்து நிற்கிறீர்கள்.
உங்கள் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிடும் பணியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தங்கள் வாசலில் "நான் எனக்கு யார்" என்று எழுதி வருவதுதான் உங்கள் சிக்கலுக்கு கோபத்துக்கு இன்னொரு காரணம் என்றும் எனக்கு தெரியும்.
சரி.
நாம் பரஸ்பரம் பொருதுவோம்.
===================================