பாசம்

பாசம்

அந்த குப்பைத்தொட்டிக்குள் விழப்போகும் இலைகளுக்காக நான்கைந்து நாய்கள் காத்திருந்தன. ஒன்றை ஒன்று நம்பிக்கையில்லாமல் யார் முதலில் பாய்வது என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தன. இலைகள் கட்டாயம் விழும் என்பது அவைகளின் அனுபவம்
அதே நேரத்தில் அவைகளை பங்கு பிரிப்பதில் வரும் பிரச்சினையே அதற்கு வாழ்க்கை பிரச்சினை ஆகி விடுகிறது. நல்ல பலசாலியாகவோ, அல்லது கொஞ்சம் இளமையாக இருக்கும் நாய்களுக்கு பங்கு அதிகமாக கிடைத்து விடுகிறது. நோஞ்சானாகவோ, வயது அதிகமானதாகவோ இருப்பவைகளுக்கு இதில் பங்கு கிடைப்பது என்பது பிரம்ம பிரயத்தனம்.
இருந்தாலும் அந்த தெருவில் இத்தனை நாய்களும் கிடைக்கும், இல்லை கிடைக்காது என்று எண்ணமில்லாமல் இலைகள் விழும்போது பார்த்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பிலேதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.
இப்பொழுது உள்ளிருந்து ஆட்கள் எழும் சத்தம் கேட்கிறது, இவைகள் தயாராகி விட்டன.எப்படியும் கொத்தாக கொண்டு வந்து கொட்டுவார்கள். சிக்கும் இலையை கவ்வுவது
அதனதன் சாமார்த்தியம். கவ்வி செல்ல விரும்பும் நாய்கள் கொஞ்சம் வலிமை குறைந்ததாய்,
அல்லது வயதானதாக இருக்க வாய்ப்பு உண்டு. காரணம் குப்பைத்தொட்டிக்குள் இறங்கி மற்ற நாய்களை விரட்டும் வல்லமை, வலிமையான நாய்களுக்கு மட்டுமே உண்டு.
இலைகள் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விட்டார்கள். அடுத்த நிமிடம் அங்கு ஒரு பெரும் போரே ஏற்பட்டு விட்டது. அந்த தெருவில் அப்பொழுது நடந்து கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள், “சே இந்த நாய் தொல்லை தாங்க முடியல”கார்ப்பரேசங்காரன் கிட்ட சொல்லி பிடிச்சுகிட்டு போக சொல்லணும்”.சொல்லிக்கொண்டே அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு சென்று விடுவார்கள். அவ்வளவுதான்,
அதற்கு பிறகு மீண்டும் இந்த நாய் பிரச்சினை என்பது அவர்கள் இந்த தெருவுக்குள் வரும்போது இவர்கள் வாயில் மீண்டும் இதே வார்த்தைகளாக வெளிப்படும்.
அந்த போரை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த பெண் நாய் ஒன்று “இவர்கள் சண்டையில் நமக்கு ஏதாவது இலை ஒன்று கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் காத்திருந்தது. காலையில் இருந்து எங்கும் உணவு கிடைக்காமல் பசியினால் அதன் உடல் சோர்ந்து இருந்தது. நான்கைந்து தெருக்கள் அலைந்து திரிந்து, இந்த இடம் வந்ததும்,ஏதாவது கிடைக்கும் என்று இந்த இலைகளுக்காக காத்திருந்த,இடைப்பட்ட நேரத்தில் அந்த பாதையின் ஒரத்தில் சிறு சிறு குழிகளில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்து வயிற்று பசியை போக்கி கொண்டது.காத்திருக்கும்போதே அது நம்பிக்கையில்லாமல்தான் இருந்தது. அந்த இலைக்காக காத்திருந்த நாய்களிலே இது மட்டும்தான் நோஞ்சானாய் இருந்தது. இருந்தாலும் எப்படியும் தனக்கு என்று ஏதாவது கிடைக்கும் என்று எதிர் பார்த்தது.
இப்பொழுது இவைகளின் போரின் உக்கிரம் குறைந்திருந்தது. அந்த கூட்டத்துக்குள் அடிபட்டு கடிபட்டு வெளியேறிய நாய்கள் இயலாமையால் அந்த போரில் வெற்றி பெற்று தொட்டிக்குள் “வேகு வேகு” என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த நாய்களை பார்த்து ஊளையிட்டு கொண்டிருந்தன.தொட்டிக்குள் குதித்து வேகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஒன்றை ஒன்று பார்த்து உறுமிக்கொண்டே இலைகளை கலைத்து கிடைத்தவைகளை விழுங்கிக்கொண்டு இருந்தன.அவைகளின் வலிமையை கண்டு மற்ற நாய்கள் சோகமாய் இவைகளை பார்த்துக்கொண்டிருந்த போது !
இந்த பெண் நாய் மெல்ல மெல்ல தொட்டிக்கு அருகே சென்று தலையை மட்டும் தொட்டிக்குள் நீட்டியது. அவ்வளவுதான் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெரிய நாய் ஒன்று வேகமாக இதன் மீது பாய்ந்து வந்தது. சப்த நாடியும் ஒடுங்கி வெல வெலவென நடுங்கிய பெண் நாய்
அந்த இடத்தை விட்டு சற்று விலகி ஓடி விட்டது.
இருந்தாலும் அதன் வயிற்று பசி அந்த இட்த்தை விட்டு போக முடியாமல் செய்தது.
மீண்டும் வந்து அந்த தொட்டிக்குள் தலையை நுழைக்க முயற்சி செய்தது. பாய்ந்து வந்த அந்த வலிமையான நாய் ஒரு நிமிடம் இந்த நாயை பார்த்து ஒரு உறுமலுடன் நின்றது. இந்த பெண் நாயிற்கு உடல் நடுங்கினாலும், அதன் வயிற்றில் உண்டான பசி அதனுக்குள் மெல்லிய வன்முறையை உருவாக்கியது. இதுவும் இப்பொழுது மெல்ல உறும ஆரம்பித்தது. அந்த வலிமையான நாய் அதனை கண்டு கொள்ளாததது போல் சற்று திரும்பி மற்ற நாய்களை பார்த்து உறும ஆரம்பித்தது.
பெண் நாய் கொஞ்சம் தைரியமாய் தலையை கொஞ்சம் கஷ்டப்பட்டு உள்ளே நுழைத்து ஒரு இலையை கவ்வி விட்டது. அந்தோ பரிதாபம் மிகுந்த கஷ்டப்பட்டு இழுத்த அந்த இலையை சாப்பிட்ட புண்ணியவான் சுத்தமாக வழித்து சாப்பிட்டிருப்பான் போல. ஏமாற்றத்தால் இந்த நாய் மெல்ல வலிமையான நாயை பார்க்க அது இதனை கண்டு கொள்ளாமல் மற்ற நாய்களிடம் அவ்வப்போது உறுமி தனது வலிமையை காண்பித்து கொண்டிருந்தது.
பெண் நாய் கொஞ்சம் தைரியமடந்து தனது உடலை சற்று தூக்கி, தனது முன்னங் கால்களை தொட்டிக்குள் வைத்து மற்றொரு இலையை கவ்வி எடுத்தது.இப்பொழுது அந்த இலையில் இருந்த உணவு பதார்த்த்தை ருசிக்க ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக தன்னால் சாப்பிட முடியுமோ அவ்வளவு வேகமாக சாப்பிட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனது
உடலையும் இப்பொழுது தொட்டிக்குள் நுழைத்துக்கொண்டது.அதற்குள் இருந்த உணவு பண்டங்கள் இப்பொழுது வேக வேகமாக அதன் வயிற்றுக்குள் போக ஆரம்பித்தன.
ஆரம்பித்தில் உறுமி எதிர்ப்பை காண்பித்த அந்த வலிமையான நாய் இப்பொழுது இந்த பெண் நாய் முழு உடலையும் உள்ளே கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் மற்ற நாய்களை பார்த்து அவ்வப்பொழுது உறுமிக்கொண்டு தனது வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.அது இந்த பெண் நாய்க்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்திருக்க வேண்டும். அதனால் அந்த வலிமையான நாயின் மீதி இருந்த பயத்தை உதறி விட்டு கிடைத்த எல்லாவறையையும் விழுங்க ஆரம்பித்தது.
ஓரளவு வயிறு நிரம்பியும், அந்த இட்த்தில் இருந்த இலைகள் யாவும் பிரிக்கப்பட்டு காலியாகி விட்டதால் இந்த வலிமையான நாயின் பக்கத்தில் இருந்து விலகி அடுத்த நாயின் பக்கம் போக முயற்சி செய்தது. அவ்வளவுதான் அந்த பக்கமிருந்த நாய் பாய்ந்து இதனை கடிக்க வந்தது.பெண் நாய் அவ்வளவுதான் “தன் உயிர்” இந்த நாயால் போகப்போகிறது என்று அப்படியே மடங்கி அந்த இலைக்குள்ளே உட்கார்ந்தது,அப்பொழுது முதலில் அதனை உறுமி
எதிர்ப்பை காண்பித்தாலும், பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டிருந்த அந்த வலிமையான நாய்
பாய்ந்து வந்து இதன் குறுக்காக நின்று கொண்டு விட்ட்து.இந்த பெண் நாயை கடித்து குதற வந்த நாய் இந்த வலிமையான நாய் பாதுகாப்பாய் நிற்பதை பார்த்த்தும் அப்படியே பின் வாங்கி விட்டது.
பெண் நாயிற்கு அதற்கு மேல சாப்பிடும் ஆசையே போய் விட்டது.இருந்தாலும், அந்த வலிமையான நாய் தனக்கு பாதுக்காப்புக்காக நின்று கொண்டிருந்ததால், கொஞ்சம் நேரம் அந்த பக்கத்தில் இருந்த இலைகளை கலைத்து பார்த்து சாப்பிட்டது.
ஓரளவு பசி தீர்ந்து விட்டதால், இனி அடுத்த இடம் போகலாம் என்று முடிவு செய்த பெண் நாய் அந்த வலிமையான நாயை நன்றியுடன் பார்த்து விட்டு தொட்டிக்கு வெளியே குதித்து மெல்ல நடந்து சென்றது.
“வலிமையான நாய்” போய்க்கொண்டிருந்த அந்த பெண் நாயை பார்த்து
கொண்டிருந்தது.

தான் அதன் மடியில் பால் சுவைத்து படுத்து கிடந்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Apr-21, 3:44 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : paasam
பார்வை : 386

மேலே